சொத்துஉரிமை மாற்றுச்சட்டம் பிரிவு-54

மாவட்ட உரிமையியல் நீதிமன்றம்¸ அவினாசி
முன்னிலை: திரு..எம்.ரவி¸ பி..பி.எல்
மாவட்ட உரிமையியல் நீதிபதி¸ அவினாசி
2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18 ஆம் நாள் வியாழக்கிழமை
(2045 திருவள்ளுவராண்டு ஜய வருடம் புரட்டாசி மாதம் 2ஆம் நாள்)
அசல் வழக்கு எண்.241/2007

திருமதி. சாந்தி ... வாதி

.. எதிராக..

1. கருப்புசாமி
2. கிராம நிர்வாக அதிகாரி¸ ஆலத்தூர் கிராமம்¸
3. வட்டாட்சியர்¸ அவினாசி தாலுக்கா
4. தமிழ்நாடு அரசுக்காக சார் ஆட்சியர்¸ திருப்பூர் .. பிரதிவாதிகள்

தீர்ப்புரை

1) வாதி¸ நிரந்தர உறுத்துக்கட்டளை மற்றும் தாவா செலவுத்தொகை கோரி தாவா தாக்கல் செய்துள்ளார்.

2) வாதி¸ தாக்கல் செய்துள்ள வழக்குரையின் சுருக்கம் பின்வருமாறு:-
தாவா சொத்து நத்தம் புறம்போக்கு இடமாகும். மேற்படி இடத்தினை கருப்பன் என்பவர் 29.06.1975ம் ஆண்டு¸ சடையன் என்பவரிடம் விலைக்கு வாங்கி¸ சுவாதீன அனுபோகத்தில் 32 வருடங்களாக அனுபவித்து வந்தார். 16.03.2007ம் வருடம் கருப்பன் தனது மகளான வாதிக்கு¸ தாவாசொத்தினை கிரையம் கொடுத்தார். அன்றுமுதல் தாவா சொத்தில் வாதி அனுபோக சுவாதீனத்தில் இருந்து வருகிறார். அந்த இடத்தில் வாதி¸ ஹாலோபிளாக் மற்றும் செங்கல் வைத்து சுவர் எழுப்பி¸ ஓலை கூரை வேய்ந்து¸ வீடு கட்டி குடியிருந்து வருகிறார். 1ம் பிரதிவாதி¸ தாவாசொத்திற்கு அருகில் வசித்து வரும் நபர் ஆவார்அவர் தாவா சொத்தினை ஆக்கிரமித்து கொள்ள வேண்டும் என்ற கெட்ட நோக்கத்தோடு வாதிக்கு இடைஞ்சலும்¸ இடையூறும் ஏற்படுத்தி வந்தார். தாவா சொத்திற்கு மேற்கு இருந்து வரும் கோவிலுக்கு¸ மேற்படி சொத்தினை சேர்க்காமல் விடமாட்டேன் என்று பிரச்சனை செய்து வந்தார். அவருக்கு தாவாசொத்தில் எந்தவிதமான உரிமையும் இல்லை. 13.07.2007ம் தேதியன்று 2ம் பிரதியானவர் 1ம் பிரதிவாதியின் தூண்டுதலின் பேரில் தாவாசொத்தில் அத்துமீறி நுழைந்து¸ வாதியின் வீட்டை இடித்து விட்டார். சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்டு ஏதேச்சதிகாரமாக மேற்படி வீட்டினை இடித்துள்ளார்கள். அதற்காக வாதிக்கு ஏற்பட்ட ரூ.30¸000/நஷ்டத்திற்காக¸ வாதி தனியாக¸ வழக்கு தாக்கல் செய்யும் தன்னுடைய உரிமையை ரிசர்வ் செய்து கொள்கிறார். 2¸ 3¸ பிரதிவாதிகளின் மேலதிகாரி 4ம் பிரதிவாதி என்பதாலும்¸ 3¸ 4¸ம் பிரதிவாதிகள் இந்த வழக்கில் தரப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளார்கள். பிரதிவாதிகள் அத்துமீறி செயல்பட்டதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வாதி¸ சேவூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். காவல்துறையினர் சிவில் வழக்கு என்பதால் நீதிமன்றத்தின் மூலமாக பார்த்துக்கொள்ளும் படி கூறியுள்ளனர். எனவே வாதி¸ நிரந்தர உறுத்துக்கட்டளை கோரி¸ இந்த தாவா தாக்கல் செய்துள்ளார்.

