சாட்சிய சட்டம் பிரிவு 114 - உ.வி.மு.ச. கட்டளை 20 விதி 12


முதன்மை சார்பு நீதிமன்றம்¸ மதுரை
முன்னிலை திரு.பி.சரவணன்¸ பி.எல்
முதன்மை சார்பு நீதிபதி¸ மதுரை.
2015ம் ஆண்டு சனவரி திங்கள் ஐந்தாம் நாள் திங்கட்கிழமை.
அசல் வழக்கு எண்.69/2005

ஆர்.வேலுமணி. … வாதி.
/எதிர்/
1. டி.வரதராஜன் (இறந்துவிட்டார்)
2. வி.வேலுமணி.
3. வி.சுந்தர்
4. வி.சுமித்ரா பிரதிவாதிகள்

(3 மற்றும் 4ம் பிரதிவாதிகள் வ..எண். 1057/2007ல் 18.02.2009 நாளிட்ட உத்தரவின்படி சேர்க்கப்பட்டு வ..எண்.849/2009ல் 15.03.2010 நாளிட்ட உத்தரவின்படி பிராது திருத்தப்பட்டுள்ளது)

() தாவா சொத்தை எவ்வித தடையும் இன்றி பிரதிவாதிகள் வாதியிடம் ஒப்படைக்குமாறு சுவாதீனப் பரிகாரம் வழங்கிடக் கோரியும்¸ () தாவா சொத்தில் உள்ள மின் மோட்டார் பம்ப் செட்டை பிரதிவாதிகளோ அவர்களுடைய ஆட்களோ பயன்படுத்தக்கூடாது என ஒரு நிரந்தர தடை உறுத்துக் கட்டளை வழங்கிடக் கோரியும்¸ () 18.02.2002 முதல் 16.02.2005 வரை தாவா சொத்தை பிரதிவாதிகள் சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்தி வந்த வகையில் வாதிக்குப் பிரதிவாதிகள் ரூ.36¸000/- நஷ்ட ஈடாக வழங்கிடுமாறு உத்தரவிடக் கோரியும்¸ () வழக்கு தாக்கலான நாள் முதல் சொத்தின் சுவாதீனத்தை வாதி வசம் பிரதிவாதிகள் ஒப்படைக்கும் நாள் வரை எதிர்கால நஷ்ட ஈடை வாதிக்கு பிரதிவாதிகள் செலுத்துமாறு உத்தரவிடக் கோரியும்¸ வழக்கு செலவு தொகை கோரியும் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு.

