மழைநீர் உட்பட அனைத்து நீர்களையும் வாதியின் வாசலில் கடத்தி வாதியின் அனுபவத்தில் இடைஞ்சல் செய்து வருகிறார்

மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம்
கொடைக்கானல்
முன்னிலை திரு. ஆர். சுப்பிரமணியன்¸ எம்.பி.எல்பி.எட்டி.எல்.எல்
மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர்
கொடைக்கானல்¸
2015 ம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 27-ம் நாள் வியாழக்கிழமை
தமிழுக்கு மன்மத வருடம் (திருவள்ளுவர் ஆண்டு) ஆவணி மாதம் 10-ம் நாள்
அசல் வழக்கு எண் 168 /1999
மனோகரன் ... வாதி
/எதிர்/
தனசேகரன் ... பிரதிவாதி

வழக்கிலிருந்து முக்கிய குறிப்புகள்:

வாதி தாக்கல் செய்துள்ள பிராதின் சுருக்கம்
தாவா சொத்தானது ஆதியில் ஏ.ஆர்.எஸ்.சுப்பிரமனியன் செட்டியார் அவர்களுக்கு பாத்தியப்பட்ட சொத்தாகும். வாதியும்¸ பிரதிவாதியும் உடன்பிறந்த சகோதரர்கள் ஆவார்கள். வாதியின் தந்தைக்கு இரண்டு மனைவி உள்ளார்கள் அதில் முதல் மனைவிக்கு பிறந்த பிள்ளைகளுக்கு ஒரு பாகத்தையும்¸ இரண்டாவது மனைவிக்கு நான்கு ஆண்களும்¸ நான்கு பெண்பிளைகளும் உள்ளார்கள். அவர்களுள் பெண்கள் எல்லோருக்கும் திருமணம் செய்து கொடுக்கப்பட்டது. சுப்பிரமணியன் செட்டியார் உயிருடன் இருக்கும்போதே 1986-ம் ஆண்டு வாதிக்கும்¸ பிரதிவாதிக்கும் வாய்க்கராலின்படி வரைபடத்தில் காட்டியுள்ளதுபோல் இரண்டு வீடுகளையும்¸ பாகப்பிரிவிணை செய்து கொடுக்கப்பட்டது. மேற்படி பாகபிரிவிணையின்படி வாதிக்கு ஒரு கழிப்பறையும்¸ பிரதிவாதிக்கு ஒரு கழிப்பறையும் ஒதுக்கப்பட்டு இரு கழிப்பறைக்கும் பொது செப்டிக்டேங் அமைக்கப்பட்டும் தண்ணீர் குழாயும்¸ தண்ணீர் தொட்டியும்¸ குளியல் அறையும் பொதுவாகவே அமைக்கப்பட்டு அனுபவித்து வந்தார்கள். பிரதிவாதியானவர் மழைநீர் உட்பட அனைத்து நீர்களையும் வாதியின் வாசலில் கடத்தி வாதியின் அனுபவத்தில் இடைஞ்சல் செய்து வருகிறார் என்றும்¸ மேற்படி உரிமைகளில் வாதியின் உரிமையை பிரதிவாதி தடை செய்வதற்கோ¸ இடைஞ்சல் செய்வதற்கோ எந்தவித உரிமையும் இல்லை என்றும்¸ பிரதிவாதி 10.10.1999-ம் தேதி மேற்படி பாத்திய அனுபவத்தில் பிரதிவாதி இடைஞ்சல் செய்ய முயற்சித்தார். அதை வாதி தடை செய்து விட்டார் என்றும்¸ எனவே பிரதிவாதியோ அவரது ஆட்களோ வாதியின் அனுபவத்தில் இடைஞ்சல் செய்யாமல் இருக்க நிரந்தர உறுத்துக்கட்டளை கோரி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிரதிவாதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட எதிருரையின் சுருக்கம்
பிரதிவாதி 1976-ம் ஆண்டு மூத்ததாரத்து பிள்ளைகளுக்கு மட்டுமே தனது தந்தையால் பிரித்து கொடுக்கப்பட்டது. வாதி மற்றும் பிரதிவாதி குடியிருந்து வரும் இரண்டு வீடுகளும் 1987-ம் வருடத்தில் மூத்ததாரத்து மக்கள் மற்றும் வாதி பிரதிவாதியின் தாய்மாமனான சுப்பையா ஆகியோர் முன்னிலையில் வாய்க்கராலாக பிரித்துக் கொடுக்கப்பட்டது. மொத்த வீட்டை இரண்டாக பிரித்து வாதிக்கு மேற்கு பக்கமும்¸ பிரதிவாதிக்கு கிழக்கு பக்கமும் பிரித்து கொடுக்கப்பட்டது. பிரதிவாதிக்கு ஒதுக்கப்பட்ட பாகத்தில் சமையலறை¸ குளியலறை¸ கழிவறை மற்றும் தண்ணீர் தொட்டி ஆகியவை கட்டப்பட்டிருந்தது. வாதிக்கு இவைகள் இல்லாததால் வாதியின் இடத்தில் குளியலறை¸ கழிவறை கட்டிக்கொள்ளும் பொருட்டு பிரதிவாதி ரூ.50¸000/- செலவுத்தொகையாக கொடுக்க வேண்டுமென்று பேசப்பட்டு மேற்படி தொகையை வைத்து வாதிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கட்டிக்கொள்வது என்றும் வாதி கட்டி முடிக்கும் வரை பயன்படுத்திக்கொள்வது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