3) 1ம் பிரதிவாதி தாக்கல் செய்துள்ள எதிர்வழக்குரையின் சுருக்கம் பின்வருமாறு:-
தாவா சொத்து அரசுக்கு சொந்தமான நத்தம் புறம்போக்கு என்பது உண்மையாகும். ஆனால் அதை¸ சடையன் என்பவரிடமிருந்து கருப்பன் என்பவர் கிரையம் வாங்கினார் என்பதும்¸ கருப்பன் அனுபோக சுவாதீனத்திலிருந்து 16.03.2007ம் தேதியிலிருந்து வாதிக்கு அதை கிரையம் கொடுத்து¸ வாதி அதில் ஹாலோபிளாக் மற்றும் செங்கல் வைத்து சுவர் எழுப்பி¸ ஓலை கூரை வேய்ந்து¸ வீடு கட்டி வசித்து வருகிறார் என்பதும்¸ பிரதிவாதி¸ தாவாசொத்தை ஆக்கிரமிப்பு செய்ய வேண்டி வாதிக்கு இடையூறு செய்து வருகிறார் என்பதும் பொய்யானதாகும். மேலும்¸ வாதியுடைய வீட்டை பிரதிவாதி இடித்து விட்டார் என்பதும்¸ பொய்யானதாகும். உண்மையில் தாவா சொத்து அரசு நத்தம் புறம்போக்கு இடமாகும் அதன் சர்வே எண்.883 அதை வாதியானவர் சட்டத்திற்கு புறம்பாக ஆக்கிரமிப்பு செய்து இருந்தார். எனவே 2 3 பிரதிவாதிகள் சட்டத்திற்கு புறம்பான வாதியின் ஆக்கிரமிப்பை அகற்றினார்கள். வாதி குறிப்பிட்டுள்ள 29.06.1975 மற்றும் 16.03.2007 தேதியிட்ட கிரைய பத்திரங்கள் போலியானவை என்றும்¸ அந்த போலி ஆவணங்கள் அடிப்படையில் வாதி தாவா சொத்தை சட்டத்திற்கு புறம்பாக ஆக்கிரமிப்பு செய்துள்ளார் என்றும்¸ எனவே சமூக அரங்கு கூடம் நபர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க சட்டத்திற்கு புறம்பாக ஆக்கிரமிப்பு செய்திருந்த வாதி அகற்றப்பட்டதாகவும்¸ வாதி தாவா சொத்தில் உரிமை இருந்தால் அவர் விளம்புகை பரிகாரம் உரிமை கோரி¸ வழக்கு தாக்கல் செய்திருக்க வேண்டும் என்றும்¸ 29.06.1975 தேதியிட்ட கிரையம் பதிவு செய்யப்படாத போலியாக உருவாக்கப்பட்டிருப்பதால்¸ வாதி அத்தகைய விளம்புகை பரிகாரம் கோரி இந்த வழக்கு தாக்கல் செய்யவில்லை என்றும்¸ எனவே¸ தாவா பிரதிவாதியின் செலவுதொகையுடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.

4) 3ம் பிரதிவாதி தாக்கல் செய்து¸ அதை 2 மற்றும் 4 பிரதிவாதிகள் ஏற்றுக் கொண்டுள்ள எதிர் வழக்குரையின் சுருக்கம் பின்வருமாறு:-
தாவா சொத்து நத்தம் புறம்போக்கு இடம் அரசாங்கத்திற்கு சொந்தமானது என்பது சரி¸ 29.06.1975ம் தேதியன்று கருப்பன் என்பவர் ஒரு சடையன் என்பவரிடமிருந்து விலைக்கு வாங்கி அனுபவம் செய்து வந்தார் என்பதும் 16.03.2007ம் தேதி கருப்பன் என்பவர் வாதிக்கு கிரையம் கொடுத்து வாதி தாவாசொத்தில்¸ ஹாலோபிளாக் மற்றும் செங்கல் வைத்து சுவர் எழுப்பி¸ ஓலை கூரை வேய்ந்து வீடு கட்டி குடியிருந்து வருகிறார் என்பது பொய்யான சங்கதி என்றும்¸ 13.07.2007ம் தேதியன்று 1ம் பிரதிவாதியின் தூண்டுதலின் பேரில்¸ 2ம் பிரதிவாதி¸ தாவாசொத்தில் கட்டியுள்ள வாதியின் வீட்டை¸ அத்துமீறி நுழைந்து இடித்து விட்டார் என்பது பொய்யான சங்கதியாகும். உண்மையில்¸ வாதிக்கும் தாவாசொத்திற்கும் எந்தவிதமான பாத்தியமும் உரிமையும் கிடையாது. கருப்பன் கிரையம் பெற்றதாக தாக்கல் செய்துள்ள கிரைய ஆவணமே ஒரு மோசடியான ஆவணமாகும். கருப்பன் பெயரிலோ¸ அல்லது வாதி பெயரிலோ¸ சுவாதீனத்தை காட்டக்கூடிய எந்தவிதமான ஆவணமும் தாக்கல் செய்யவில்லை என்றும்¸ ஆலத்தூர் கிராமம்¸ பழைய கிராம நத்தம் ..666 நெ.காலையானது¸ 1994ம் வருடமே¸ கிராம நத்தம் ..883¸ 883/2 மற்றும் 883/3 என்று¸ உட்பிரிவு செய்யப்பட்டு¸ சொத்தின் உரிமையாளர் பெயர்களுக்கு தனித்தனி வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது என்றும்¸ ஆலத்தூர் கிராமம் கி...666 நெ.காலை பூமியானது ஒரு சில குடியிருப்பு வீடுகள் மற்றும் பட்டத்து அரசியம்மன் கோவில் மற்றும் மைதானம் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியாக இருந்தது என்றும்¸ வாதியின் தந்தை கருப்பனுக்கு கிராம நத்தம் சர்வே 883/3 நெ. காலையில் தான் வீடு உள்ளது என்றும்¸ அதில் அவர் வீடு கட்டியுள்ளார் என்றும்¸ கிராம நத்தம் சர்வே 883/1 நெ. காலையில் உள்ள இடத்தை அபகரிக்க வேண்டி¸ வாதியும்¸ கருப்பனும்¸ போலியான ஆவணங்களை உருவாக்கி கொண்டு ஆக்கிரமிப்பு செய்யவும்¸ வீடு கட்டவும் முயற்சி செய்தார்கள் என்றும்¸ அதை 2 முதல் 4 வரையான பிரதிவாதிகள் தடுத்துவிட்டார்கள் என்றும்¸ வாதியானர் தாவாசொத்தில்¸ வீடு கட்டி குடியிருக்கவில்லை¸ அதை பிரதிவாதிகள் இடிக்கவும் இல்லை என்றும்¸ எனவே வாதி கோரிய பரிகாரம் கிடைக்க வேண்டியதில்லை என்றும்¸ எனவே தாவா பிரதிவாதியின் செலவுதொகையுடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.