2 . வாதி தாக்கல் செய்துள்ள திருத்தப்பட்ட வழக்குரைச் சுருக்கம் பின்வருமாறு:-
தாவா சொத்தை வாதி கடந்த 27.07.1994 அன்று 2ம் பிரதிவாதியிடம் இருந்து கிரயம் பெற்றார். மேற்படி கிரயமானது தாவா சொத்து¸ அதில் உள்ள ஆழ் துளை கிணறு¸ மின் மோட்டார் பம்ப் செட் மற்றும் இரு பக்கம் அமைந்துள்ள சுற்றுச்சுவர் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். ஆனால் கிரயப் பத்திரத்தில் சொத்தின் மதிப்பை குறைத்து காட்டுவதற்காக காலி இடம் மட்டும் காண்பிக்கப்பட்டு கிரயம் வாங்கப்பட்டது. தாவா சொத்துக்கு கிழக்குப் பக்கத்தில் 1ம் பிரதிவாதிக்கு பாத்தியமான வேறு சில சொத்துக்களும் அமைந்துள்ளன. மேலும் தாவா சொத்தின் கிழக்கு பக்கத்தில் 1ம் பிரதிவாதி குடியிருந்து வருகிறார். 2ம் பிரதிவாதி 1ம் பிரதிவாதியின் மனைவி ஆவார். தாவா சொத்தைக் கிரயம் பெற்ற போது¸ 1ம் பிரதிவாதி அவருடைய சொத்தில் தனியாக தண்ணீர் வசதி செய்துகொள்ளும்வரை தாவா சொத்தில் உள்ள மின் மோட்டார் மூலமாக தண்ணீர் எடுத்துக்கொள்ளவும்¸ 1ம் பிரதிவாதி தனிப்பட்ட முறையில் அவருடைய சொத்தில் நீர் வசதி செய்து கொள்ள 7 மாத கால அவகாசம் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் தாவா சொத்தை அனுபவம் செய்து கொள்ள பிரதிவாதிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. மேலும் 7 மாத காலம் முடிந்த பின்னர் சொத்தின் சுவாதீனத்தை வாதியின் கணவர் 1ம் பிரதிவாதியிடம் கேட்டபோது தாவா சொத்தை மீண்டும் கிரயம் பெற விரும்புவதாக 1ம் பிரதிவாதி தெரிவித்தார். ஆனால் அதற்கு வாதியோ¸ அவருடைய கணவரோ விருப்பம் தெரிவிக்கவில்லை. எனவே 1ம் பிரதிவாதி தாவா சொத்தில் தான் வாடகைதார் என்ற அடிப்படையில் அனுபவம் செய்து வருவதாகவும்¸ அவரை சொத்தில் இருந்து வாதியின் கணவர் சட்டத்திற்கு புறம்பாக வெளியேற்றக்கூடாது என
நிரந்தர உறுத்துக் கட்டளை பிறப்பிக்க கோரி அசல் வழக்கு எண்.585/1997 என்ற வழக்கை பொய்யான அம்சங்களுடன் தாக்கல் செய்தார். அதில் வாதியின் கணவர் வ..எண்.557/1997ஐத் தாக்கல் செய்து மேற்படி வழக்கில் உள்ள ஆவணங்களில் வாடகை இரசீதுகள் மோசடியாக தயாரிக்கப்பட்டு 1ம் பிரதிவாதியால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும்¸ அந்த ஆவணங்களில் உள்ள கையொப்பங்களை ஆராய்வதற்காக தடய அறிவியல் துறைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு வாதியின் கணவரால் கோரப்பட்டுள்ளது. மேற்படி ஆவணங்களில் உள்ள கையொப்பங்கள் அனைத்தும் மோசடியாக போடப்பட்டவை என்று தடய அறிவியல் துறையில் இருந்து அறிக்கை பெறப்பட்டது. அதன் பிறகு 1ம் பிரதிவாதி மேற்படி வழக்கை மேற்கொண்டு நடத்தாமல் விட்டுவிட்டார். ஆகவே அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அதன் பிறகு தாவா சொத்தின் சுவாதீனத்தை ஒப்படைக்கும்படி 1ம் பிரதிவாதியைக் கேட்டபோது¸ 1ம் பிரதிவாதி மறுத்துவிட்டார். இது சம்பந்தமாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் காவல் துறையினர் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. தாவா சொத்தை வணிக நோக்கத்திற்காக 1ம் பிரதிவாதி பயன்படுத்தி வருகிறார். அதற்கு மாத வருமானம் ரூ.1¸000/- வரை கொடுக்கலாம். மேலும் 1ம் பிரதிவாதி சட்டத்திற்கு புறம்பாக தாவா சொத்தில் அனுபவம் செய்து வருகிறார். வழக்கு நிலுவையில் இருக்கும்போது 1ம் பிரதிவாதி காலமாகிவிட்டார். ஆகவே அவருடைய வாரிசுதார்கள் 3 மற்றும் 4 பிரதிவாதிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

3 . 1 மற்றும் 2ம் பிரதிவாதிகள் தாக்கல் செய்துள்ள எதிர் வழக்குரைச் சுருக்கம் பின்வருமாறு-
தாவா சொத்தை 2ம் பிரதிவாதியிடம் இருந்து வாதியின் கணவர் கிரயம் பெற்றது உண்மை. அவ்வாறு கிரயம் பெறும்போது¸ தாவா சொத்தில் மின் மோட்டார்¸ ஆழ்துளை கிணறு¸ மதில்கள் இருந்ததாக வாதி குறிப்பிடுவதை பிரதிவாதிகள் மறுக்கிறார்கள். தாவா சொத்தை வாதியின் கணவரின் பணத்தை வைத்து வாதி கிரயம் பெற்றார். தாவா சொத்தை கிரயம் பெற்ற பிறகு வாதியும் அவருடைய கணவரும் சேர்ந்து 1ம் பிரதிவாதியை தாவா சொத்தில் வாடகைதாராக அமர்த்தினார்கள். தாவா சொத்தில் 1ம் பிரதிவாதி இரும்பு கம்பி சம்பந்தப்பட்ட பொருட்களை வைக்கும் கிட்டங்கி தொழிலை 01.08.1995 முதல் செய்து வந்தார். அதற்காக முன்பணமாக ரூ.3¸500/-1ம் பிரதிவாதி வாதிக்கு கொடுத்துள்ளார். ஆனால் தாவா சொத்தில் இருந்து 1ம் பிரதிவாதியை சட்டத்திற்கு புறம்பாக வாதியின் கணவர் வெளியேற்ற முயற்சித்த காரணத்தால் 1ம் பிரதிவாதி அசல் வழக்கு எண்.585/1997ஐ தாக்கல் செய்தார். அதில் 1ம் பிரதிவாதியை சட்டத்திற்கு புறம்பாக தாவா சொத்தில் இருந்து வெளியேற்றக்கூடாது என்று இடைக்கால தடையுத்தரவும் பெற்றுள்ளார். 1ம் பிரதிவாதி¸ வாதியின் அனுமதியின் பேரிலேயே தாவா சொத்தில் ஆழ்துளை கிணறு போட்டு அதை அனுபவம் செய்து வருகிறார். அத்துடன் 1ம் பிரதிவாதி செய்து வரும் தொழிலுக்காக தாவா சொத்தின் இரு பக்கங்களிலும் 1ம் பிரதிவாதி மதில்சுவர்கள் கட்டியுள்ளார். அசல் வழக்கு எண்.585/1997ல் வாடகை பணத்தை வாதியும் அவரது கணவரும் பெற்றுக்கொண்டதால் 1ம் பிரதிவாதிக்கும் வாதிக்கும் இடையில் வாடகைதார்-சொத்தின் உரிமையாளர் என்ற உறவு முறை உள்ளது. ஆகவே வழக்கானது வாடகை கட்டுப்பாட்டு நீதிமன்றத்தில் தான் தாக்கல் செய்யப்பட வேண்டும். இந்த அசல் வழக்கு நிலைக்கத்தக்கதல்ல. ஆகவே வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.