மேற்படி பணம் ரூ.50¸000/-ஐ பெற்றுக்கொண்டு வாதியின் காலியிடத்தில் சமையல் அறை¸ குளியல் அறை¸ கழிப்பறை¸ மற்றும் தண்ணீர் தொட்டி ஆகியவைகளை கட்டிக்கொண்டு அனுபவம் செய்து வருகிறார். வாதியின் வீட்டிற்கு மேற்கிலும் கிழக்கிலும் வழி உள்ளது இந்த வழிகளையே வாதி பயன்படுத்தி வந்தார். அதேபோல் பிரதிவாதி வடக்கிலும்¸ கிழக்கிலும் உள்ள வழியை பயன்படுத்தி வந்தார். இவ்வாறான சூழ்நிலையில் இந்த பிரதிவாதிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வாதிக்கு எந்தவித உரிமையும் இல்லை என்றும்¸ தண்ணீர் குழாய் பொதுவானது என்று பிராதில் சொல்லப்பட்டிருப்பது பொய்யென்றும்¸ இருவருக்கும் தனித்தனியாக தண்ணீர்க்குழாய் இணைப்பு உள்ளது என்றும்¸ பிரதிவாதியின் வீட்டின் முன்வாசலில் தேங்கும் மழைநீர் அனைத்தும் ஆதிகாலத்தில் இருந்தே கிழக்கில் இருந்து மேற்காக போய்கொண்டிருக்கிறது. அதை தடுக்கும் பொருட்டு வாதி இடைஞ்சல் செய்து வருகிறார் என்றும்¸ மழை நீர் செல்லும் வழியை அவ்வப்போது அடைத்து வருவதால் மழைநீர் செல்லமுடியாமல் தேங்கி பிரதிவாதிக்கு பெருத்த கஷ்டம் ஏற்படுகிறது. குளியலறை¸ கழிவறை¸ தண்ணீர்தொட்டி¸ சமையலறை ஆகியவைகளில் வாதிக்கு எந்தவிதமான உரிமையும் இல்லை என்றும்¸ குறிப்பாக பிராது தாக்கல் செய்யும் காலத்தில் இவைகளில் வாதிக்கு எவ்வித உரிமையோ¸ அனுபவமோ இல்லை. இவைகள் அனைத்தும் இந்த பிரதிவாதிக்கே பாத்தியப்பட்டு பிரதிவாதியின் அனுபவத்தில் உள்ளவைகளாகும். வாதியின் அனுபவத்தில் இருந்ததாகவும்¸ அதன்மீது இடைஞ்சல் செய்ததாகவும் வாதி கூறுவது பொய்யென்றும்¸ வாதி தூய கரங்களுடன் நீதிமன்றத்தை அனுகவில்லை என்றும்¸ பல உண்மைகளை மறைத்தும்¸ வாதியின் வீட்டிற்கும்¸ பிரதிவாதியின் வீட்டிற்கும் நடுவில் உள்ள கதவை நிரந்தரமாக அடைக்ககோரியும்¸ பிரதிவாதி மீது வாதி ரூ.50000/- நஷ்டிடு கேட்டும் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். ஆகவே வாதியின் இந்த வழக்கை இந்த பிரதிவாதியின் செலவுத்தொகையுடன் தள்ளுபடி செய்ய வேண்டுமென்று குறிப்பிட்டுள்ளார்.

இவ்வழக்கில் கீழ்கண்ட எழுவினாக்கள் வனையப்பட்டுள்ளன.
1. தாவா காலத்தில் தாவா சொத்து வாதியின் அனுபவத்தில் இருந்து வந்ததா?
2. வழக்கில் வாதி கோரிய நிரந்தர உறுத்துக் கட்டளைப்பரிகாரம் வாதிக்கு கிடைக்கத்தக்கதா?
3. வாதிக்கு வேறு என்ன பரிகாரம் கிடைக்கத்தக்கது?

இந்த வழக்கில் வாதி தரப்பில் மனோகரன் வா.சா.1-ஆகவும்¸ பொன்ராஜ் வா.சா.2 ஆகவும்¸ பால்ராஜ் வா.சா.3 ஆகவும் விசாரிக்கப்பட்டு நிரூபண வாக்கு மூலம் தாக்கல் செய்யப்பட்டு வாதி தரப்பில் வா..சா..1 முதல் 6 வரையான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிரதிவாதி தரப்பில் தனசேகரன் வா.சா.1 ஆகவும்¸ வெங்கடாசலம் வா.சா.2 ஆகவும் விசாரிக்கப்பட்டு பிரதிவாதி தரப்பில் சான்றாவணம் 1 மட்டும் குறியீடு செய்யப்பட்டுள்ளது.

வாதி தரப்பு கற்றறிந்த வழக்கறிஞர் தனது வாதத்தின்போது தாவா சொத்தானது ஆதியில் சுப்பிரமணியன் செட்டியார் அவர்களுக்கு பாத்தியபட்டது என்றும்¸ வாதியும்¸ பிரதிவாதியும் உடன்பிறந்த சகோதரர்கள் ஆவார்கள். வாதியின் தந்தைக்கு இரண்டு மனைவிகள் உள்ளார்கள். அதில் ஒருதாரத்தின் பிள்ளைகள் சின்னஞ்செட்டியார்¸ சிவராஜ்ராமசாமி¸ வெங்கடாசலம்¸ ஆகியோர்கள் பாகத்தை தனியாக பிரித்து கொடுத்து விட்டார்கள் என்றும்¸ மற்றொரு மனைவியின் மக்களான மனோகரன்¸ தனசேகரன்¸ ராஜேந்திரன் மற்றும் ராஜகோபால் என்ற ஆண்களும்¸ அன்னபூரணி¸ வசந்தா¸ சின்னம்மாள் மற்றும் ராஜேஸ்வரி ஆகிய பெண்களும் உள்ளார்கள் என்றும்¸ அதில் பெண் குழந்தைகள் அனைவரும் திருமணம் செய்து சென்றுவிட்டதால் சுப்பிரமணியன் செட்டியார் உயிருடன் இருக்கும்போதே தாவா வீட்டை மட்டும் 1986-ம் ஆண்டில் ஏற்பட்ட வாய்க்கராலின் அடிப்படையில் குடும்பச் சொத்தை பாகபிரிவிணை செய்து கொடுத்துவிட்டார். மேற்படி பாகப்பிரிவிணையின் அடிப்படையில் இரு வீடுகளையும் வாதியும்¸ பிரதிவாதியும் ஆளுக்கொரு வீட்டை அனுபவித்துக்கொள்ள வேண்டியது என்றும்¸ மேற்படி பிரிவிணை வரைபடம் வரைபடம் மூலமாக காட்டப்பட்டுள்ளது என்றும்¸ பிரிவிணை செய்தபோது பொதுவான வழியிடத்தினை இருவரும் அனுபவித்துக்கொள்ள வேண்டியது என்றும்¸ பிரிக்கப்பட்ட சொத்தில் இன்றுவரை வாதியும்¸ பிரதிவாதியும் எந்தவித இடைஞ்சலுமின்றி அனுபவித்து வரும் நிலையில் மேற்கண்டவாறு பாகம் பிரிக்கப்பட்டபோது வாதிக்கு ஒரு கழிவறையும்¸ பிரதிவாதிக்கு ஒரு கழிவறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டு கழிவறைகளுக்கும் பொதுவாகவே செப்டிக் டேங் அமைக்கப்பட்டுள்ளது. மேற்படி செப்டிக் டேங் பொது அனுபவத்தில் அனுபவித்துக்கொள்ள வேண்டியது என்று ஒப்புக்கொள்ளப்பட்டு இன்று வரை வாதி மற்றும் பிரதிவாதி அனுபவித்து வருகிறார்கள்.