5) வழக்குரை மற்றும் எதிர் வழக்குரை ஆகியவற்றை கவனமுடன் பரிசீலனை செய்து இந்த நீதிமன்றம் 17.12.2007ம் தேதியன்று கீழ்கண்ட எழுவினாக்களை வனைந்துள்ளது.
எழுவினாக்கள்:
1) வாதி கோரியபடி நிரந்தர உறுத்துக்கட்டளை பரிகாரம் பெற வாதி உரிமையுடைவரா?
2) வேறு என்ன பரிகாரம் பெற வாதி உரிமையுடைவர்? 20.08.2011ம் தேதியன்று வனையப்பட்ட கூடுதல் எழுவினா: -
கூடுதல் எழுவினா:-
1) தாவா தேவையான தரப்பினர்களை சேர்க்காத தோசத்தாலும்¸ தேவையில்லாத தரப்பினர்களை சேர்த்துள்ள தோசத்தாலும்¸ பாதிக்கப்பட்டுள்ளதா? இல்லையா?
2) 2 முதல் 4 வரையான பிரதிவாதிகள் தாவா சொத்திலிருந்த வாதியின் வீட்டை இடித்து தரைமட்டமாக்கி உள்ளார்கள் என்பது உண்மையா?
3) 29.06.1975 தேதியிட்ட கிரைய பத்திரம் போலியாக உருவாக்கப்பட்டதா?
4) தாவா சொத்துக்கள் பட்டத்து அரசியம்மன் கோவிலுக்கு பாத்தியப்பட்டது என்பது உண்மையா?

6) இவ்வழக்கில் வாதி தரப்பில்¸ வாதி திருமதி.சாந்தி என்பவர் வா.சா.-1 ஆக விசாரிக்கப்பட்டுள்ளார். திரு.பழனிச்சாமி என்பவர் வா.சா.2 ஆக விசாரிக்கப்பட்டுள்ளார். வாதி தரப்பில் வா.சா..1 முதல் வா.சா..5 வரையான சான்றாவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. பிரதிவாதிகள் தரப்பில் பிரதிவாதி திரு.கருப்புச்சாமி என்பவர் பி.சா.1 ஆக விசாரிக்கப்பட்டுள்ளார். திரு.சண்முகம் என்பவர் பி.சா.2 ஆக விசாரிக்கப்பட்டுள்ளார். பிரதிவாதிகள் தரப்பில் பி.சா..1 முதல் பி.சா..10 வரையான சான்றாவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன.

7) இருதரப்பும் கேட்கப்பட்டது¸ ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டன.

