இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 392,397

தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம்¸ விருதுநகர் மாவட்டம்
(இருப்பு) திருவில்லிபுத்தூர்.
முன்னிலை திரு.கே. தேவதாஸ்¸ – பி.எஸ்.ஸிபி.எல்
தலைமை நீதித்துறை நடுவர்
2014ம் ஆண்டு ஜனவரி திங்கள் 31ம் நாள் வெள்ளிக் கிழமை¸
அமர்வு வழக்கு எண்.225-2011

(ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலைய குற்ற எண். 439-2011-ல் வழக்கு பதிவு செய்யப்பட்டு¸ ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் எண்-2 நீதிமன்றத்தின் முதல் நிலை விசாரணை வழக்கு எண்.37-2011 ஆக கோப்புக்கு எடுக்கப்பட்டுள்ளது).

1.எம். பாலமுருகன்
2.ஆர்.பாலமுருகன் ... குற்றம் சாட்டப்பட்டவர்கள் - எதிரிகள்

எதிரிகள் மீதான குற்றச்சாட்டு - இதச392 மற்றும் 397 பிரிவுகளின்படி.

குற்றச்சாட்டு வனையப் பட்டது .... 1¸ 2எதிரிகள் மீது இதச392 மற்றும் 397 பிரிவுகளின்படி.
எதிரிகளின் வாதுரை - குற்றவாளிகள் இல்லை.

நீதிபதியின் முடிவு - குற்றவாளிகள் இல்லை.

நீதிபதியின் ஆணை - 1¸ 2 எதிரிகள் மீதான குற்றச்சாட்டு தகுநிலை ஐயப்பாட்டிற்கு அப்பால் மெய்ப்பிக்கப் படாததால்¸ 1¸ 2 எதிரிகள் இதச392 மற்றும் 397 பிரிவுகளின்படி குற்றவாளிகள் இல்லை என்று தீர்மானித்து குவிமுச 235(1) பிரிவின் கீழ் விடுதலை செய்து தீர்ப்பளிக்கிறேன்.

06-08-2011ம் தேதி காலை 11-00 மணிக்கு சாட்சி முனீஸ்வரி¸ ஸ்ரீவில்லிபுத்தூர் கந்தாடை தெரு சந்தில் ஜவுளி எடுப்பதற்காக சென்று கொண்டிருந்த போது¸ எதிரிகள் இருவரும் டிஎன்-22 எயு-5936பஜாஜ் புளுகலர் இரு சக்கர வாகனத்தில் வந்து முனீஸ்வரியை வழிமறித்து நிறுத்தி 2வது எதிரி அவரிடம் சூரிக் கத்தியைக் காட்டி பணம் மற்றும் செயினை கொடு என்று மிரட்டியதாகவும்¸ முனீஸ்வரி தர மறுத்ததும் 1வது எதிரி கழுத்தில் போட்டிருந்த சுமார் 2 பவுன் எடையுள்ள ரூ20¸000-00 மதிப்புள்ள கோதுமை மாடல் தங்க செயினை அத்து பறித்து கொள்ளையடித்ததாகவும்¸ முனீஸ்வரி சத்தம் கேட்டதும்¸ அருகில் இருந்தவர்கள் பிடிக்க முயன்ற போது 1¸ 2 எதிரிகள் சூரிக் கத்தியைக் காட்டி மிரட்டி பொது மக்களுக்கும்¸ போக்கு வரத்திற்கும் இடையூறும் பீதியும் ஏற்படுத்தியதாகவும்¸ 1¸ 2 எதிரிகள்மீது ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலைய ஆய்வாளர் இதச 392¸ 397 பிரிவுகளின்படி குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

2. வழக்காவணங்களின் நகல்கள் யாவும் எதிரிகளுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் எண்-1 அவர்களால் முறையாக வழங்கப்பட்டுள்ளது.

3. வழக்காவணங்களை ஆராய்ந்த கற்றறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர்¸ நீதித்துறை நடுவர் எண்-1 அவர்கள் இவ்வழக்கு அமர்வு நீதிமன்றத்தால் மட்டுமே விசாரிக்கத்தக்க வழக்கு என்பதால் இவ்வழக்கினை விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக சமர்ப்பித்துள்ளார். பின்பு இந்நீதிமன்றத்திற்கு மாறுதலாகி பெறப்பட்டுள்ளது.

4. எதிரிகள் இந்நீதிமன்றத்தில் ஆஜரானதும் இரு தரப்பினரின் முதல் நிலை வாதம் கேட்கப்பட்டு¸ 1¸ 2 எதிரிகள் மீது இதச 392¸ 397 பிரிவுகளின் படி குற்றச்சாட்டு வனைவதற்கு போதிய ஆதாரம் இருப்பதாக அனுமானிக்கப்பட்டு¸ 1¸ 2 எதிரிகள் மீது மேற்படி பிரிவுகளின்படி குற்றச்சாட்டு வனைந்து விளக்கி வினவியபோது¸ எதிரிகள் குற்றச்சாட்டை மறுத்து தாங்கள் குற்றவாளிகள் இல்லை என்று கூறினர். எனவே அரசு தரப்பு சாட்சிகள் விசாரணைக்காக வழக்கு வகை செய்யப்பட்டது.

5. இவ்வழக்கில் அரசு தரப்பில் மொத்தம் 10 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு¸ 12 சான்றவாணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சாபொ1 மற்றும் 2 தாக்கல் செய்யப் பட்டுள்ளன.