இவற்றிக்கு இணைக்கப்பட்டுள்ள தண்ணீர் குழாய்களும் பொதுவாகவே அனுபவித்துக்கொள்ள வேண்டியது என்று ஒப்புக்கொள்ளப்பட்டு அனுபவித்து வருகிறார்கள். பிரதிவாதியானவர் தனது முன்புற வாசலில் மழைக்காலங்களில் தண்ணீர் உட்பட அனைத்து நீர்களும் பொது இடத்தில் தான் வாதியும்¸ பிரதிவாதியும் கடத்தி வருகிறார்கள். ஆனால் பிரதிவாதியானவர் மழை நீர் உட்பட அனைத்து நீர்களும் வாதியின் வாசலில் வழியாக கடத்தி வாதிக்கு இடைஞ்சல் செய்து வருகிறார் என்றும்¸ அதேபோல் பாகபிரிவிணையின்போது பொதுவான குளியலறை மட்டுமே இருந்து வந்ததால் வாதி¸ பிரதிவாதி இருவரும் சேர்ந்து மேற்படி குளியலறையை இருவரும் அனுபவித்துக்கொள்ள வேண்டியது என்றும்¸ ஒப்புக்கொள்ளப்பட்டது. தண்ணீர் தொட்டியை பொதுவாக அனுபவித்து வந்தார்கள் என்றும்¸ மேலே சொல்லப்பட்ட உரிமைகளில் வாதியின் உரிமையை பிரதிவாதியோ¸ பிரதிவாதியின் உரிமையை வாதியோ தடை செய்வதற்கு உரிமையற்றவர்களாவார்கள். ஆனால் பொதுவான உரிமைகளை அனுபவித்து வரும் வாதியே கடந்த சில நாட்களாகவே பிரதிவாதி இடைஞ்சல் செய்து வருகிறார். வாதியின் நடைபாதை¸ குளியலறை¸ தண்ணீர் தொட்டி¸ தண்ணீர் பைப்லைன்¸ செப்டிக் டேங் மற்றும் வாசல் தண்ணீர் போக்கு ஆகியவைகளை வாதியின் அனுபவத்திற்கு இடைஞ்சல் செய்ய முயற்சித்து வருகிறார். பிரதிவாதியோ அவரது வகை ஆட்களோ வாதியின் பொது நடைபாதை¸ குளியலறை தண்ணீர் பைப்லைன் செப்டிக் டேங் மற்றும் வாசல் தண்ணீர் போக்கு ஆகியவைகளில் வாதியின் அனுபவத்தில் இடைஞ்சல் செய்யாமல் இருக்க ஒரு நிரந்தர உறுத்துக்கட்டளை பரிகாரம் வழங்கவேண்டுமாய் வாதிட்டு வாதியின் தாவா சொத்தில் குடியிருந்து வருவதற்கு ஆதரவாக நிரந்தர நிலவரி திட்டத்தின் மூலமாக வழங்கப்பட்ட மனைவரி பட்டாவினை வா.சா..1 ஆகவும்¸ மனை வரி பட்டா எண் 352 வா.சா..2 ஆகவும்¸ 02.02.1946-ல் வழங்கப்பட்ட வீட்டு வரி ரசீது வா.சா..3 ஆகவும்¸ தாவா சொத்திற்கு எடுக்கப்பட்ட போட்டா வா.சா..4 ஆகவும்¸ தோராய வரைபடம் வா.சா..5 ஆகவும்¸ குறியீடு செய்யப்பட்டுள்ளது. எனவே தாவா சொத்தின் அனுபவத்தையும்¸ சுவாதீனத்தையும் நிரூபணம் செய்யப்பட்டுள்ளதால் மேற்படி தாவா சொத்தின் பேரில் நிரந்தர உறுத்துக்கட்டளைப் பரிகாரம் வழங்குமாறு வாதிட்டு கற்றறிந்த வழக்கறிஞர் தனது வாதத்தை முடித்தார்.