8) கூடுதல் எழுவினா:-1
1) தாவா தேவையான தரப்பினர்களை சேர்க்காத தோசத்தாலும்¸ தேவையில்லாத தரப்பினர்களை சேர்த்துள்ள தோசத்தாலும்¸ பாதிக்கப்பட்டுள்ளதா? இல்லையா? இவ்வழக்கில்¸ பிரதிவாதிகள் தரப்பில்¸ இந்த தாவாவிற்கு அவசியமான தரப்பினர்களை சேர்க்காத தோசத்தால் தாவா பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்வழக்குரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது சம்மந்தமாக¸ இந்த தாவாவிற்கு¸ அவசியமான நபர் யார்? என்பது அவர் தாவாவில் தரப்பினராக சேர்க்கப்படாததால் இந்த தாவா பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதிவாதிகள் தரப்பில் எந்தவிதமான சாட்சிகளும்¸ சான்றாவணங்களும் முன்நிறுத்தப்படவில்லை. பிரதிவாதிகளின் மற்றொரு வாதமானது¸ இவ்வழக்கில் தேவையில்லாத பிரதிவாதிகளை தரப்பினர்களாக சேர்த்துள்ள தோசத்தால் இந்த வழக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக எடுத்துரைக்கப்பட்டது. அது குறித்து கூர்ந்து காணும் பொழுது வாதிகள் தரப்பில் எடுத்துரைக்கும் போது¸ 1ம் பிரதிவாதி தாவாசொத்திற்கு அருகில் வசித்து வருகிறார் என்றும்¸ அவர் தாவா சொத்து எவ்விதமாவது அருகில் உள்ள பட்டத்து அரசியம்மன் கோவிலுடன் சேர்த்து விட வேண்டும் என்ற எண்ணத்தில்¸ செயல் பட்டு வருகிறார் என்றும்¸ அவருடைய தூண்டுதலின் பேரில்¸ 2¸ 3¸ பிரதிவாதிகள்¸ வாதியை¸ தாவா சொத்திலிருந்து அவருடைய வீட்டை இடித்து தரைமட்டமாக்கி விட்டார்கள் என்றும்¸ 4ம் பிரதிவாதி¸ 2¸ 3¸ பிரதிவாதிகளின் நிர்வாக அதிகாரி என்பதால் 1 முதல் 4 வரையான பிரதிவாதிகள் இவ்வழக்கில் தரப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளார் என்பது வாதி தரப்பு வாதமாகும். பிரதிவாதிகள் தரப்பில்¸ அவர்கள் எவ்வாறு இந்த தாவாவிற்கு அவசியமில்லா நபர்கள் என்பது சம்மந்தமாக எந்த ஒரு வாதமும்¸ சாட்சியமும் முன்நிறுத்தப்படவில்லை. எனவே இந்நீதிமன்றமானது¸ இந்த தாவாவிற்கு அவசியமான தரப்பினர்களை சேர்க்காத தோசத்தாலும்¸ அவசியமில்லாத தரப்பினர்களை சேர்த்துள்ள தோசத்தாலும்¸ இந்த தாவா பாதிக்கப்படவில்லை என்றும்¸ கூடுதல் எழுவினா-1ற்கு விடைகாண்கிறது.

9) கூடுதல் எழுவினா:-2
2) 2 முதல் 4 வரையான பிரதிவாதிகள் தாவாசொத்திலிருந்த வாதியின் வீட்டை இடித்து தரைமட்டமாக்கி உள்ளார்கள் என்பது உண்மையா? இவ்வழக்கில் பிரதிவாதிகள் தரப்பு வாதமானது¸ வாதியானவர்¸ தாவாசொத்தை ஆக்கிரமிப்பு செய்து¸ கூரை வீடு அமைத்திருந்தார் என்றும்¸ அது சமுதாய கூடத்திற்கு அருகில் இருந்தது என்றும்¸ அதன் காரணமாக பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் 2 முதல் 4 வரையான பிரதிவாதிகள்¸ தாவாசொத்தை வாதியின் ஆக்கிரமிப்பை அகற்றினார்கள் என்றும்¸ 1ம் பிரதிவாதியானவர்¸ தன்னுடைய எதிர்வழக்குரையில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் 2 முதல் 4 வரையான பிரதிவாதிகள் தாக்கல் செய்துள்ள எதிர்வழக்குரையில்¸ வாதி¸ தாவாசொத்தில் வீடு ஏதும் கட்டி குடியிருந்து வரவில்லை என்றும்¸ தாங்கள் ஏதும்¸ வாதியின் வீட்டை இடித்து அப்புறப்படுத்தவில்லை என்றும் 2 முதல் 4 பிரதிவாதிகள் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுகுறித்து கூர்ந்து காணும் பொழுது¸ வாதி தரப்பில் தாவா சொத்திலிருந்து வாதியின் வீடு தரைமட்டமாக்கிய பிறகு¸ அதில் குடிசை வீடு கட்டியுள்ளதாகவும்¸ அதுசம்மந்தமான புகைப்படங்கள் எண்ணிக்கை-6 அதன் நெகட்டிவ் உடன் வா.சா..5 சான்றாவணமாக குறியீடு செய்யப்பட்டுள்ளது. மேலும்¸ 1ம் பிரதிவாதி¸ பி.சா.1 ஆக விசாரிக்கப்பட்டுள்ளார். அவர் தன்னுடைய குறுக்கு விசாரணையின் போது¸ தாவாசொத்தில் வாதி குடிசை போட்டிருந்தார் என்றால் சரிதான்¸ வீடு இல்லை ஹாலோபிளாக் சுவர் கட்டவில்லை தென்னை மட்டையில் சுவர் வைத்துள்ளார் என்று ஒத்துக்கொண்டுள்ளார்" மேற்கண்ட காரணங்களின் அடிப்படையில் இந்த நீதிமன்றமானது¸ தாவாசொத்தில் இருந்த வாதியினுடைய வீட்டை¸ வாதி¸ ஆக்கிரமிப்பு செய்து உள்ளதாக கருதி அகற்றி உள்ளார்கள் என்றும் கூடுதல் எழுவினா-2ற்கு இந்நீதிமன்றம் விடைகாண்கிறது.