4. வழக்குரை¸ எதிர்வழக்குரையை பரிசீலனை செய்த பின்னர் இந்நீதிமன்றம் கீழ்;க்கண்ட எழுவினாக்களை வனைந்துள்ளது-
1) தாவா சொத்தைப் பொறுத்து பிரதிவாதிகளுக்கு எதிராக வாதி கோரும் சுவாதீனப் பரிகாரம் கிடைக்கக்கூடியதா?
2) தாவா சொத்தில் உள்ள மின்மோட்டாரை பிரதிவாதிகள் பயன்படுத்தக்கூடாது என வாதி கோரும் தடையுத்தரவு பரிகாரம் கிடைக்கக்கூடியதா?
3) 18.02.2002 முதல் 16.02.2005 வரை தாவா சொத்தை பிரதிவாதிகள் சட்டத்திற்குப் புறம்பாக பயன்படுத்தியதற்காக வாதி கோரும் கடந்த கால இழப்பீடு ரூ.36¸000/- வாதிக்கு கிடைக்கக்கூடியதா?
4) தாவா சொத்தினை சுவாதீனம் ஒப்படைக்கும் வரை பிரதிவாதிகளிடம் இருந்து எதிர்கால நஷ்ட கிடைக்கக்கூடியதா?
5) தாவா சொத்தில் 1ம் பிரதிவாதி 01.08.1995 முதல் குடியிருப்பு இல்லா உபயோகத்திற்காக வாடகைதாராக இருந்து வந்துள்ளதார் என்று சொல்வது சரியா?
6) வாதிகளுக்கு எதிராக பிரதிவாதிகள் மு..எண்.585/1997 வழக்கு தாக்கல் செய்து தடையுத்தரவு பெற்றிருப்பதால் வாதி வாடகை கட்டுப்பாட்டு நீதிமன்றத்தில் வழக்கு
தாக்கல் செய்யாமல் உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் வழக்கு சட்டப்படி நிலைக்கத்தக்கதா?
7) வாதிக்கு கிடைக்கக்கூடிய வேறு பரிகாரங்கள் யாது?

5. இந்த வழக்கில் வாதி தரப்பில் வா.சா.1 விசாரிக்கப்பட்டு¸ வா.சா..1 முதல் வா.சா..9 வரையிலான ஆவணங்கள் குறியிடப்பட்டுள்ளன. பிரதிவாதிகள் தரப்பில் சாட்சி யாரும் விசாரிக்கப்படவில்லை சான்றாவணம் எதுவும் குறியிடப்படவில்லை.