பிரதிவாதி தரப்பில் கற்றறிந்த வழக்கறிஞர் தனது வாதத்தின்போது வாதியானவர் வாய்க்கரால் பாகத்தின் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்திருப்பது சட்டப்படி செல்லத்தக்கதல்ல என்றும்¸ வாய்க்கராலில் பாகம் பிரித்தபோது¸ உடனிருந்த தனது சகோதரரும்¸ தாய்மாமனையும் விசாரித்து வாய்க்கரால் பாகத்தை நிரூபிக்கவில்லை. எனவே வாதியின் பாகம் எதுவென்று தீர்மானிக்க முடியவில்லை என்றும்¸ 1976-ல் வாய்க்கராலில் பாகம் என்பதை எதிருரை வழக்கு தாக்கல் செய்யப்பட்ட பின்பு 1986-ல் வாய்க்கரலாக பிரிக்கப்பட்டது என்று மாற்றி சொல்லியுள்ளார். பொதுவாக இருந்து வாதியின் வீடு இரண்டாக பிரிக்கப்பட்டு கிழக்கு பக்கம் முழுவதும் பிரதிவாதியின் பங்கிற்கு ஒதுக்கப்பட்டதாகவும்¸ மேற்கு பங்கு வாதிக்கு ஒதுக்கப்பட்டதாகவும் இவ்விதம் பிரிக்கப்பட்ட இரண்டு வீடுகளையும்¸ பிரிப்பதற்கு நடுவில் ஒரு கதவு உள்ளதாகவும்¸ அதனை மூடவேண்டுமென்று பிரதிவாதி வாதியை கேட்டுக்கொண்டதால் அதனால் கோபமாக பொய்யாக இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

வாதி தனது குறுக்கு விசாரணையின்போது பிரதிவாதி சொல்வதுபோல் இரண்டு சொத்துக்களுக்கும் நடுவில் கதவு உள்ளது என்பதை ஒப்புக்கொள்கிறார். நீதிமன்ற ஆணையரும் அவர் வரைபடத்தில் இரண்டு வீடுகளுக்கும் நடுவில் கதவு உள்ளது என்பதை தனது வரைபடத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்படி கிழக்கு பக்கம் முழுவதும் பிரதிவாதிக்கு பாத்தியப்பட்ருப்பதால் பிரதிவாதியின் இடத்தில் உள்ள நடைபாதை¸ குளியலறை¸ செப்டிக் டேங்¸ தண்ணீர் தொட்டி¸ தண்ணீர் போக்கு ஆகியவைகளின் உரிமைகளை வாதி கோரமுடியாது. வாதி தனக்கு வாய்க்கரலாக பிரித்து கொடுக்கப்பட்டது என்று சொல்லி வழக்கு தாக்கல் செய்திருப்பதால் பிரதிவாதி கிழக்கு பக்கம் முழவதும் தனக்கு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது என்று சொல்லுவதில் கிழக்கு பக்கத்தில் வாதி சொல்லும் பிராது சொத்து இருப்பதை பொறுத்து விளம்புகை பரிகாரம் கோராமல் நிலை உறுத்துக் கட்டளைப் பரிகாரத்திற்கு மட்டும் தாக்கல் செய்துள்ள இந்த வழக்கு செல்லத்தக்கதல்ல தள்ளுபடி செய்ய வேண்டுமென்று வாதிட்டு அதற்கு ஆதரவாக பிரதிவாதி தரப்பில் கனம் உச்ச நீதிமன்றத்தில் முன்தீர்ப்பு 2008(6) CTC 237 என்ற முன்தீர்ப்பில் கீழ்கண்ட பத்தியை கோடிட்டு காட்டி வாதிட்டார்.

" Where Plaintiff is in possession, but his title to property is in disput or under cloud or where Defendant asserts title thereto and there is also threat of dispossession from Defendant, in such cases Plaintiff should file suit for declaration of title and consiquential relief of injunction"

"Where title of plaintiff is under cloud or in dispute or he is not to establish possession or not in possession, in such cases Plaintiff should file suit for declaration, possession and injunction."

மேலும் பிரதிவாதி தனது வாதத்திற்கு ஆதரவாக நமது மேதகு உயர் நீதிமன்றம் வழங்கிய முன்தீர்ப்பு வழக்கு 2015 (2) CTC 365- ல் செல்லாயி (இறப்பு) சின்னம்மாள் மற்றும் பலர் எதிர் வெள்ளையம்மாள் () பாப்பு மற்றும் பலர் என்ற வழக்கில் வழங்கப்பட்ட முன்தீர்ப்பு கீழ்கண்டவாறு கோடிட்டு கற்றறிந்த வழக்கறிஞர் வாதிட்டார்.

"Where plaintiff is in possession but his title to property is in dispute or under cloud or where defendant asserts title and there is also threat of dispossession, plaintiff must sue for declaration of title and consequential injunction."

என்ற வழக்கில் வழங்கிய தீர்ப்புகளை முன்னிருத்தி வாதிட்டார். வாதியானவர் பட்டாவை மட்டும் வைத்து அதன் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். பட்டா மட்டுமே title deed ஆகிவிட முடியாது என்றும்¸ அவற்றை மேதகு நீதிமன்றங்களும் ஒப்புக்கொண்டுள்ளது என வாதிட்டு அதற்கு ஆதரவாக நமது உச்ச நீதிமன்றத்தில் முன்தீர்ப்பு 1996-ல் (6) Supreme court cases 223 Sawarni (SMT) Vs. Inder Kaur (SMT) and Others என்ற வழக்கில்

"Mutation of name in revenue records Effect Held, does not create or extinguish the title nor has any presumptive value on title. It only entitles the person concerned to pay land revenue"