10) கூடுதல் எழுவினா:-3
3) 29.06.1975 தேதியிட்ட கிரைய பத்திரம் போலியாக உருவாக்கப்பட்டதா?
இவ்வழக்கில் வாதிகள் தரப்பில் தாவாசொத்தானது கிராம நத்தம் என்றும்¸ 1965ம் வருடம் காலியிடமாக இருந்த அதனை ஒரு சடையன் என்பவர் ஆக்கிரமித்து அனுபவம் செய்து வந்தார் என்றும் 29.06.1975ம் ஆண்டு அந்த சடையன் என்பவரிடமிருந்து கருப்பன் என்பவர் 90 ரூபாய்க்கு கிரையம் பெற்று 32 வருடங்களாக அனுபவித்து வந்துள்ளார் என்றும்¸ அதன் பின்னிட்டு 16.03.2007ம் தேதியன்று கருப்பன் தனது மகளான வாதிக்குதாவாசொத்தினை கிரையம் செய்து கொடுத்து அன்றிலிருந்து வாதியானவர்¸ அங்கு ஹாலோபிளாக்¸ மற்றும் செங்கல் வைத்து சுவர் எழுப்பி ஓலை கூரை வேய்ந்து¸ வீடு கட்டி அனுபவம் செய்து வருகிறார் என்பது வாதி தரப்பு வாதமாகும். 29.06.1975 தேதியிட்ட கருப்பன் என்பவருக்கு சடையன் என்பவர் எழுதி கொடுத்த கிரைய பத்திரம் வா.சா..1ஆக குறியீடு செய்யப்பட்டுள்ளது. வா.சா..1 கூர்ந்து காணும் பொழுது அது பதிவு செய்யப்படாத ஆவணமாகும். சொத்துரிமை மாற்றுச்சட்டம் (Transfer of property Act 1882) பிரிவு 54ன் படி¸ 100 ரூபாய்க்கு மேற்பட்ட மதிப்புடைய அசையா சொத்துக்கள் உரிமை மாற்றம் செய்யப்படும் பொழுது¸ அத்தகைய உரிமை மாற்றமானது¸கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். மேலும்¸ பத்திரப்பதிவு சட்டம் (Registration Act 1908) பிரிவு 17¸ன் படி அசையா சொத்துக்கள் உரிமை மாற்றம் செய்யப்படும் பொழுது¸ பத்திரப்பதிவு செய்யப்பட வேண்டியது கட்டாயம் ஆகும். இவ்வழக்கில்¸ வா.சா..1 29.06.1975 தேதியிட்ட கிரைய பத்திரமானது¸ பதிவு செய்யப்படாத உரிய முத்திரைத்தாளில் எழுதப்படாத (UnRegistered and Unstamped) ஆவணமாகும்¸ எனவே அந்த ஆவணமானது¸ செல்லத்தக்க ஆவணம் அல்ல (Invalid Document) எனவே வா.சா..1 சட்டப்படி செல்லத்தக்க ஆவணம் அல்ல என்பதால் அது போலியாக உருவாக்கப்பட்டதா? இல்லையா? என்பது சம்மந்தமாக¸ தீர்மானிக்க வேண்டிய அவசியம் எழவில்லை. அவ்வாறே கூடுதல் எழுவினா-3-ற்கு இந்நீதிமன்றம் தீர்வு காண்கிறது.

11) கூடுதல் எழுவினா 4
4) தாவா சொத்துக்கள் பட்டத்து அரசியம்மன் கோவிலுக்கு பாத்தியப்பட்டது என்பது உண்மையா?
இவ்வழக்கில் தாவாசொத்துக்கள் பட்டத்து அரசியம்மன் கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள் என்றும்¸ எனவே¸ பட்டத்து அரசியம்மன் கோவில் தர்க்கார் திரு.வெற்றிசெல்வன் என்பவர்¸ இந்து அறநிலைய துறை அதிகாரி¸ இவ்வழக்கில் தரப்பினர்களாக சேர்க்கப்பட வேண்டும் என்றும்¸ கட்டளை-1 விதி-10ன் படி¸ 06.06.2011ல் மனு இந்நீதிமன்றத்தில் தாக்கல் செய்து¸ அந்த மனு குறைபாடுடன் இருந்ததால் திருப்பப்பட்டுள்ளது. அந்த மனுவை மீண்டும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து¸ திரும்ப இந்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாமல்¸ பட்டத்தரசி அம்மன் தர்க்கார் என்ற முறையில் திரு.வெற்றிசெல்வன் என்பவர் தரப்பினராக இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என்று 27.09.2012ம் தேதியன்று இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்து¸ அந்த மனுவானது முழுவிசாரணைக்கு பின்னர் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னிட்டு அந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை.