6.எழுவினா 5 மற்றும் 6-
வாதியின் வழக்கு யாதெனில்¸ தாவா சொத்தை வாதி வா.சா..1ன்படி 27.07.1994 அன்று 2ம் பிரதிவாதியிடம் இருந்து கிரயம் பெற்றார் என்பதாகும். பிரதிவாதிகளின் வழக்கு யாதெனில்¸ வாதியின் கணவரின் பணத்தை வைத்து தான் வாதி தாவா சொத்தை 2ம் பிரதிவாதியிடம் இருந்து கிரயம் பெற்றார் என்பதாகும். மற்றபடி கிரயத்தை 1¸2 பிரதிவாதிகள் குறிப்பாக எதுவும் மறுக்கவில்லை. ஆகவே வா.சா..1ன்படி தாவா சொத்தை வாதி கிரயம் பெற்றார் என்பது உண்மைதான். தாவா சொத்தை வாதி கிரயம் பெறும்போது அதில் ஏற்கனவே மின் மோட்டார் பம்ப் செட்¸ ஆழ்துளை கிணறு¸ இரு பக்கமும் மதில்சுவர்கள் இருந்ததாகவும்¸ அவற்றையும் சேர்த்துதான் கிரயம் பெற்றதாகவும்¸ ஆனால் கிரயத்தின் மதிப்பு அதிகமாகிவிடும் என்பதால் அவற்றைக் காண்பிக்கவில்லை என்றும் வாதி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வாதி வா.சா.1 ஆக விசாரிக்கப்படவில்லை. மாறாக¸ வாதியின் கணவர் தான் வா.சா.1 ஆக விசாரிக்கப்பட்டுள்ளார். பிரதிவாதி தரப்பில் ஆஜரான கற்றறிந்த வழக்கறிஞர் தன் வாதத்தின்போது வாதி நீதிமன்றத்தில் ஆஜராகி அவரது வழக்கை எடுத்துரைக்காத நிலையில்¸ சாட்சிய சட்டம் பிரிவு 114ன் கீழ்; எதிர்மறையான அனுமானங்கள் அனைத்தும் வாதிக்கு எதிராக கொடுக்க வேண்டும் என்று வாதிட்டு¸ அவருடைய வாதத்திற்கு அனுசரணையாக 2014(1) ஆறுN (iஎடை) 28 முயடயைஅஅயட – (னநைன) யனெ ழவாநசள /எள/ hnniயிpய புழரனெநச (னநஉநயளநன) யனெ ழவாநச என்ற வழக்கில் வழங்கப்பட்ட முன்தீர்ப்புரையைச் சுட்டிக்காட்டி வாதிட்டார். வாதியின் கணவர் தான் இந்த வழக்கில் வா.சா.1 ஆக விசாரிக்கப்பட்டுள்ளார். அவர் இந்த வழக்கைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று குறிப்பிடவில்லை. 1ம் பிரதிவாதி தாக்கல் செய்த அசல் வழக்கு எண்.585/1997 வாதியின் கணவர் மீது தான் தாக்கல் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் பிரதிவாதிகள் தாக்கல் செய்த எதிர்வழக்குரையில் வாதியின் கணவரின் பணத்தை வைத்து தான் தாவா சொத்து வாதியின் பெயரில் கிரயம் வாங்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. ஆகவே வாதியின் கணவருக்கு தாவா சொத்து பற்றிய விவரமும்¸ வழக்கு தாக்கல் செய்த தேதியில் இருந்து இன்றுவரை உள்ள நிலவரமும் நன்கு அறிந்தவர் என்றும்¸ மனைவியின் சார்பாக கணவர் சாட்சியம் அளிக்க உரிமை உள்ளது. ஆகவே பிரதிவாதிகள் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்ட முன்தீர்ப்புரை இந்த வழக்குக்கு பொருந்தாது என்று இந்நீதிமன்றம் விடை காண்கிறது.

7. பிரதிவாதிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட எதிர்வழக்குரையில் வாதி கிரயம் பெற்ற பிறகு 01.08.1995 முதல் 1ம் பிரதிவாதி தாவா சொத்தில் வாடகைதாராக குடியிருந்து வருவதாகவும்¸ மேலும் தாவா சொத்தில் 1ம் பிரதிவாதி அவருடைய வியாபாரத்திற்காக இரு புறமும் சுவர் எழுப்பி¸ மின் இணைப்பு பெற்றும்¸ ஆழ்துளை கிணறு அமைத்தும் தாவா சொத்தைப் பயன்படுத்தி வருவதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் அதனை நிரூபிக்கும் வகையில் இந்த வழக்கில் எவ்வித சாட்சியமும்¸ சான்றாவணமும் பிரதிவாதிகள் தரப்பில் முன்வைக்கப்படவில்லை. அசல் வழக்கு எண்.585/1997ல் தாக்கல் செய்ப்பட்ட வழக்குரையின் நகல் வா.சா..2 ஆகவும்¸ அவ்வழக்கில் பிரதிவாதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட எதிர்வழக்குரையின் நகல் வா.சா..3 ஆகவும்¸ அசல் வழக்கு எண்.585/1997ல் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்புரையின் நகல் வா.சா..8 ஆகவும்¸ மேற்படி வழக்கில் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பாணையின் நகல் வா.சா..9 ஆகவும் குறியீடு செய்யப்பட்டுள்ளன. வா.சா..2ல் அந்த வழக்கின் வாதி¸ தான் வாடகைதாராக தாவா சொத்தில் குடியிருப்பதாக தெரிவித்து ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளார். ஆனால் அந்த வழக்கானது முழுமையான விசாரணைக்கு உட்படுத்தப்படாமல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டள்ளது. எனவே அசல் வழக்கு எண்.585/1997ல் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பு முன்தீர்ப்பு தடையாக அமையாது. தற்போதைய வழக்கில் தாவா சொத்தில் 1ம் பிரதிவாதி வாடகைதாராக இருந்து வருகிறார் என்பதை எடுத்துரைக்க வேண்டிய கடமை 1ம் பிரதிவாதியைச் சாரும். ஆனால் அவ்வாறு நிரூபிக்க பிரதிவாதிகள் தரப்பில் எவ்வித சாட்சியங்களும் சான்றாவணங்களும் முன்வைக்கப்படவில்லை.