6. அரசு தரப்பு சாட்சிகளின் சாட்சியங்களிலிருந்து தெரிய வரும் அரசு தரப்பு வழக்கின் சுருக்கம் - அசா1 முனீஸ்வரி¸ அத்திகுளத்தில் குடியிருக்கிறார். 06-08-2011 அன்று காலை 11-00 மணிக்கு கந்தாடைத் தெருவில் சைக்கிளை உருட்டிக் கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இரண்டு நபர்கள் பைக்கில் வந்து அசா1ஐ கீழே தள்ளிவிட்டு செயினை அத்துக்கொண்டு போய் விட்டார்கள். அந்த நபர்களை தற்போதுஅசா1 அடையாளம் காட்ட முடியாது. எதிரிகள் வந்த இரு சக்கர வாகனத்தின் பதிவு எண்ணும் அசா1க்கு ஞாபகம் இல்லை. பின்னர்¸ அசா1 சம்பவம் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் அசாஆ1 புகார் கொடுத்துள்ளார். பின்னர்¸ அன்று இரவு ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்திலிருந்து கிடைத்த தகவலின் பேரில் தனது தகப்பனார் அசா2 உடன் காவல் நிலையம் சென்று அசா1ன் செயினை அடையாளம் காட்டியுள்ளார். அசா1ன் தங்க செயின் சாபோ1 ஆக குறியீடு செய்யப் பட்டுள்ளது. அசா3 பாஸ்கரன்¸ அசா4 குமரேசன்¸ அசா9 சரவணன்¸ ஆகியோர்களுக்கு வழக்கு சம்பவம் பற்றி எதுவும் தெரியாது.

7. அசா7 அண்ணாமலை¸ விழுப்பனூர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். 06-08-2011ம் தேதி பகல் 12-00 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் ஆய்வாளர் அழைத்ததன் பேரில் சென்று ஸ்ரீவில்லிபுத்தூர் - அத்திகுளம் ரோட்டில் உள்ள ரயில்வே கேட் அருகில் போய்க் கொண்டிருந்த போது டிஎன்-22 .யு.5936 பதிவு எண் கொண்ட இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களை ஆய்வாளர் தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில்¸ இவ்வழக்கின் 1¸ 2 எதிரிகள் தானாக முன் வந்து கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தை ஆய்வாளர் பதிவு செய்துள்ளார். ஒப்புதல் வாக்குமூலத்தில் அசா7கிராம நிர்வாக அலுவலரும்¸ கிராம உதவியாளரும் கையெழுத்து செய்துள்ளனர். 1வது எதிரியின் ஒப்புதல் வாக்குமூலத்தில் உள்ள கையெழுத்து அசாஆ4. 2வுது எதிரியின் ஒப்புதல் வாக்குமூலத்திலுள்ள அசா7ன் கையெபுத்து அசாஆ7. 1வது எதிரி சட்டைப் பையில் இருந்து அறுந்த நிலையில் எடுத்து ஆஜர் செய்த செயினை ஆய்வாளர் அத்தாட்சியில் கைப்பற்றியுள்ளார். அத்தாட்சி அசாஆ5 ஆக குறியிடப் பட்டுள்ளது. பின்னர்¸ 2வது எதிரியிடமிருந்து ஆய்வாளர் சூரிக் கத்தி ஒன்றை அத்தாட்சியில் கைப்பற்றியுள்ளார். அத்தாட்சி அசாஆ6 ஆகவும்¸ சூரிக் கத்தி சாபொ2 ஆகவும் குறியிடப் பட்டுள்ளது.

8. அசா8 திரு. சுப்பையா¸ சார்பு ஆய்வாளர்¸06-08-2011ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த போது¸ அசா1 நிலையத்தில் ஆஜராகி கொடுத்த புகார் மனுவைப் பெற்று நிலைய குற்ற எண் 439-2011 பிரிவு 392 இதசவாக வழக்கு பதிவு செய்துள்ளார். அச்சு முதல் தகவல் அறிக்கை அசாஆ8 ஆக குறியிடப் பட்டுள்ளது. அசா10 இராமசாமி¸ காவல் ஆய்வாளர்¸ வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு 6-8-2011ம் தேதி 12-00 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் - அத்திகுளம் ரோட்டில்¸ டிஎன்-22 .யு.5936 பதிவு எண் கொண்ட இரு சக்கர வாகனத்தில் வந்த 1¸ 2 எதிரிகளிடம் விசாரணை செய்த போது¸ அவர்கள் தானாக முன் வந்து கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தை அசா7 முன்னிலையில் பதிவு செய்து¸ 1வது எதிரியிடமிருந்து தங்க செயினையும்¸ இரு சக்கர வாகனத்தையும் கைப்பற்றியுள்ளார். 1வது எதிரியின் ஒப்புதல் வாக்குமூலத்தின் அனுமதிக்கப் பட்ட பகுதி அசாஆ9¸ 2வது எதிரியின் ஒப்புதல் வாக்குமூலத்தின் அனுமதிக்கப்பட்ட பகுதி அசாஆ10. கைப்பற்றப்பட்ட சொத்துக்களை படிவம்-95 மூலம் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பியுள்ளார். 7-08-2011ம்தேதி காலை 6-00 மணிக்கு சம்பவ இடம் சென்று அசா5 கோவிந்தராஜ்¸ அசா6 புருசோத்தமன்¸ ஆகியோர் முன்னிலையில் பார்வையிட்டு பார்வை மகஜர் அசாஆ11¸ மாதிரி வரைபடம் அசாஆ12 ஆகியவற்றை தயார் செய்துள்ளார். பார்வை மகஜரில் உள்ள அசா5ன் கையெழுத்து அசாஆ2 ஆகவும்¸ அசா6ன் கையெழுத்து அசாஆ3 ஆகவும் குறியிடப் பட்டுள்ளது. பின்னர்¸ விசாரணை முடித்து எதிரிகள் மீது இதச 392¸ 397 பிரிவுகளின்படி வழக்கு பதிவு செய்துள்ளார்.