12) மேலும் இவ்வழக்கில் 1வது பிரதிவாதி தரப்பில்¸ தாவாசொத்தானது பட்டத்து அரசியம்மன் கோவிலுக்கு சேர்ந்தது என்பது சம்மந்தமாக பிரதிவாதி தரப்பு சான்றாவணம் பி.சா..1 ஆக குறியீடு செய்யப்பட்டுள்ளது. பி.சா..1 சான்றாவணத்தை கூர்ந்து காணும் பொழுது¸ அதில்¸ முத்துப்பழனியப்பன் உதவி ஆணையர்¸ அவினாசி வட்டாட்சியருக்கு¸ 14.05.2007 தேதியிட்ட ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில்¸ ஆலந்தூர் கிராம சர்வே எண்.883-1ல் உள்ள நத்தம் புறம்போக்கு நிலம்¸ ஆக்கிரமிப்பில் உள்ளது என்றும்¸ அதற்கு¸ திருக்கோவில் பெயரில் பட்டா வழங்குமாறும்¸ ஆக்கிரமிப்பில் உள்ள நிலத்தை மீட்டு¸ திருக்கோவில் சுவாதீனம் பெறுவதற்கு¸ உதவுமாறும்¸ காணப்படுகிறது.

13) மேலும் இவ்வழக்கில் பி.சா..2 கிராம நிர்வாக அலுவலர் தன்னுடைய சாட்சியத்தில்¸ “ஆலத்தூர் கிராமம் நத்தம் சர்வே எண்.883 என்பது பழைய எண்.666 என்றும்¸ அதில்¸ 883/1¸ பட்டத்து அரசியம்மன் கோவில் இடமாகும் என்றும் பட்டா எண்.883/3 அதனுடைய உட்பிரிவு என்றும்¸ அதில் வாதியின் தகப்பனார் பெயரில் உள்ளது என்றும் சாட்சியம் அளித்துள்ளார். மேலும் அவர் தன் சாட்சியத்தில்¸ “அந்த கோவில் பெயரில் பட்டா உள்ளது என்பது தனக்கு தெரியாது என்றும்சாட்சியம் அளித்துள்ளார். சர்வே எண்.883/1 பட்டத்து அரசியம்மன் பெயரில் உள்ள பட்டா தாக்கல் செய்யப்படவில்லை. அதுசம்மந்தமான 883/1 அடங்கல் பட்டத்து அரசி அம்மன் கோவில் 10 மைதானம் என்றும் 883/2 சி.பழனிச்சாமி வில்லை வீடு என்றும்¸ 883/3 மனை வாதியின் தந்தை கருப்பன் கூரை வீடு என்றும்¸ அடங்கல் பி.சா..3ன் மூலம் அறிய முடிகிறது. தாவாசொத்தானது ஆலத்தூர் கிராம பழைய சர்வே எண்.666 என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் சொத்து விபரத்தில் சமுதாய கூடத்திற்கும் கோவிலுக்கும் கிழக்கு என்று காட்டப்பட்டுள்ளது.