எனவே வழக்கிடைச் சொத்தானது வாதியின் உரிமையில் உள்ளது என்பதை
பட்டாவை வைத்து கோரமுடியாது என்று வாதிட்டார். 1999 (3) CTC (650) நீதிமன்ற ஆணையர் சொத்தானது யாருடைய அனுபவத்தில் உள்ளது என்றோ அல்லது யாருக்கு பாத்தியப்பட்டது என்றோ அறிக்கை தாக்கல் செய்ய முடியாது. நீதிமன்ற ஆணையர் அறிக்கையை வைத்து வாதி அனுபவம் கொண்டாட முடியாது. வாதியின் வீட்டில் குளியல் அறை உள்ளது என்று நீதிமன்ற ஆணையர் அறிக்கையில் சொல்லியுள்ளார். வாதி கழிவறை¸ சமையலறை¸ தண்ணீர் குழாய் ஆகியவைகள் வழக்கு தாக்கல் செய்யவில்லை. தண்ணீர் குழாய் தனியாக உள்ளது என்று வாதி சாட்சியத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். அவை அனைத்தும் அவரது வீட்டிலேயே உள்ளது. வாதி தாவாவில் வாதிக்கு ஒரு கழிவறை பாகத்தில் கொடுக்கப்பட்டதாகும். செப்டிக் டேங் பொதுவாக அனுபவித்துக்கொள்ள வேண்டியது என்று ஒப்புக்கொண்டதாகவும் சொல்லியுள்ளார். ஆனால் ஏற்கனவே சொன்னதுபோல் வாதிக்கு கழிவறை உள்ளது. வழக்கு தாக்கல் செய்யவில்லை. குளியல் அறை நடைபாதை¸ செப்டிக் டேங்¸ தண்ணீர் தொட்டி மற்றும் வாசல் தண்ணீர் போக்கு ஆகியவை சம்மந்தமாகவே பரிகாரம் கேட்டுள்ளார். அவ்வாறு ஒட்டுமொத்த பரிகாரம் கேட்க முடியாது ஒவ்வொரு பரிகாரமும் தனிதனியாக பிரித்து கேட்க வேண்டும் ஒவ்வொரு பரிகாரத்திற்கும் தனித்தனியாக முத்திரைக் கட்டணம் செலுத்தியிருக்க வேண்டும். எனவே வாதியின் தாவா ஏற்புடையதல்ல என வாதிட்டு வாதியின் தாவாவை தள்ளுபடி செய்ய வேண்டுமாய் வாதிட்டு முடித்தார்.

இருதரப்பு வாதமும் கேட்கப்பட்டது. சாட்சிய சான்றாவணங்கள் பரிசீலனை செய்யப்பட்டது. கீழ்கண்டவாறு எழுவினாக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

எழுவினா 1-க்குரிய தீர்வு
தாவா காலத்தில் தாவா சொத்து வாதியின் அனுபவத்தில் இருந்து வந்ததா என்ற எழுவினா ஆய்வுக்கான ஆய்வை காணும்போது வாதியானவர் தாவா சொத்தானது ஆதியில் சுப்பிரமணியன் செட்டியார் அவர்களுக்கு பாத்தியப்பட்ட சொத்து என்றும்¸ சுப்பிரமணிய செட்டியார் என்பவர் வாதி மற்றும் பிரதிவாதியின் தகப்பனார் என்றும்¸ வாதி மற்றும் பிரதிவாதி உடன்பிறந்த சகோதரர்கள் ஆவார்கள். வாதியின் தந்தைக்கு இரண்டு தாரங்கள் இருந்ததாகவும்¸ இரண்டாவது தாரத்தின் மக்களே இந்த வாதி மற்றும் பிரதிவாதி என்றும்¸ மேற்படி முதல் தாரத்தின் மக்களுக்கு சேரவேண்டிய சொத்துக்களை ஒதுக்கப்பட்டு எந்தவித பிரச்சினைகளும் இல்லாத நிலையில்¸ இரண்டாவது தாரத்து மக்களாகிய வாதி மற்றும் பிரதிவாதியின் தந்தையாகிய சுப்பிரமணியன் செட்டியார் உயிருடன் இருக்கும்போது தாவா வீட்டை 1986-ம் ஆண்டு வாய்க்கரால் ஏற்பாட்டின்படி குடும்ப சொத்துக்களை வாதி மற்றும் பிரதிவாதிக்கு பாகப்பிரிவிணை செய்து கொடுத்து அதன் அடிப்படையில் ஆளுக்கொரு வீட்டை அனுபவித்து சுவாதீனம் இருந்து வருவதாக சொல்லப்பட்ட சங்கதிகளை பொறுத்த வரையில் ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால் 1976-ம் ஆண்டு முதல்தாரத்து பிள்ளைகளுக்கு மட்டுமே சொத்துக்கள் பிரித்து கொடுக்கப்பட்டது என்றும்¸ வாதி மற்றும் பிரதிவாதி குடியிருந்து வரும் இரண்டு வீடுகளும் 1986-ம் ஆண்டு வாய்க்கரலாக வாதி மற்றும் பிரதிவாதியின் தகப்பனார் முதல் தாரத்து பிள்ளைகள் மற்றும் அவர்களது தாய்மாமன் ஆகியோர் முன்னிலையில் பாகம் பிரிக்கப்பட்டதாகவும்¸ மொத்த வீட்டை பிரித்து வாதிக்கு மேற்கு பக்கமாகவும்¸ பிரதிவாதிக்கு கிழக்கு பக்கமாகவும் ஒதுக்கப்பட்டதாக பிரதிவாதி தரப்பில் ஒத்துக்கொள்ளப்பட்டது.


இங்கு வாதியானவர் அவர் தந்தையால் 1986-ம் ஆண்டு வாய்க்கரலாக பிரிக்கப்பட்டது என்றும்¸ பிரதிவாதியானவர் 1987-ல் பிரிக்கப்பட்டது என்ற கூற்று மட்டுமே கருத்துவேறுபாடாக சொல்லியிருக்கிறார்களே தவிர மேற்படி வாதி¸ பிரதிவாதிக்கு பாத்தியப்பட்ட சொத்துக்களை பிரித்து அனுபவம் செய்து வருகிறார்கள் என்பதை இருதரப்பும் ஒத்துக்கொள்ளப்பட்டு இருக்கிறது. இவ்வாறான சூழ்நிலையில் தாவா சொத்தானது கொடைக்கானல் தாலுகா¸ பண்ணைக்காடு கிராமம் ஊரல்பட்டியில் சர்வே எண் 1552/19¸ 1552/16¸ 1552/18¸ 1552/15-ல் கட்டுப்பட்டது. இரு வீடுகளுக்கும் பொதுவாக பாத்தியப்பட்ட நடைபாதை¸ குளியல் அறை¸ செப்டிக்டேங்¸ தண்ணீர் தொட்டி¸ தண்ணீர்போக்கு ஆகியவைகளில் வாதியின் அனுபவத்தை வாதியானவர் நிரூபணம் செய்துள்ளாரா என்பதை பார்க்கும்போது¸ பிரதிவாதியானவர் தனது பிராதில் கீழ்கண்டவாறு எதிருரை தாக்கல் செய்துள்ளார்.