9. அரசு தரப்பில் விசாரிக்கப்பட்ட சாட்சிகளின் சாட்சியங்களிலிருந்து எதிரிகளுக்கு பாதகமான சங்கதிகள் குறித்து குவிமுச. 313(1)() பிரிவின் கீழ் விசாரணை செய்தபோது எதிரிகள் சாட்சிகள் பொய்யுரைப்பதாக தெரிவித்தனர். எதிரிகள் தரப்பில் விசாரிக்க சாட்சிகள் உள்ளதாக முதலில் தெரிவித்திருந்தாலும்¸ எதிரிகள் தரப்பில் சாட்சிகள் யாரும் விசாரிக்கப்படவில்லை¸ ஆவணங்கள் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை.

10. இவ்வழக்கில் தீர்மானிக்கப்பட வேண்டிய பிரச்சினை யாதெனில்¸ 1¸ 2 எதிரிகள் மீதான இதச 392¸ 397 பிரிவுகளின்படியான குற்றம் அரசு தரப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி நி10பிக்கப்பட்டுள்ளதா¸ என்பதேயாகும்.

11. 06-08-2011ம் தேதி காலை 11-00 மணிக்கு அசா1 முனீஸ்வரி¸ ஸ்ரீவில்லிபுத்தூர் கந்தாடை தெரு சந்திப்பில்¸ ஜவுளி எடுப்பதற்காக சென்று கொண்டிருந்த போது¸ எதிரிகள் இருவரும் டிஎன்- 22 எவி-5936 பஜாஜ் புளுகலர் இரு சக்கர வாகனத்தில் வந்து அசா1ஐ வழிமறித்து நிறுத்தி 2வது எதிரி அவரிடம் சூரிக் கத்தியைக் காட்டி பணம் மற்றும் செயினை கொடு என்று மிரட்டியதாகவும்¸ முனீஸ்வரி தர மறுத்ததும் 1வது எதிரி அகா1ன் கழுத்தில் போட்டிருந்த சுமார் 2 பவுன் எடையுள்ள ரூ.20¸000-00 மதிப்புள்ள கோதுமை மாடல் தங்க செயினை அத்து பறித்து கொள்ளையடித்ததாகவும்¸ அசா1 சத்தம் போட்டதும்¸ அருகில் இருந்தவர்கள் பிடிக்க முயன்ற போது 1¸ 2 எதிரிகள் சூரிக் கத்தியைக் காட்டி மிரட்டி பொது மக்களுக்கும்¸ போக்கு வரத்திற்கும் இடையூறும் பீதியும் ஏற்படுத்தியதாகவும்¸ 1¸ 2 எதிரிகள் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலைய ஆய்வாளரால் இதச 392¸ 397 பிரிவுகளின்படி அரசு தரப்பில் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.

12. இவ்வழக்கில்¸ 1¸ 2 எதிரிகள் மீது அசா1 முனீஸ்வரியிடமிருந்து அவரது கழுத்திலிருந்த தங்க செயினை அத்து கொள்ளையடித்துச் சென்றதாக இதச 392 பிரிவின் படியும்¸ மேற்படி கொள்ளை சம்பவத்தின் போது 1¸ 2 எதிரிகள் கத்தியைக் காட்டி காயப்படுத்தி விடுவதாக மிரட்டியதாக இதச 397பிரிவின் படியும் குற்றச்சாட்டுகள் வனையப் பட்டுள்ளன. வழக்கு சம்பவத்தினைப் பொறுத்து¸ தங்க செயின் கொள்ளையடிக்கப் பட்டது குறித்தும்¸ கத்தியைக்காட்டி மிரட்டி காயப்படுத்த முயற்சித்தது குறித்தும்¸ அசா1 விசாரிக்கப் பட்டுள்ளார். அசா1 தனது சாட்சியத்தில்¸ 06-08-2011ம் தேதி காலை 11-00 மணிக்கு கந்தாடைத் தெருவில் சைக்கிளை உருட்டிக்கொண்டு நடந்து போய்க் கொண்டிருந்த போது¸ இரண்டு நபர்கள் பைக்கில் வந்து தன்னை கீழே தள்ளிவிட்டு செயினை அத்துக் கொண்டு போய் விட்டார்கள் என்றும் அந்த நபர்களை தற்போது தன்னால் அடையாளம் காட்ட முடியாது என்றும்¸ எதிரிகள் வந்த இரு சக்கர வாகனத்தின் பதிவு எண் தற்போது ஞாபகம் இல்லை என்றும்¸ இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் தன்னை தள்ளி விட்டதால் தான் கீழே விழுந்து விட்டதாகவும்¸ அதனால் எதையும் கவனிக்கவில்லை என்றும் பின்னர்¸ அன்று இரவு நகர் காவல் நிலையத்திலிருந்து தகவல் சொன்னதன் பேரில் தானும் தனது அப்பா ஈஸ்வரனும் காவல் நிலையம் சென்று தனது நகை சாபொ1ஐ அடையாளம் காட்டியதாகவும் சாட்சியம் அளித்துள்ளார். அசா2 ஆக விசாரணை செய்யப் பட்டுள்ள அசா2 ஈஸ்வரன்¸ அசா1ன் தந்தை ஆவார். அவர் தனது மகள் அசா1 சம்பவத்தன்று காலை கந்தாடைத் தெருவில் வைத்து தனது செயினை 2 பேர்கள் பைக்கில் வந்து அத்துக் கொண்டு சென்று விட்டதாகவும்¸ காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளதாகவும் கூறியதன் பேரில் சம்பவம் பற்றி தெரிந்து கொண்டுள்ளார். பின்னர்¸ அசா2 அசா1 உடன் காவல் நிலையம் சென்று அசா1ன் நகையை அடையாளம் காட்டியுள்ளார். எனவே¸ அசா2 சம்பவத்தை நேரில் பார்க்கவில்லை என்பதும்¸ அசா1 கூறியதன் பேரில் தான் சம்பவம் பற்றி தெரிந்து கொண்டு¸ அசா1 உடன் காவல் நிலையம் சென்று நகையை அடையாளம் காட்டியுள்ளதாகவும் தெரிய வருகிறது. அசா3 பாஸ்கரன்¸ அசா4 குமரேசன்¸ ஆகியோர்¸ சம்பவத்தின் பொது¸ அசா1 சென்று கொண்டிருந்த கந்தாடைத் தெருவில் நின்று கொண்டிருந்ததாகவும்¸ சம்பவத்தை நேரில் கண்ணுற்றதாகவும்¸ அரசு தரப்பு வழக்கு காணப்படுகிறது. ஆனால்¸ அசா3¸ 4 இருவருமெ வழக்கு பற்றி எதுவும் தெரியாது என்று கூறி பிறழ் சாட்சியாக மாறியுள்ளனர். மேலும்¸ சம்பவம் பற்றியும்¸ அசா1 உடன் புகார் கொடுக்க காவல் நிலையம் சென்றதாக கூறப்படும் சரவணன் என்பவர்¸ அசா9 ஆக விசாரணை செய்யப்பட்டுள்ளார். அவரும் தனது சாட்சியத்தில்¸ வழக்கு பற்றி எதுவும் தெரியாது என்று கூறி பிறழ் சாட்சியாக மாறியுள்ளார்.