8. வா.சா..4 முதல் வா.சா..7 வரையிலான ஆவணங்கள் அனைத்தும் தாவா சொத்தில் 1ம் பிரதிவாதி பெயரில் மின் இணைப்பு பெற்றுக்கொண்டது தொடர்புடைய ஆவணங்கள். மேற்படி ஆவணங்களைப் பார்க்கும்போது¸ தாவா சொத்தை வாதி கிரயம் பெறுவதற்கு முன்பாகவே 1ம் பிரதிவாதி தாவா சொத்துக்கு மின் இணைப்பு பெறுவதற்கு நடவடிக்கை எடுத்து மின் இணைப்பு பெற்றுள்ள விவரம் தெரியவருகிறது. ஆகவே வாடகைதார் என்ற அடிப்படையில் தாவா சொத்தில் மின் இணைப்பு பெற்றதாகவும்¸ ஆழ்துளை கிணறு அமைத்ததாகவும்¸ இரு புறமும் சுவர் அமைத்தாகவும் 1ம் பிரதிவாதி தரப்பில் எடுத்துரைக்கப்பட்ட வாதத்தை இந்நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் வாடகைதார் என்ற அடிப்படையில் தாவா சொத்தை 1ம் பிரதிவாதி அனுபவம் செய்து வருவதாக குறிப்பிடுவதையும் 1ம் பிரதிவாதி தரப்பில் தகுந்த முறையில் நிரூபிக்கவில்லை. ஆகவே 1ம் பிரதிவாதி தாவா சொத்தை வாடகைதாராக அனுபவம் செய்து வந்து வாதியின் அனுமதியின் பேரில் தாவா சொத்தில் மின் இணைப்பு பெற்று¸ ஆழ்துளை கிணறு தோண்டி¸ மதில்சுவர்கள் அமைத்துக்கொண்டதாக 1ம் பிரதிவாதி தரப்பில் எடுத்துரைக்கப்பட்ட வாதத்தை இந்நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.