'பிரதிவாதி ஒத்துக்கொள்ளப்பட்ட பாகத்தில் சமயலறை¸ குளியலறை¸ கழிவறை¸ தண்ணீர் தொட்டி கட்டப்பட்டு இருந்தது. வாதிக்கு இவைகள் அனைத்தும் இல்லாததால் வாதி வாதியிடத்தில் வாதியே கட்டிக்கொள்ளும் பொருட்டு பிரதிவாதி வாதிக்கு ரூபாய் 50 ஆயிரத்தை செலவுத்தொகையாக கொடுக்க வேண்டுமென அப்போதே பேசப்பட்டது. வாதி பாகத்திற்கு கொடுத்த வீட்டில் தெற்கு பக்கம் இருந்த காலியிடத்தில் வாதி அவைகளை கட்டிக்கொள்ள வேண்டுமென்று பேசி முடிக்கப்பட்டது. வாதி அவைகளை கட்டி முடிக்கும் வரை பிரதிவாதியின் பாகத்தில் உள்ள சமையலறை¸ குளியலறை¸ கழிவறை ஆகியவற்றை பயன்படுத்திக்கொள்ள வேண்டியது என்றும் பேசி முடிக்கப்பட்டது என ஒத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் கழிவறை குளியலறை ஆகியவைகள் பொது பாத்தியதை உண்டு என்பது அறிய முடிகிறது. ஆனால் ரூபாய் 50 ஆயிரத்தை வாதிக்கு 1996-ம் ஆண்டு ஜூலை மாதம் நான் அண்ணன் தம்பிகளை வைத்து கொடுத்தேன் ஆனால் அதற்கு நான் எதுவும் எழுதி வாங்கிக்கொள்ளவில்லை"


என பிரதிவாதி சாட்சியம் அளித்துள்ளார். ஆனால் தான் தாக்கல் செய்துள்ள எதிர் வழக்குரையில் வாதி பிரதிவாதி குடியிருந்து வரும் வீடுகளில் 1887-ம் ஆண்டு பாகம் பிரித்ததாக ஒப்புக்கொள்கின்றார். ஆனால் 10 ஆண்டுகளுக்கு பின்பாக மேற்படி தாவா சொத்திற்கு ரூபாய் 50 ஆயிரத்தை கொடுத்ததாக சொல்லப்பட்டிருப்பது ஏற்புடையதாக அமையவில்லை. மேற்படி ரூபாய் 50 ஆயிரத்தை வாதியானவர் பெற்றுக்கொள்ளவில்லை என மறுத்துரைத்தபோது ரூபாய் 50 ஆயிரத்தை கொடுத்து தாவா சொத்திலிருந்து வாதியை ஒதுக்கிவிடப்பட்டது என்பதை நிரூபணம் செய்ய பிரதிவாதி தரப்பில் சாட்சியமோ¸ சான்றாவணமோ அமையவில்லை. எனவே இருதரப்பும் ஒத்துக்கொள்ளப்பட்ட சங்கதிகளை கூர்ந்து ஆராய்ந்தபோது¸ தாவா சொத்தானது வாதி பிரதிவாதியின் பொது அனுபவத்தில் இருந்து வந்தது என்பது தெளிவாகிறது. எனவே தாவா தாக்கல் செய்த காலத்தில் தாவா சொத்தின் மீது வாதியானவர் அனுபோகம் செய்து வந்துள்ளார் என்பது நிரூபணம் செய்யப்பட்டுள்ளதால் தாவா சொத்தின் சுவாதீனம் இவ்வழக்கின் வாதியிடமும் இருந்துள்ளதாகவே இந்நீதிமன்றம் தீர்வு காண்கிறது.


எழுவினா 2-க்குரிய தீர்வு
வாதி கோரிய தாவா சொத்தின் மீது நிரந்தர உறுத்துக்கட்டளைப் பரிகாரமானது கிடைக்கத்தக்கதா என்பதைப் பார்க்கும்போது பிரதிவாதியை வாதி தரப்பில் குறுக்கு விசாரணை செய்தபோது பிரதிவாதியானவர் கீழ்கண்டவாறு சாட்சியம் அளித்துள்ளார்.

'வாதி என் உடன்பிறந்த அண்ணன் என்றால் சரிதான். பைப் லைன்¸ செப்டிக்டேங் போன்றவைகளும் லெட்டின்¸ பாத்ரூம் ஆகியவற்றை என் அப்பாவுக்கு முன்பே கட்டினார் என்றால் சரிதான் லெட்டின்¸ சமையலறை¸ போன்றவைகளுக்கு போவதற்காக பின்பக்கம் ஒரு வழி உள்ளது என்றால் சரிதான். எனது சமையல் ரூமுக்கும்¸வாதியின் சமையல் ரூமுக்கும் ஒரே சுவர்தான் உள்ளது. அதேபோன்று லெட்டினுக்கும்¸ பாத்ரூமுக்கும் ஒரே சுவர்தான் உள்ளது. செப்டிக்டேங் இருவருக்கும் ஒன்றுதான் என்றால் சரிதான்."
என சாட்சியமளித்துள்ளார். நீதிமன்ற ஆணையர் தாக்கல் செய்த நீதிமன்ற ஆணையர் அறிக்கையில் 9-வது பத்தியில் 'சமையலறை பின்புறம் வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளதுபோல் வாதி பிரதிவாதிக்கு பாத்தியப்பட்ட கழிவறை உள்ளது அதையடுத்து வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளதுபோல் ஒரு செப்டிக்டேங் உள்ளது. வாதிக்கு பாத்தியப்பட்ட கழிவறைக்கு பக்கத்தில் இருந்து வரும் தண்ணீர் மட்டும் செல்வதற்கு குழாய் ஒன்று அமைக்கப்பட்டு வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளதுபோல் தெருவிலுள்ள கழிவுநீர் வாய்காலில் செல்வது போல் அமைக்கப்பட்டுள்ளது.