13. அரசு தரப்பு வழக்கின்படியும்¸ அசா1ன் புகார் அசாஆ1 மற்றும் போலீசாரிடம் அளித்துள்ள குவிமுச 161(3) வாக்குமூலத்தின் படியும்¸ 06-08-2011ம் தேதி காலை 11-00 மணியளவில்¸ நான் திருவில்லிபுத்தூர் போத்தீஸ் ஜவுளிக் கடைக்குச் சென்று ஜவுளி எடுக்கச் சென்று கொண்டிருந்த போது கந்தாடை தெரு ஜங்சனில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த போது¸ தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பஜாஜ் புளு கலர் வண்டி எண் டிஎன்-22 .வி.5936 ஐ அடையாளம் பார்த்தால் காட்டக் கூடிய வளர்த்தியான கருப்பு நிறம் கொண்ட தடித்த திரேகம் கொண்ட ஒருவன் ஓட்டிக் கொண்டும். மேற்படி வண்டியின் பின்னால் பார்த்தால் அடையாளம் காட்டக் கூடிய புதுநிறம் கொண்ட நல்ல திரேகம் கொண்ட ஒருவனும் வந்து தன்னை வழிமறித்து வண்டியை நிப்பாட்டினார்கள். பின்னால் அமர்ந்து உட்கார்ந்து வந்தவன் வண்டியை விட்டு கீழே இறங்கி என்னிடம் வந்து சூரிக் கத்தியை காண்பித்து மரியாதையாக உன்னிடம் உள்ள பணத்தை கொடு¸ கழுத்தில் கிடக்கிற செயினை கழட்டிக் கொடு என மிரட்டினான். நான் என்னிடம் பணம் கிடையாது நகையை கழற்றி கொடுக்க முடியாது என்று சொன்னேன். வண்டியை ஓட்டி வந்தவன் வண்டியை நிறுத்தி விட்டு வந்து உனக்கு அவ்வளவு திமிரா என்று கூறி கழுத்தில் கிடந்த செயினை அத்துக் கொண்டான். நான் அய்யோ அம்மா என்று கத்தினேன். பக்கத்தில் நடந்து சென்ற நபர்கள்¸ கடைகளில் நின்று கொண்டிருந்தவர்கள். நான் போட்ட சத்தத்தை கேட்டு அவர்களை பிடிக்க வந்தார்கள். வண்டியின் பின்னால் உட்கார்ந்து இருந்தவன் சூரிக் கத்தியை காண்பித்து யாராவது எங்களை பிடிக்க வந்தால் குத்தி கொல்லால் விடமாட்டென் என்று சத்தமாக கூறினான். வண்டியை ஓட்டி வந்தவன்¸ வண்டியின் பின்னால் உட்கார்ந்து வந்த நபரிடம் சூரிக் கத்தியை வாங்கி நாங்கள் யார் தெரியுமா நாங்கள் பெரிய ரவுடிங்க எங்களை யாராவது பிடிக்க வந்தால் குத்தி கொல்லாமல் விடமாட்டொம் என்று கூறி ரோட்டில் அங்குமிங்குமாக ஓடினான். இதனால் அந்த வழியாக வந்த பாதசாரிகளும்¸ சைக்கிளில் வந்தவர்களும்¸ சைக்கிளை போட்டுவிட்டு ஓடினார்கள். இதனால் அந்த இடம் பாலைவனம் போல் காட்சியளித்தது. வண்டியை ஓட்டி வந்தவன் மேற்படி வண்டியை ஓட்டிக் கொண்டும்¸ பின்னால் அமர்ந்து வந்தவர் வண்டியின் பின்னால் அமர்ந்தும் மேற்கு நோக்கி சென்று விட்டார்கள். என்னிடம் இருவரும் கொள்ளையடித்த தங்க செயின் சுமார் 2 பவுன் இருக்கும். வீனஸ் மாடல் கொண்டது. மதிப்பு ரூ.25¸000-00 இருக்கும் " என்று குறிப்பிட்டுள்ளார். மேற்படி சம்பவம் குறித்து அசா1 காவல் நிலையத்தில் காலை 11-45 மணிக்கு புகார் கொடுத்துள்ளதாக அசாஆ1 புகார் மனுவிலிருந்து தெரியவருகிறது. போலீஸ் விசாரணையிலும் மேற்கண்டவாறே அசா1 சம்பவம் குறித்து விவரித்துள்ளார். அசா1 தனதுபோலீசார் விசாரணையில்¸ "பின்பு 06-08-2011ம் தேதி இரவு 11-30 மணிக்கு திருவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் இருந்து என்னிடம் செயினை பறித்து சென்ற நபர்களை பிடித்து வைத்திருப்பதாகவும் செயினையும் கண்டுபிடித்து வைத்திருப்பதாகவும்¸ சொன்ன தகவலின் பேரில் நானும்¸ எனது அப்பாவும் திருவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் டுவீலரில் வந்து அங்கு இருந்த என்னிடம் நகையை பறித்துச்சென்ற இரு நபர்களையும் அடையாளம் காட்டினேன். தடித்த திரேகம் உள்ளவன் அத்திகுளம் காலனி¸ மாடசாமி மகன் பாலமுருகன்¸ 24 வயது உள்ளவன் என்பதும்¸ ஒல்லியான திரேகம் உள்ள வண்டியின் பின்புறம் வந்தவன் மேற்படி ஊர் சங்கிலி வீரப்பன் கோவில் தெரு ராமர் மகன் பாலமுருகன் என்பவர் என்பதும் தெரிந்து கொண்டேன். ஷையார்கள் என்னிடம் அத்துச் சென்ற தங்க செயினை அவர்கள் வந்த டுவீலர் டிஎன்-22 .வி.5936 பஜாஜ் புளுகலர் வண்டியையும் அடையளாம் காட்டினேன். உடன் என் அப்பாவும் பார்த்து அடையாளம் தெரிந்து கொண்டார். " என்று குறிப்பிட்டுள்ளார்.