9. பிரதிவாதிகள் தரப்பில் ஆஜரான கற்றறிந்த வழக்கறிஞர் தன் வாதுரையின்போது¸ 1ம் பிரதிவாதிக்கும் வாதிக்கும் இடையில் வாடகைதார் மற்றும் நிலச்சுவான்தார் என்ற அடிப்படையில் உறவு முறை உள்ளது என்றும்¸ அதற்காக ஒப்பந்தம் ஏற்பட்டது என்றும்¸ வாடகை ஒப்பந்தம் அடிப்படையில் வாடகை பணம் 1ம் பிரதிவாதியால் வாதிக்கு அனுப்பப்பட்டதாகவும்¸ அதற்கு இரசீதை வாதியின் கணவர் கொடுத்ததாகவும்¸ அது சம்பந்தமாக வா.சா.1 தன் சாட்சியத்தில் ஒப்புக்கொண்டுள்ளார் என்றும்¸ ஆகவே வாதி வாடகைக் கட்டுப்பாட்டு நீதிமன்றத்தில் தான் வழக்கு தாக்கல் செய்து பரிகாரம் தேடிக்கொள்ள வேண்டும் என்றும்¸ இந்த அசல் வழக்கு நிலைக்கத்தக்கதல்ல என்றும் வாதிட்டார். வா.சா.1ன் குறுக்குவிசாரணை சாட்சியத்தின்போது¸ அவரிடம் காட்டப்படும் ஆவணத்தில் உள்ள கையொப்பம் அவருடையது என்று கூறியுள்ளார். ஆனால் வா.சா.1 தன்னுடைய சாட்சியத்தில் அந்த ஆவணம் இரசீதாக கொடுக்கப்பட்ட ஆவணம் அல்ல என்று கூறியுள்ளார். வாடகைதார் என்ற உறவு முறை இருந்ததை வாதி குறிப்பாக மறுத்த நிலையில்¸ அதை நிரூபிக்க வேண்டிய கடமை 1ம் பிரதிவாதியைச் சாரும். இந்நீதிமன்றம் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல்¸ 1ம் பிரதிவாதி தாவா சொத்தை வாடகைதார் என்ற முறையில் அனுபவம் செய்து வந்தார் என்பது நிரூபிக்கப்படவில்லை. ஆகவே தாவா சொத்தை பொறுத்து வாதிக்கும் 1ம் பிரதிவாதிக்கும் இடையில் நிலச்சுவான்தார்-வாடகைதார் என்ற உறவு முறை இருந்தது என்று குறிப்பிடுவதை இந்நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. 1ம் பிரதிவாதி காலமான பிறகும் அவருடைய வாரிசுதார்களுக்கும் வாதிக்கும் இடையில் மேற்படி உறவு முறை தொடர்ந்து இருந்தது என்பதையும் பிரதிவாதிகள் தரப்பில் நிரூபிக்கப்படவில்லை. ஆகவே வாதிக்கும் 1ம் பிரதிவாதிக்கும்¸ 1ம் பிரதிவாதிக்குப் பிறகு அவருடைய வாரிசுதார்களுக்கும் வாதிக்கும் இடையில் வாடகைதார்-நிலச்சுவான்தார் என்ற உறவு முறை நிலவவில்லை என்றும்¸ ஆகவே சுவாதீனப் பரிகாரத்திற்காக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நிலைக்கத்தக்கதுதான் என்று இந்த எழுவினாக்களுக்கு விடை காணப்படுகிறது.

10 . எழுவினாக்கள் 1 முதல் 4 மற்றும் 7ரூ-
தாவா சொத்தைக் கிரயம் பெறும்போதே மின் மோட்டார்¸ ஆழ்துளை கிணறு¸ இருபுறமும் மதில்சுவர்கள் இருந்ததாகவும்¸ கிரய மதிப்பைக் குறைத்துக் காண்பிப்பதற்காக அவற்றைக் காட்டவில்லை என்றும்¸ வா.சா.1 தன் சாட்சியத்தில் தெரிவித்துள்ளார். வாதி தன்னுடைய வழக்குரையிலும் மேற்பபடி விவரத்தைக் குறிப்பிட்டுள்ளார். மின் இணைப்பானது வா.சா..4¸ வா.சா..5ன்படி வா.சா..1க்கு முன்பாகவே பெறப்பட்டுள்ளது என்று இந்நீதிமன்றம் விடை கண்டுள்ளது. வா.சா..1 கிரயத்திற்குப் பிறகு வாதியின் அனுமதியுடன் 1ம் பிரதிவாதி தாவா சொத்தில் மின் மோட்டார்¸ ஆழ்துளை கிணறு அமைத்ததாகவும்¸ இருபுறமும் மதில்சுவர்கள் கட்டியதாகவும் கூறுவதற்கு 1ம் பிரதிவாதி தரப்பில் ஆவணங்கள் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. மேற்படி மின் மோட்டார் பம்ப் செட்¸ ஆழ்துளை கிணறு¸ இருபுறமும் மதில்சுவர்கள் அமைப்பது குறித்து 1ம் பிரதிவாதிக்கும் வாதிக்கும் இடையில் எழுத்துப்பூர்வமான ஒப்பந்தம் எதுவும் ஏற்படவில்லை. அசல் வழக்கு எண்.585/1997ல் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பு முன்தீர்ப்பு தடையாக அமையவில்லை. தாவா சொத்தை கிரயம் பெற்ற நிலையில் அதில் உள்ள மின் மோட்டார் பம்ப் செட்¸ ஆழ்துளை கிணறு மற்றும் மதில்சுவர்கள் அனைத்தும் வாதிக்குத்தான் சொந்தம்.