14) மேலும் இவ்வழக்கில்¸ பி.சா.1 தன்னுடைய கூடுதல் சாட்சிய பிரமாண வாக்கு மூலத்தில் ..எண்.666 என்பது 883 மற்றும் 884 ஆக சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் உட்பிரிவு செய்யப்பட்டது என்றும்¸ தற்போது வாதி ..எண்.883-3ல் உள்ள சொத்துக்களை கெட்ட எண்ணத்தோடு அடைய முற்படுவதின் பொருட்டு புதிய ..எண்களை தவிர்த்து பழைய ..எண்களை குறிப்பிட்டு வழக்கு தாக்கல் செய்துள்ளார் என்றும்¸ மேலும்¸ ..883/3 உரிமையாளரான ரங்கன் மகன் கருப்பன் என்பவர் பட்டத்தரசியம்மன் கோவில் தற்போது நடைமுறை நிர்வாகியான ஒரு சின்னபாடான் மகன் லட்சுமணன் என்பவர் பெயரில் 03.12.2012ம் தேதியன்று கிரையம் செய்து கொடுத்துவிட்டார் என்று தெரிவித்து உள்ளார். ஆனால் அந்த கிரைய பத்திரம் எதுவும் சான்றாவணமாக குறியீடு செய்யப்படவில்லை. அந்த 03.12.2012 தேதியிட்ட கிரையஆவணமானது¸ இந்த வழக்கில் தாக்கல் செய்து¸ 5 ஆண்டுகளுக்கு பின்னிட்டு¸ ஏற்படுத்தப்பட்டதாக கூறப்படும் ஆவணமாகும். மேலும் பி.சா.1 ஆனவர்¸ மறு குறுக்கு விசாரணை செய்ய வாதிகள் தரப்பில் மனு தாக்கல் செய்து அந்த மனு அனுமதிக்கப்பட்டு¸ குறுக்குவிசாரணை தொடர்ச்சிக்காக வழக்கு நிலுவையில் இருந்த சமயத்தில்¸ 1ம் பிரதிவாதி¸ இந்த நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால்¸ அவரது சாட்சியமானது நீக்கரவு (Dispensed) செய்யப்பட்டுள்ளது. எனவே பிரதிவாதி தரப்பு சாட்சி 1 மற்றும் பி.சா.2 கிராம நிர்வாக அலுவலர் சாட்சியத்தின் மூலம்¸ தாவா பழைய சர்வே எண்.666 என்பது புதிய சர்வே எண்.883/1 முதல் 883/5 வரை உட்பிரிவுகளாக செய்யப்பட்டுள்ளது. அதில் 883/1 என்பது¸ பட்டத்தரசியம்மன் கோவில் உள்ள நிலமாகும்¸ 883/3 என்பது வாதியின் தகப்பனார் பெயரிலுள்ள இடமாகும்¸ 883/2¸ 4¸ 5¸ ஆகியவை வேறு தனி நபர்கள் பெயரில் உள்ள பட்டா இடங்களாகும். இவ்வழக்கில் வாதிகள் மற்றும் பிரதிவாதிகள் தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்ட சங்கதிகள் யாதெனில் ஆலத்தூர் பழைய சர்வேஎண்.666 என்பது முழுவதும்¸ அரசுக்கு பாத்தியப்பட்ட நத்தம் நிலம் என்பது ஒத்துக்கொள்ளப்பட்ட சங்கதிகள் ஆகும். மேலும்¸ நத்தம் நிலம் என்பது கிராம மக்கள் குடியிருப்பதற்காக அரசாங்கத்தால் வகைப்பாடு செய்யப்படும் நிலம் என்றும்¸ அந்த நத்தம் நிலத்தில்¸ அவரவர் அனுபவ சுவாதீனத்தில் உள்ள இடத்திற்கு¸ அதை அனுசரித்து அரசு அவர்கள் பெயரில் பட்டா வழங்கும் என்பதும்¸ நடைமுறையாகும். எனவே தாவாசொத்து சர்வே எண் பழைய புல எண்.666¸ அது உட்பிரிவான புதிய சர்வே எண்.883/1 மட்டுமே பட்டத்து அரசியம்மன் கோவிலுக்கு உட்பட்டதாகும். சர்வே எண்.883/3 என்பது வாதியின் தகப்பனார் பெயரிலுள்ள பட்டா இடமாகும். எனவே தாவா சொத்து¸ பழைய சர்வே எண்.666 முழுவதும் பட்டத்து அரசியம்மன் கோவிலுக்கு பாத்தியமானது என்பது பிரதிவாதிகள் தரப்பில் வாதமானது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக அமையவில்லை என்று கூடுதல் எழுவினா-4ற்கு இந்நீதிமன்றம் விடை காண்கிறது.

15) எழுவினா:-1 மற்றும் 2
1) வாதி கோரியபடி நிரந்தர உறுத்துக்கட்டளை பரிகாரம் பெற வாதி உரிமையுடைவரா?
2) வேறு என்ன பரிகாரம் பெற வாதி உரிமையுடைவர்? இவ்வழக்கில் ஒப்புக்கொள்ளப்பட்ட சங்கதி யாதெனில்¸ ஆலத்தூர் பழைய சர்வே எண்.666 என்பது¸ நத்தம் இடமாகும். அது¸ அந்த புதிய புல எண்.883/1 முதல் 5 வரையாக உட்பிரிவு செய்யப்பட்டுள்ளது என்பது பி.சா.2 கிராம நிர்வாக அலுவலர் சாட்சியத்தின் மூலமாகவும்¸ பி.சா..3 கிராம அடங்கல் கணக்கு மூலமாகவும் அறிய முடிகிறது. இவ்வழக்கில் வாதியானவர்¸ தாவா சொத்துக்களை ஒரு சடையன் என்பவர்¸ 1965ம் வருடம் ஆக்கிரமிப்பு செய்து¸ அவர் 32 வருடங்களாக அனுபவ சுவாதீனத்திலிருந்து இருந்து வந்து அதன் பின்னிட்டு¸ வாதியின் தகப்பனார் கருப்பன் என்பவருக்கு 29.06.1975ம் தேதியன்று வா.சா..1 கிரைய பத்திரம் மூலம்¸ கிரையம் செய்து கொடுத்தார் என்றும்¸ அதன் பின்னிட்டு கருப்பன் என்பவர் வாதிக்கு வா.சா..2 16.03.2007ம் தேதியன்று கிரையம் செய்து கொடுத்தார் என்றும் அதன் பின்னர்¸ வாதி¸ அந்த இடத்தில் ஹாலோபிளாக் சுவர் வைத்து கூரை வேய்ந்து குடிசை அமைத்து¸ அனுபவம் செய்து வந்தார் என்றும்¸ அதை 2 முதல் 4 வரையான பிரதிவாதிகள் 1ம் பிரதிவாதியின் தூண்டுதலின் படி இடித்து அகற்றிவிட்டார்கள் என்பது வாதி தரப்பு வழக்காகும். இந்த வழக்கில் கூடுதல் எழுவினா3-ற்கு கண்ட விரிவான விளக்கங்களின் படி¸ வா.சா..1 29.06.1975 தேதியிட்ட கிரைய ஆவணமானது¸ பதிவு செய்யப்படாத ஆவணமாகும். சொத்துஉரிமை மாற்றுச்சட்டம் பிரிவு-54 மற்றும் பத்திரப்பதிவுசட்டம் பிரிவு 17 மற்றும் 18ன் படி பதிவு செய்யப்டாத கிரைய ஆவணமானது¸ சட்டப்படியாக செல்லுதன்மை இல்லாத ஆவணமாகும். (Not Valid Under Law) எனவே அந்த ஆவணத்தின் அடிப்படையில் ஒரு கருப்பன் என்பவர் வா.சா..2 கிரைய பத்திரம் மூலமாக தாவாசொத்தை வாதிக்கு¸ கிரையம் செய்து கொடுத்து ஒப்படைத்தார் என்ற வாதி தரப்பு வாதமானது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக அமையவில்லை. மேலும் இவ்வழக்கில்¸ பி.சா.1 குறுக்கு விசாரணையின் போதும்¸ பி.சா.2 கிராம நிர்வாக அலுவலர் தன் சாட்சியத்தின் போதும்¸ புதிய புல எண்.883/3 வாதியின் தகப்பனார் கருப்பன் என்பவர் அனுபவ சுவாதீனத்தில் இருந்து வருகிறார் என்பதை ஒப்புக்கொள்கிறார்.