14. எனவே¸ அரசு தரப்பு வழக்குப்படியாக¸ அசா1 காவல் நிலையத்தில் வைத்து 1¸ 2 எதிரிகளையும் வழக்குச் சொத்தான தங்க செயின் சாபொ1ஐயும்¸ திருடுவதற்கு எதிரிகள் பயன்படுத்திய டிஎன்-22 .வி.5936 வாகனத்தையும் அடையாளம் காட்டியுள்ளதாகவும்¸ அசா1 உடன் சென்ற அசா2ம் அடையாளம் தெரிந்து கொண்டதாகவும் காணப்படும் நிலையில்¸ இவ்வழக்கில் அசா1¸ 2 இருவருமே எதிரிகளைப் பற்றி எவ்வித சாட்சியமும் அளிக்கவில்லை. அசா1¸ 2 இருவரும் அரசு தரப்பில் பிறழ் சாட்சிகளாகவும் அறிவிக்கப் பட்டுள்ளனர். மேலும்¸ வழக்கு சம்பவத்தின் போது¸ சம்பவ இடத்தில் இருந்ததாக கூறப்படும் அசா3 பாஸ்கரன்¸ அசா4 குமரேசன்¸ ஆகியோரும் சம்பவத்திற்கு பின்னர்¸ அசா1 உடன் காவல் நிலையத்தில புகார் கொடுக்க அசா1 உடன் சென்றதாக கூறப்படும் அசா9 சரவணன் என்பவரும்¸ வழக்கு சம்பவம் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்று பிறழ் சாட்சிகளாக மாறியுள்ளனர். எனவே¸ வழக்கின் புகார்தாரரான அசா1ம்¸ காவல் நிலையத்தில் அசா1 உடன் சென்று எதிரிகளை அடையாளம் தெரிந்து கொண்டுள்ள அசா1ன் தந்தை அசா2ம்¸ சம்பவ சாட்சிகளாக முன்னிடப் பட்டுள்ள அசாஅசா4 மற்றும் அசா9ம் எதிரிகள் தான் வழக்குச் சம்பவத்தில் ஈடுபட்டனர் என்று தெளிவான சாட்சியம் அளிக்காமல் பிறழ் சாட்சிகளாக மாறியுள்ளது அரசு தரப்பு வழக்கினை மிகவும் பாதித்துள்ளது என்று இந்நீதிமன்றம் முடிவு செய்கின்றது.