11. வாதியின் வழக்கு யாதெனில்¸ வாதி தாவா சொத்தைக் கிரயம் பெறும்போது தாவா சொத்தில் கிழக்குப் பக்கத்தில் 1ம் பிரதிவாதி அவருடைய குடும்பத்தோடு வசித்து வந்ததாகவும்¸ தாவா சொத்தில் மின் இணைப்பு மற்றும் மின் மோட்டார் பம்ப் இருந்ததாகவும்¸ 1ம் பிரதிவாதி அவருடைய சொத்தில் தனியாக மின் மோட்டார் மற்றும் மின் இணைப்பு ஏற்படுத்திக்கொள்ள 7 மாத கால அவகாசம் கேட்டதாகவும்¸ அதுவரை 7மாத காலத்திற்கு தாவா சொத்தை அனுபவம் செய்ய அனுமதி கேட்டதாகவும்¸ அந்த அனுமதியின் பேரில் தான் 1ம் பிரதிவாதியும் அவருடைய குடும்பத்தினரும் தாவா சொத்தை அனுபவம் செய்து வந்ததாகவும் வாதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதிவாதிகள் தரப்பில் ஆஜரான கற்றறிந்த வழக்கறிஞர் தன் வாதுரையின்போது¸ சுவாதீனப் பரிகாரம் கோரி வழக்கு தாக்கல் செய்யும்போது¸ சுவாதீனப் பரிகாரத்திற்காக வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்ப வேண்டும் என குறிப்பிட்டு¸
2011 (1) ஆறுN (iஎடை) 1 – iனெரளவயn Pநவசழடநரஅ ஊழசிழசயவழைn டுiஅவைநன
/எள/ புநஅ Pயிநச ஊழஅpயலெ யனெ ழவாநசள என்ற முன்தீர்ப்புரைளசை; சுட்டிக் காட்டி வாதிட்டார். மேற்படி முன்தீர்ப்பு இந்த வழக்குக்கு பொருந்தாது¸ காரணம் வாதிக்கும் 1ம் பிரதிவாதிக்கும் இடையில் உரிமையாளர் மற்றும் வாடகைதார் என்ற உறவு முறை எதுவும் இல்லை¸ ஆகவே ஒப்பந்தம் இருந்து அதை இரத்து செய்து சுவாதீனப் பரிகாரம் கோரப்படும்போது தான் வாடகை ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டு சுவாதீனத்திற்காக அறிவிப்பு அனுப்ப வேண்டும். ஆனால் இந்த வழக்கு யாதெனில்¸ வாதியின் அனுமதியின் பேரில் தான் 7 மாத காலத்திற்கு தாவா சொத்தை 1ம் பிரதிவாதி அனுபவம் செய்து வந்தார் என்பதாகும். அவருக்கு வழங்கப்பட்ட 7 மாத காலம் முடிந்துவிட்டதாக வாதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த 7 மாத காலத்திற்குப் பிறகு பிரதிவாதிகள் தாவா சொத்தை சட்டத்திற்கு புறம்பாக அனுபவம் செய்து வருவதாக கருத்தில் கொள்ள வேண்டும். ஆகவே சுவாதீனப் பரிகாரத்திற்காக வழக்கு தாக்கல் செய்தது நிலைக்கத்தக்கதுதான் என்றும்¸ அதற்கு அறிவிப்பு எதுவும் தனியாக அனுப்ப தேவையில்லை என்றும் இந்நீதிமன்றம் விடை காண்கிறது.

12. தாவா சொத்தில் உள்ள மின் இணைப்பு மற்றும் மின் மோட்டாரைப் பொறுத்து நிரந்தர உறுத்துக் கட்டளைப் பரிகாரம் கோர வாதிக்கு உரிமை இல்லை என பிரதிவாதிகள் தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது. சொத்தை அனுபவம் செய்யாத நிலையில்¸ அதனைப் பொறுத்து நிரந்தர உறுத்துக் கட்டளைப் பரிகாரம் கோர முடியாது என பிரதிவாதகிள் தரப்பில் குறிப்பிட்டு¸ அதற்கு ஆதரவாக 2006 (2) ஊவுஊ 545 – ளு.Pயசவாயளயசயவால /எள/ னுரசயi @
புழஎiனெயளயஅல யனெ ழவாநசள என்ற வழக்கில் வழங்கப்பட்ட முன்தீர்ப்புரையைச் சுட்டிக்காட்டி வாதிட்டார். தாவா சொத்தைக் கிரயம் பெறும்போது¸ அதில் மின் இணைப்பு¸ மின் மோட்டார் பம்ப் செட் இருந்தன என்று இந்நீதிமன்றம் ஏற்கனவே விடை கண்டுள்ளது. மேற்படி மின் இணைப்பானது 1ம் பிரதிவாதி வாதியின் அனுமதியுடன் பெறப்பட்டதாக 1ம் பிரதிவாதி தரப்பில் எடுத்துரைக்கப்பட்ட வாதத்தை இந்நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே சொத்தைக் கிரயம் பெறும்போதே அந்த சொத்தில் மின் இணைப்பு மற்றும் ஆழ்துளை கிணறு¸ சுவர்கள் இருந்தன என்று இந்நீதிமன்றம் ஏற்கனவே விடை கண்டுள்ளது. தாவா சொத்தில் வாதியின் உரிமையைப் பொறுத்து பிரதிவாதிகள் மறுக்கவில்லை. ஆகவே தாவா சொத்தைப் பொறுத்து வாதி கோரியுளள் நிரந்தர உறுத்துக் கட்டளைப் பரிகாரம் வாதிக்கு கிடைக்கத்தக்கது என்றும்¸ அத்துடன் கிரயம் பெற்றதில் இருந்து 12 வருடத்திற்குள் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் கால வரையறைச் சட்டம் ஆர்ட்டிக்கிள் 66ன்படி சுவாதீனப் பரிகாரத்திற்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு உரிய காலத்திற்குள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும்¸ ஆகவே வழக்கு நிலைக்கத்தக்கது என்றும் விடை காணப்படுகிறது.