10 வது பத்தியில் வரைபடத்தில் காட்டப்பட்ட 1 மற்றும் 2 சமையலறை¸ கழிவறை ஆகிய இடங்களுக்கு செல்லும் வழியை வாதி பிரதிவாதி அனுபவித்துக்கொள்ளும் வகையில் செப்டிக்டேங்க்கும் கழிப்பறைக்கும் பொதுவாக அமைக்கப்பட்டுள்ளது. என்னுடைய கருத்துப்படி வீட்டின் பின்புறம் உள்ள பைப்லைன்¸ நடைபாதை¸ தண்ணீர் டேங் செப்டிக்டேங் அமைப்பு வாதி பிரதிவாதி இருவரும் அனுபவித்துகொள்ளும் வரையில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. பிரதிவாதியானவர் தனது வீட்டையொட்டி கட்டப்பட்டுள்ள காம்பவுண்ட் சுவரிலுள்ள சந்து வழியாகத்தான் மழைநீர் கடத்தி வந்ததாகும். வாதி அதை மூடிவிட்டதாகவும் அதனால் மழைநீர் தேங்கி விட்டதாகவும் சொன்னார். அதை வாதியானவர் மறுத்தார்."

மேற்கண்டவாறு நீதிமன்ற ஆணையர் சமர்ப்பித்துள்ள அறிக்கையானது நீதிமன்ற சான்றாவணம் 1 ஆக குறியீடு செய்யப்பட்டுள்ளது. அதனுடன் இணைந்த வரைபடத்தை காணும்போது வாதி பிரதிவாதி குடியிருப்பு வீடுகள் தனித்தனியே அமைந்துள்ள நிலையில் இரண்டு வீடுகளில் மேற்கு பக்கத்தில் வாதியின் வீடும்¸ கிழக்கு பக்கத்தில் பிரதிவாதியின் வீடும்¸ மூன்று அறைகளைக்கொண்டு தனித்தனியே அமைந்துள்ளது தெளிவாகிறது. ஆனால் மேற்படி வீடுகளுக்கு சமையலறை¸ கழிவறை¸ தண்ணீர்தொட்டி¸ செப்டிக்டேங் ஆகியவைகள் வாதியின் வீட்டிற்கு தென்புறத்தில் இருவருக்கும் பொதுவாக அமைந்துள்ளது சாட்சிகளின் வாயிலாகவும்¸ சான்றாவணங்களின் வாயிலாகவும் தெளிவாகிறது. மேற்படி தெளிவுபடுத்தப்பட்ட நிலையில் மேற்படி வாதி பிரதிவாதி ஆகியோருக்கு தனித்தனியே சமையலறை¸ கழிவறை¸ தண்ணீர்தொட்டி¸ செப்டிக்டேங் ஆகியவைகள் இருவருக்கும் பொதுவாக பாத்தியப்பட்டு செப்டிக்டேங்¸ வாட்டர் டேங் குறித்து ஐயப்பாடு எதுவும் உள்ளதா என்பதைக் காணும்போது பிரதிவாதியை வாதி தரப்பில் குறுக்கு விசாரணை செய்தபோது பிரதிவாதியானவர்

'தனது சாட்சியத்தில் லெட்டின்¸ சமையலறை போன்றவைகளுக்கு போவதற்கு பின்பக்கம் ஒரு வழி உள்ளது என்றால் சரிதான். எனது சமையலறை ரூமுக்கும்¸ வாதியின் சமையல் ரூமுக்கும் ஒரே சுவர்தான் அதேபோன்று லெட்டின்¸ பாத்ரூமுக்கும் ஒரே சுவர்தான் செப்டிக்டேங் இருவருக்கும் ஒரே டேங்தான் என்று சொன்னால் சரிதான் என சாட்சியம் அளித்துள்ளார்."


மேற்படி சாட்சியத்தை ஆணையாளரின் அறிக்கையோடு ஒப்பிட்டு பார்க்கும்போது பிரதிவாதியின் வீட்டிற்கு தென்புறம் அமைந்துள்ள சமையலறை¸ குளியலறை¸ கழிவறை ஆகியவைகள் தனித்தனியே அமைந்தும் செப்டிக்டேங்¸ வாட்டர்டேங் ஆகியவைகள் இரண்டும் பொதுவாக அமைந்திருப்பது தெளிவாகிறது. மேற்கண்டவைகள் இவ்வழக்கின் தாவாவிலுள்ள சொத்துக்களாகும். மேற்படி தாவா சொத்திற்கு சென்று வருவதற்கு வாதியின் சொத்திற்கும்¸ பிரதிவாதியின் சொத்திற்கும் இடையில் ஒரு கதவு அமைந்துள்ளது. மேற்படி கதவின் வழியே வாதி மேற்படி தாவா சொத்தை சென்றடைய வேண்டிய நிலையில் உள்ளார். மேற்படி தாவா சொத்திற்கு சென்றடையும் கதவினை பிரதிவாதியோ அல்லது வாதியோ அடைத்துவிட்டால் தாவா சொத்தை வாதி அனுபவிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். தாவா சொத்துக்கள் வாதி பிரதிவாதிக்கு பொதுவானது என ஒப்புக்கொள்ளப்பட்ட சங்கதிகளாக அமைந்துள்ள நிலையில் தாவா சொத்துக்களில் பிரதிவாதியின் தலையீடு இருந்தால் தாவா சொத்தை வாதியானவர் சுதந்திரமாக அனுபவிக்க முடியாது.