15. அசா7 திரு. அண்ணாமலை செல்வன்¸ விழுப்பனூர் கிராம நிர்வாக அதிகாரி¸ தனது சாட்சியத்தில்¸ 06-08-2011ம் தேதி பகல் 12-00 மணிக்கு திருவில்லிபுத்தூர் நகர் ஆய்வாளர் அழைத்ததன் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர்-அத்திகுளம் ரோட்டில் உள்ள ரயில்வே கேட் அருகில் போய்க் கொண்டிருக்கும் போது¸ இரு சக்கர வாகனம் பதிவு எண் டிஎன்-22 .வி.5396 பதிவு உள்ள இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களை ஆய்வாளர் நிறுத்தி சோதனை செய்ததாகவும்¸ எதிரிகள் பெயர் மாடசாமி மகன் பாலமுருகன்¸ மாடசாமி மகன் முருகன் என்று தெரிந்து கொண்டதாகவும்¸ அவர்களைப் பார்த்தால் நான் அடையாளம் காட்டுவேன் இன்று அவர்கள் ஆஜரில் இல்லை என்றும் எதிரிகளை போலீசார் தனித்தனியாக விசாரித்த பொது எதிரிகள் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தை ஆய்வாளர் பதிவு செய்தார் என்றும் ஒப்புதல் வாக்குமூலத்தில் தானும் கிராம உதவியாளரும் கையெழுத்து செய்ததாகவும்¸ 1வது எதிரியின் ஒப்புதல் வாக்குமூலத்தில் உள்ள கையெழுத்து அசாஆ4 என்றும்¸ 2வது எதிரியின் ஒப்புதல் வாக்குமூலத்திலுள்ள அசா7ன் கையெழுத்து அசாஆ7 என்றும்¸ எதிரி மாடசாமி மகன் பாலமுருகன் சட்டைப் பையில் இருந்த அறுந்த நிலையில் இருந்த செயினை எடுத்துஆஜர் செய்ததை அத்தாட்சியில் கைப்பற்றியதாகவும்¸ அத்தாட்சியில் தான் கையெழுத்து செய்ததாகவும்¸ அத்தாட்சி அசாஆ5 என்றும்¸ பின்னர்¸ 2வது எதிரியிடமிருந்து சூரிக் கத்தி ஒன்றை போலீசார் அத்தாட்சியில் கைப்பற்றினர் என்றும் அத்தாட்சி அசாஆ6 என்றும்¸ அந்த கத்தி சாபொ2 என்றும் கூறியுள்ளார். மேற்படி சம்பவத்தின் போது அசா7 உடன் இருந்து மேற்படி ஒப்புதல் வாக்குமூலத்திலும் அத்தாட்சியிலும் கையெழுத்து செய்ததாக கூறப்படும் கிராம உதவியாளர் திரு. ஜெய்சங்கர்¸ என்பவர் அரசு தரப்பில் விசாரணை செய்யப் படவில்லை.

16. மேற்படி சம்பவம் குறித்து அசா10 ஆய்வாளர்¸ தனது சாட்சியத்தில்¸ 06-08-2011ம் தேதி 12-00 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் - அத்திகுளம் மெயின் ரோட்டில் வாகனச் சோதனை செய்த போது பின்னால் பெயர் விலாசம் கேட்டுத் தெரிந்த எம். பாலமுருகன். ஆர். பாலமுருகன் ஆகியோர்களை கைது செய்து சாட்சிகள் வி... அண்ணாமலை செல்வம்¸ கிராம உதவியாளர் ஜெய்சங்கர் ஆகியோர் முன்னிலையில் எதிரிகள் இருவரும் தனித்தனியே தானாக முன் வந்து ஒரு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்கள் என்றும்¸ எதிரி எம். பாலமுருகன் சம்பவ இடத்தில் வைத்து ஆஜர் செய்த அறுந்த நிலையில் உள்ள 2 பவுன் எடையுள்ள தங்க செயினையும்¸ டிஎன்¸22 .யு-5936 என்ற வாகனத்தையும் சாட்சிகள் முன்னிலையில் அத்தாட்சியில் கைப்பற்றினேன் என்றும்¸ ஆர். பாலமுருகன்¸ எடுத்து ஆஜர் செய்த சூரிக் கத்தியை சாட்சிகள் முன்னிலையில் அத்தாட்சியில் கைப்பற்றினார்கள் என்றும்¸ 1வது எதிரி கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அனுமதிக்கப் பட்ட பகுதி அசாஆ9¸ 2வது எதிரி கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அனுமதிக்கப்பட்ட பகுதி அசாஆ10¸ 1வது எதிரி எம்.பாலமுருகன் ஆஜர்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் அறுந்த நிலையில் இருந்த தங்கச் சங்கிலி ஆகியவற்றை ஒரே அத்தாட்சியில் கைப்பற்றினேன் என்று கூறியுள்ளார்.