16) மேலும் பி.சா..3 அடங்கல் மூலமாகவும் தாவா பழைய சர்வேஎண்.666 புதிய புலஎண்.883/3 வாதியின் தகப்பனார் கருப்பன் என்பவர் பேரில் பட்டா வழங்கப்பட்டுள்ளது என்பது அறிய முடிகிறது. எனவே இவ்வழக்கின் சொத்து விபரத்தில்¸ ஆலத்தூர் கிராம பழைய சர்வேஎண்.666 என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பழைய சர்வே எண்.666 என்பது புதிய புல எண்.883/1 முதல் 5 வரை உட்பிரிவு செய்யப்பட்டுள்ளது அதில் 883/3ல் வாதியின் தகப்பனார் கருப்பன் பெயரில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. அதில் தற்போது வாதி அதில் அனுபவ சுவாதீனத்தில் உள்ளார் என்பதை 1ம் பிரதிவாதி தன்னுடைய குறுக்கு விசாரணையின் போது "வாதி¸ தாவா சொத்தில் குடிசை போட்டிருந்தார் என்றார் சரி தான் வீடில்லை¸ ஹாலோபிளாக் சுவர் கட்டவில்லை¸ தென்னைமட்டையில் சுவர் வைத்துள்ளார்" என்று ஒப்புக்கொண்டுள்ளார். மேலும்¸ பி.சா..5 சான்றாவணம் புகைப்படங்கள் மூலமாகவும்¸ தாவாசொத்தின் ஒரு பகுதி வாதி¸ அனுபவ சுவாதீனத்திலிருந்து வந்தார் என்று அறிய முடிகிறது. மேலும் 1ம் பிரதிவாதி தாக்கல் செய்துள்ள கூடுதல் சாட்சிய பிரமாணப்பத்திரிக்கையில் "பழைய புலஎண்.666 இதன் புதிய . மற்றும் உட்பிரிவு 883/3ல் உள்ளது" என்று ஒப்புக்கொண்டுள்ளார். எனவே¸ தாவா புதிய சர்வே எண்.883/3 மட்டும்¸ வாதி¸ கோரியபடி¸ நிரந்தர தடையுத்தரவு உறுத்துக்கட்டளை பெற உரிமையவராவார் என்று எழுவினா-1¸2-ற்கு இந்நீதிமன்றம் விடைகாண்கிறது.

17) முடிவாக :- தாவா ஆலத்தூர் பழைய புல எண்.666¸ அதன் புதிய உட்பிரிவு புல எண்.883/3ல் மட்டும்¸ வாதி கோரியபடி¸ நிரந்தர உறுத்துக்கட்டளை பரிகாரம் பெற வாதி உரிமையுடையவர் ஆவார் என்று தாவா பகுதியாக அனுமதித்து தீர்ப்பளிக்கப்படுகிறது. செலவுத்தொகை இல்லை. இத்தீர்ப்புரை என்னால் சுருக்கெழுத்து தட்டச்சருக்கு நேரடியாக சொல்லப்பட்டு¸ அவரால் தட்டச்சு செய்யப்பட்டு¸ பின் என்னால் பிழைநீக்கம் செய்யப்பட்டு. திறந்த நீதிமன்றத்தில் 18.09.2014 அன்று அவையறிய கூறப்பட்டது.

ஒப்பம்....திரு..எம்.ரவி¸
மாவட்ட உரிமையியல் நீதிபதி¸
அவினாசி.No comments:

Post a Comment