மேற்படி தாவா சொத்துக்களை பொறுத்தவரையில் கழிவறை¸ குளியலறை¸ சமையலறை போன்றவைகள் பொதுவாக அமைந்துள்ளதால் வாதியின் சுவாதீனத்தில் எந்த தலையீடும் செய்யக்கூடாது என இந்நீதிமன்றம் கருதுவதால் மேற்படி தாவா சொத்தின் பேரில் நிரந்தர உறுத்துக் கட்டளைப்பரிகாரம் பெற வாதியானவர் தகுதியானவர் என்றே இந்நீதிமன்றம் கருதுகிறது. அதேபோல் தாவா சொத்தில் இருவரும் கூட்டாக அனுபவித்து வரும் செப்டிக்டேங்¸ தண்ணீர் தொட்டி¸ஆகியவைகளை பொதுவில் அனுபவித்து வருவதால் மேற்படி சொத்துக்களை இருவரும் பொதுவில் அனுபவித்து வருவதை பிரதிவாதி எந்தவித தலையீடும் செய்யக்கூடாது என இந்நீதிமன்றம் தீர்வு காண்கிறது. அதேபோல் நீதிமன்ற ஆணையர் அறிக்கையில் 9-வது பத்தியில்

'வாதிக்கு பாத்தியப்பட்ட கழிப்பறைக்கு பக்கத்தில் இருந்து வரும் தண்ணீர் மட்டும் செல்வதற்கு குழாய் ஒன்று அமைக்கப்பட்டு தெருவிலுள்ள கழிவு நீர் வாய்கால் செல்வதுபோல அமைக்கப்பட்டுள்ளதாக கமிஷனர் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்."

அதே பிரதிவாதியானவர் தனது கழிவு நீரை தனிகுழாய் அமைத்து வாதிக்கு பாத்தியப்பட்ட சொத்துக்களில் செல்லாமல் பொது கழிவு பாதையில் செல்வதற்கு குழாய் அமைத்து பராமரிக்க உத்தரவு செய்யப்படுகிறது. மேற்கண்ட வாதியின் அமைதியான சுவாதீனத்தில் பிரதிவாதியானவர் எந்தவித தலையீடும் செய்யக் கூடாது என நிரந்தர உறுத்துக் கட்டளைப் பரிகாரம் வழங்கி இந்நீதிமன்றம் எழுவினா 2-க்கு தீர்வு காண்கிறது.


எழுவினா 3-க்குரிய தீர்வு
கற்றறிந்த வழக்கறிஞர் தனது வாதத்தின்போது தாவா சொத்தின் மீது நிரந்தர உறுத்துக்கட்டளை பரிகாரம் பெற வேண்டியதனால் மேற்படி தாவா சொத்திற்கு விளம்புகை பரிகாரம் கேட்டு அதன்பின்னிட்டு அவர் நிரந்தர உறுத்துக் கட்டளைப்பரிகாரம் கோரியிருக்க வேண்டுமென்று கூறி நமது மேதகு உச்ச நீதிமன்றம் வழங்கிய முன்தீர்ப்பு பதிவேற்றம் 2008(6) CTC 237-ல் Anathula
sudhakar Vs. P.Buchi Reddy (Dead) by LRs. & others என்ற வழக்கில்
வழிகாட்டலில் கீழ்கண்ட பத்தியில் கோடிட்டு வாதிட்டார். கீழ்கண்ட பத்தியில்

"Where plaintiff is in possession but his title to property is in dispute or under cloud or where defendant asserts title and there is also threat of dispossession, plaintiff must sue for declaration of title and consequential injunction. Where title of plaintiff is under cloud or in dispute and he is not in ossession or not able to establish possession, necessarily plaintiff will have to file suit for declaration, possession and injunction."

"Since there is cloud cast upon title of plaintiff, suit for bare injunction cannot be maintained in absence of prayer for Declaration of Title"

மேற்படி முன்தீர்ப்பு அடிப்படையில் வழக்கிடை சொத்துக்களில் உரிமைகள் குறித்து எதுவும் பிரச்சினை இருக்கிறதா என்பதை பார்க்கும்போது¸ இவ்வழக்கின் உரிமைப் பிரச்சினை எதுவும் சொத்துக்களைப் பொறுத்து இருந்தாக காணமுடியவில்லை. மேற்கண்ட சூழ்நிலையில் தாவா சொத்துக்களானது ஒரு தனி மனித வாழ்வில் அன்றாட இன்றியமையாத தேவைகளில் ஒன்றாக அமைந்துள்ளது. மேற்படி அன்றாட தனிமனித தேவைகளை பூர்த்தி செய்யக்கூடியவைகளில் தாவா சொத்துக்கள் உயர் நிலைகளை பெற்றிருக்கிறது. மேற்படி தாவா சொத்துக்களில் தலையீடு இருக்கும்போது வாதியானவர் தான் அன்றாட இயற்கை தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய மிக சிரம்மங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதை பார்க்கும்போதுபிரதிவாதி தரப்பில் தாக்கல் செய்துள்ள முன்தீர்ப்புகளானது இவ்வழக்கிற்கு பொறுத்தமாக அமையவில்லை என இந்நீதிமன்றம் கருதுகிறது. இத்தீர்ப்பாணையானது பிரதிவாதியின் தாவா சொத்தின் பாத்தியப்பட்ட உரிமைகள்குறித்து விளம்புகை கோரி பின்நாளில் தாக்கல் செய்யப்பட்டால் இத்தீர்ப்பானது எந்தவித தாவாக்களை தடையும் செய்யாது எனவும் உத்தரவு செய்யப்படுகிறது. மேற்படி சூழ்நிலையில் தாவா சொத்துகளின் மீது விளம்புகை பரிகாரம் கோருரிமைக்கு இத்தீர்ப்பாணை கட்டுப்படுத்தாது என உத்தரவு செய்து 3-வது எழுவினாவிற்கு இந்நீதிமன்றம் தீர்வு காண்கிறது.


No comments:

Post a Comment