17. மேற்படி அசா7 கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அசா10 ஆய்வாளர்¸ ஆகியோரின் சாட்சியங்களை பரிசீலனை செய்கையில்¸ அசா1 கொடுத்த அசாஆ1 புகாரினை பெற்ற அசா8 சார்பு ஆய்வாளர்¸ பகல் 11-45 மணிக்கு வழக்கு பதிவு செய்துள்ளதாக அசாஆ8 முதல் தகவல் அறிக்கையிலிருந்து தெளிவாகிறது. மேற்படி வழக்கு பதிவு செய்யப்பட்ட 15 நிமிடங்களில் அசா7 கிராம நிர்வாக அலுவலருக்கும்¸ கிராம உதவியாளருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் அசா10 ஆய்வாளருடன் ஸ்ரீவில்லிபுத்தூர் - அத்திகுளம் ரோட்டில் ரயில்வே கேட் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது எதிரிகளை கைது செய்ததாக கூறுவது ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை. அது குறித்து அசா10 ஆய்வாளர்¸ தனது குறுக்கு விசாரணையில்¸ அசா1 புகார் கொடுக்க வரும் போது நான் காவல் நிலையத்தில் இல்லை. நான் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில்ரோந்து பணியில்இருந்தேன். எனக்கு போன் மூலம் சொன்ன தகவலை வைத்து எதிரியைச் தேடிச் சென்றேன் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால்¸ வழக்கு பதிவு செய்த அசா8 சார்பு ஆய்வாளர் சுப்பையா¸ 11-45 மணியளவில் அத்திகுளம் 2-92-எ நடுத் தெருவில் குடியிருக்கும் ஈஸ்வரன் மகள் முனீஸ்வரி வயது 20 என்பவர் நிலையத்தில் ஆஜராகி கொடுத்த புகார் மனுவைப் பெற்று வழக்கு பதிவு செய்ததாகவும்¸ வழக்கின் விசாரணைக்கு ஆய்வாளர் பார்வைக்கு வைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அசா10 ஆய்வாளரும்¸ சார்பு ஆய்வாளர் பதிவு செய்து என் விசாரணைக்கு அனுப்பியதை விசாரணைக்கு மேற்கொண்டென் என்றும் 06-08-2011ம் தேதி 12-00 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் அத்திகுளம் மெயின் ரோட்டில் வாகனச் சோதனை செய்த போது பின்னால் பெயர் விலாசம்¸ கேட்டுத் தெரிந்த எம்.பாலமுருகன்¸ ஆர்.பாலமுருகன் ஆகியோர்களை கைது செய்ததாக குறிப்பிட்டுள்ளார். அசா8 வழக்கு பதிவு செய்த போது அசா10 காவல் ஆய்வாளர் நிலையத்தில் இல்லை என்பதும்¸ போன் மூலம் தகவல் தெரிந்து கொண்டுள்ள தாகவும்¸ 11-30 மணிக்கு வாகன தணிக்கை செய்ய ஆரம்பித்துள்ளதாகவும்¸ அசா10ன் குறுக்கு விசாரணையில் இருந்து தெரியவரும் நிலையில்¸ எவ்வாறு அசா8யிடமிருந்து விசாரணைக்காக வழக்கின் கோப்பினை பெற்றார் என்பதும் சம்பவம் நடந்த 15 நிமிடங்களில் அசா10 காவல் ஆய்வாளர் அசா7க்கும் மற்றொரு கிராம உதவியாளருக்கும் தகவல் கூறி வரவழைத்து வாகன சோதனை செய்து எதிரிகளை கைது செய்ததாக கூறுவதும் நம்பத் தகுந்ததாக அமையவில்லை என்று இந்நீதிமன்றம் கருதுகிறது.


18. .அசா10 ஆய்வாளர் அசா7 கிராம நிர்வாக அலுவலரையும் அவரது உதவியாளரையும் அழைத்த போது அவர்கள் எங்கு இருந்தனர். எத்தனை மணிக்கு ஆய்வாளரால் அழைக்கப் பட்டனர்¸ எத்தனை மணிக்கு எந்த இடத்தில் அசா7 ஆய்வாளரை சந்தித்து ஆய்வாளருடன் இணைந்து கொண்டனர் என்பது குறித்து அசா7 மற்றும் அசா10 ஆகியோர் எவ்வித சாட்சியமும் அளிக்கவில்லை. அசா7 தனது குறுக்கு விசாரணையில்¸ போலீசார் போட்ட 50¸ 60 வழக்கில் நான் சாட்சியாக உள்ளேன். எங்களுடைய வருவாய் சம்பந்தப்பட்ட வேலையைத் தவிர வேறு வேலைக்கு செல்ல வேண்டுமென்றால் உயரதிகாரிகளிடம் அனுமதி வாங்கித் தான் செல்ல வேண்டும் என்றால் சரி என்றும்¸ எழுத்து மூலமான அனுமதி இந்த வழக்கு சம்பந்தமாக மேலதிகாரியிடம் பெற்றுக் கொள்ளவில்லை என்பதையும் ஒப்புக் கொள்கிறார். மேலும்¸ ரயில்வே கேட் அருகில் ஒரு ஆளை விசாரிக்க வெண்டுமென்று பொலீசார் என்னை கூப்பிட்டார்கள் எத்தனை மணிக்கு போலீசார் வந்தார்கள் என்று ஞாபகம் இல்லை என்றும்¸ நான் போவதற்கு முன்பு எதிரிகளை பிடித்து வைத்திருந்தார்கள் என்றும் கூறியுள்ளார். எனவே¸ அசா7ன் சாட்சியத்திலிருந்து அசா10 ஆய்வாளர்¸ வழக்கு பதிவு செய்வதற்கு முன்பு 11-30 மணிக்கே வாகன தணிக்கை செய்து எதிரிகளை பிடித்து வைத்திருந்து 12-00 மணிக்கு அசா7 வரவழைத்து ஒப்புதல் வாக்குமூலம் மற்றும் அத்தாட்சியில் கையொப்பம் பெற்று ஏற்கனவே தயார் செய்திருந்த வழக்கில் எதிரிகளை குற்றவாளிகளாக சேர்த்துள்ளனரா என்ற ஐயப்பாடும் எழுகின்றது. மேலும்¸ அசா10 ஆய்வாளரின் சாட்சியத்திலிருந்து எதிரிகளைக் கைது செய்து அவர்கள் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் பேரில் 1வது எதிரியிடமிருந்து இரு சக்கர வாகனமும்¸ தங்க செயினும் கைப்பற்றப் பட்டதாகவும்¸ 2வது எதிரியிடமிருந்து சூரிக் கத்தி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காணப்படும் நிலையில்¸ அசா7ன் சாட்சியத்திலிருந்து இவ்வழக்கில் எதிரிகள் திருடுவதற்கு பயன்படுத்திய டிஎன்-22 .வி.5936 பதிவு எண்கொண்ட இரு சக்கர வாகனம் கைப்பற்றப்பட்டது குறித்து எவ்வித சாட்சியமும் அமையவில்லை. மேலும்¸ ஸ்ரீவில்லிபுத்தூர் - அத்திகுளம் ரோட்டில் உள்ள ரயில்வே கேட் என்பது ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையத்தின் அருகில் உள்ளது என்பதும் எப்பொழுதும் பொது மக்கள் சென்று வரக் கூடிய ரோடு என்பதும் தெரியவரும் நிலையில்¸ மேற்படி இடத்தில்¸ எதிரிகளை கைது செய்து சொத்துக்களை கைப்பற்றியது குறித்து அந்த வழியாக சென்ற பொதுமக்களில் யாரையேனும் சாட்சியாக விசாரணை செய்வதற்கு அரசு தரப்பில் முயற்சி மேற்கொள்ளாமல் அசா7ஐயும் அவரது உதவியாளரையும் வரவழைத்து எதிரிகளின் ஒப்புதல் வாக்குமூலத்திலும்¸ அத்தாட்சியிலும் கையெழுத்து பெற்றுள்ளதாக கூறுவது ஏற்றுக் கொள்ளத் தக்கதாக அமையவில்லை என்று இந்நீதிமன்றம் கருதுகிறது.