13. தாவா சொத்தை வணிக நோக்கத்திற்காக பிரதிவாதிகள் பயன்படுத்தி வருவதாக பிரதிவாதிகள் தாக்கல் செய்துள்ள எதிர்வழக்குரையில் கூறப்பட்டுள்ளது. வாதி கோரும் கடந்த கால நஷ்ட தொகையான மாதம் ரூ.1¸000/- என்பது அதிகமானது என பிரதிவாதிகள் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை. ஆகவே 18.02.2002 முதல் 16.02.2005 வரை உள்ள காலத்திற்கு மாதம் ஒன்றுக்கு ரூ.1¸000/- வீதம் வருடம் ஒன்றுக்கு ரூ.12¸000/- வீதம் 3 வருட காலத்திற்கு ரூ.36¸000/- கடந்த கால நஷ்டமாக பிரதிவாதிகள் வாதிக்கு செலுத்தக் கோரும் பரிகாரம் வாதிக்கு கிடைக்கத்தக்கது என்றும்¸ எதிர்கால நஷ்ட குறித்து வாதி தனியாக மனு தாக்கல் செய்து நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும் என்றும் விடை காணப்படுகிறது. மேற்கூறிய காரணங்கள் அடிப்படையில்¸ வாதி கோரும் சுவாதீனப் பரிகாரம்¸ நிரந்தர உறுத்துக் கட்டளைப் பரிகாரம்¸ கடந்தகால நஷ்ட பரிகாரம் வாதிக்கு கிடைக்கத்தக்கது என்று இந்த எழுவினாக்களுக்கு விடை காணப்படுகிறது. இறுதியாக¸ வாதி வழக்குரையில் கோரியபடி¸ தாவா சொத்தை எவ்வித தடையும் இன்றி பிரதிவாதிகள் இன்றிலிருந்து இரண்டு மாத காலத்திற்குள் வாதியிடம் ஒப்படைக்குமாறு சுவாதீனப் பரிகாரம் வழங்கியும்¸ தாவா சொத்தில் உள்ள மின் மோட்டார் பம்ப் செட்டை பிரதிவாதிகளோ அவர்களுடைய ஆட்களோ பயன்படுத்தக்கூடாது என நிரந்தர தடை உறுத்துக் கட்டளை வழங்கியும்¸ 18.02.2002 முதல் 16.02.2005 வரை தாவா சொத்தை பிரதிவாதிகள் சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்தி வந்த வகையில் வாதிக்குப் பிரதிவாதிகள் ரூ.36¸000/- நஷ்ட ஈடாக இன்றிலிருந்து 2 மாத காலத்திற்குள் செலுத்துமாறும் உத்தரவிட்டும்¸ செலவு தொகையோடு தீர்ப்பளிக்கப்படுகிறது. வழக்கு தாக்கலான நாள் முதல் சொத்தின் சுவாதீனத்தை வாதி வசம் பிரதிவாதிகள் ஒப்படைக்கும் நாள் வரை எதிர்கால நஷ்ட ஈடை பொறுத்து உ.வி.மு.. கட்டளை 20 விதி 12ன் கீழ்; வாதி தனியாக நஷ்டவழக்கை எடுத்துக்கொள்ளுமாறு உத்தரவிடப்படுகிறது.

என்னால் சுருக்கெழுத்தாளருக்கு சொல்லப்பட்டு¸ அவரால் கணிணியில் விரிவாக்கம் செய்யப்பட்டு¸ என்னால் சரி பார்க்கப்பட்டு¸ பின்னர் இன்று 2015ம் ஆண்டு சனவரி திங்கள் ஐந்தாம் நாள் என்னால் அவையறிய பகரப்பட்டது.
முதன்மை சார்பு நீதிபதி¸

No comments:

Post a Comment