19. எனவே¸ மேலே ஆராயப்பட்ட வகையில்¸ எதிரிகள் அசா1யிடமிருந்து தங்க செயினை அத்து கொள்ளையடித்துச் சென்றனர் என்பதும்¸ அசா1ஐ காயப்படுத்தி விடுவதாக கத்தியைக் காட்டி மிரட்டினார்கள் என்பதும்¸ அசா1 முதல் 4 மற்றும் 9ன் சாட்சியங்களின் மூலமாக நிரூபிக்கப் படவில்லை. அசா7 கிராம நிர்வாக அலுவலரின் சாட்சியம்¸ எதிரிகளை கைது செய்து¸ அவர்களிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலம் பெற்று சொத்துக்கள் அத்தாட்சியில் கைப்பற்றப் பட்டது குறித்து தெளிவாக நிரூபிப்பதாக அமையவில்லை. இந்நிலையில்¸ வழக்கு பதிவு செய்துள்ள அசா8 சார்பு ஆய்வாளரின் சாட்சியத்தினையும்¸ வழக்கினை புலன் விசாரணை செய்து குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக கூறப்படும்¸ அசா10 ஆய்வாளரின் சாட்சியத்தினையும் வைத்து எதிரிகள் மீதான குற்றச்சாட்டு தகுநிலை ஐயப்பாட்டிற்கு அப்பால் நிரூபிக்கப் பட்டுள்ளதாக கருத இயலாது என்று இந்நீதிமன்றம் கருதுகிறது. எனவே¸ வழக்கிலிருந்து எதிரிகளை விடுதலை செய்து தீர்ப்பளிப்பது நீதியின்பால் பட்டது என்று இந்நீதிமன்றம் முடிவு செய்கின்றது.

20. இவ்வழக்கில் ஆஜர்படுத்தப்பட்டுள்ள டி.என்-22 .யு-5936 பஜாஜ் புளுகலர் இருசக்கர வாகனத்தில் எதிரிகள் வந்து திருடிச் சென்றதாக கூறப்படும் நிலையில்¸ மேற்படி இரு சக்கர வாகனம் எதிரிகளுக்கு சொந்தமானது தான் என்று அரசு தரப்பில் உரிய ஆவணங்கள் மூலம் நிரூபிக்கப் படவில்லை. வழக்குச் சொத்தினை கோரி 3ம் நபர்கள் யாரும் நீதிமன்றத்தில் மனுச் செய்யவில்லை. இந்நிலையில்¸ வழக்குச் சொத்தான இரு சக்கர வாகனம் யாருக்கு பாத்தியமானது என்று நிரூபிப்பதற்கு உரிய ஆவணங்களோ சாட்சியங்களோ இல்லாத நிலையில்¸ அதனை அரசுக்கு ஆதாயப்படுத்தி உத்தரவிடலாம் என்று இந்நீதிமன்றம் முடிவு செய்கின்றது.

21. 1¸ 2 எதிரிகள் மீதான குற்றச்சாட்டு தகுநிலை ஐயப்பாட்டிற்கு அப்பால் மெய்ப்பிக்கப் படாததால்¸ 1¸ 2 எதிரிகள் இதச392 மற்றும் 397 பிரிவுகளின்படி குற்றவாளிகள் இல்லை என்று தீர்மானித்து குவிமுச 235(1) பிரிவின் கீழ் விடுதலை செய்து தீர்ப்பளிக்கிறேன்.

22. இந்த வழக்கில் ஆஜர்படுத்தப்பட்டுள்ள சொத்து பி.ஆர் 10-2012 சாபொ1 சுமார் 2 பவுன் எடையுள்ள வீனஸ் தங்க செயின் ஒன்று அசா1யிடம் இடைக்கால பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேல்முறையீடு காலத்திற்கு பின் பிணைமுறி ரத்தாகவும் தங்க செயினை அவரே வைத்துக் கொள்ளவும் உத்தரவிடப் படுகிறது. சாபொ2 சூரிக் கத்தியை மேல்முறையீடு காலத்திற்கு பின் அழிக்க உத்தரவிடப் படுகிறது. டி.என்-22 .யு-5936 பஜாஜ் புளுகலர் இருசக்கர வாகனத்தினை மேல்முறையீடு காலத்திற்கு பின் அரசுக்கு ஆதாயப்படுத்த உத்தரவிடப்படுகிறது.

இத்தீர்ப்புரை என்னால் சுருக்கெழுத்தரிடம் கூறப்பட்டு அவரால் தட்டச்சு செய்யப்பட்டு என்னால் பிழை நீக்கம் செய்யப்பட்டு 2014ம் ஆண்டு ஜனவரி திங்கள் 31-ம் நாளாகிய இன்று என்னால் எதிரிகள் முன்பு அவையறிய பகரப்பட்டது.
தலைமை நீதித்துறை நடுவர்
திருவில்லிபுத்தூர்.


No comments:

Post a Comment