ஒரு கூட்டுபாகஸ்தர் தனது பிரிபடாத பாகத்தை பொறுத்து எழுதி தரும் தானமானது சட்டப்படி செல்லாத ஒன்று

மாவட்ட உரிமையியல் நீதிமன்றம்¸ பண்ருட்டி
முன்னிலை: திருமதி.ஏ.உமாமகேஸ்வரி¸ பி.எஸ்ஸி.¸பி.எல்.¸
மாவட்ட உரிமையியல் நீதிபதி¸ பண்ருட்டி
திருவள்ளுவராண்டு 2046¸ மன்மத ஆண்டு¸ சித்திரைத்திங்கள் 17ஆம் நாள்
2015 ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 30 ஆம் நாள் வியாழக்கிழமை
அசல் வழக்கு எண்.298 / 2002 மற்றும் அசல் வழக்கு எண்.58 / 2003
அசல் வழக்கு எண்.298 / 2002 
சக்கரபாணி ... வாதி
/எதிர்/
1. மாயவன்
2. முத்துலிங்கம் பிரதிவாதிகள்

அசல் வழக்கு எண்.58 / 2003
முத்துலிங்கம் வாதி
/எதிர்/
1. மாயவன்
2. சக்கரபாணி பிரதிவாதிகள்

வழக்கிலிருந்து முக்கிய குறிப்புகள்:

இந்த அசல் வழக்கானது தாவாசொத்து வாதிக்கு பாத்தியமானது என விளம்புகை செய்யக்கோரியும்¸ தாவாசொத்தை வாதி அமைதியான முறையில் அனுபவித்து வருவதை பிரதிவாதிகளோ¸ அவர்வகை ஆட்களோ எவ்விதத்திலும் இடையூறு செய்யக்கூடாது என நிரந்தர உறுத்துக்கட்டளை பரிகாரம் வழங்கக்கோரியும் மற்றும் வழக்கின் செலவுத் தொகை கேட்டும் வாதியால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2. வழக்குரையின் சுருக்கம்:
தாவா சொத்தானது ஆதியில் முதல் பிரதிவாதிக்கு பாத்தியமாக இருந்தது. வாதி¸ முதல் பிரதிவாதிக்கு எதிராக பண்ருட்டி சார்பு நீதிமன்றத்தில் கடனுறுதிச்சீட்டின் அடிப்படையில் எஸ்.சி.160/96 என்ற வழக்கை தாக்கல் செய்து ஒருதலைபட்ச தீர்ப்பாணை பெற்று¸ அந்த தீர்ப்பாணையின் அடிப்படையில சொத்தை ஜப்தி செய்ய நிறைவேற்று மனு எண்.32/97 ஐ வாதி¸ முதல் பிரதிவாதிககு; இந்நீதிமன்றத்தால் தாக்கல் செய்து 9.3.2000 ஆம் தேதி ஏலத்திற்கு கொண்டுவரப்பட்டு¸ வாதியாலேயே ஏலத்தில் எடுக்கப்பட்டது. 1.6.2000 ஆம் தேதி மேற்படி ஏலம் உறுதிசெய்யப்பட்டது. அதன் பின்னர் வாதி அவருக்கு வழங்கப்பட்ட ஏலசான்றிதழின் அடிப்படையில் சொத்தை ஒப்புதல் எடுக்க இ.ஏ.30/2000 தாக்கல் செய்து அது அனுமதிக்கப்பட்டு 18.8.2000 ஆம் தேதி வாதி மேற்படி சொத்தை ஒப்புதல் எடுத்து¸ மேற்படி தேதியிலிருந்து தாவாசொத்து வாதியின் அனுபவத்தில் இருந்து வருகிறது. தாவா சொத்தின் பட்டா எண்.711. மேற்படி அசல்வழக்கு மற்றும் நிறைவேற்று மனு நடவடிக்கைகள் அனைத்தையும் முதல் பிரதிவாதி தடைசெய்யவில்லை. 26.11.2002 ஆம் தேதி தாவா சொத்தில் உழ முற்பட்டபோது பிரதிவாதிகள் அதனை தடைசெய்தனர். மேலும் தொடர்ந்து தாவா சொத்தில் வாதியின் அனுபவத்தை தடைசெய்து வருவதால் வாதியால் விளம்புகை மற்றும் நிரந்தர உறுத்துக்கட்டளை பரிகாரம் கோரி இவ்வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

3. இரண்டாம் பிரதிவாதியால் தாக்கல் செய்யப்பட்டுள்ள எதிர்வழக்குரையின் சுருக்கம்:
இவ்வழக்கானது உண்மையானதல்ல¸ தாவாசொத்து முதல் பிரதிவாதிக்கு பாத்தியமானது என்பது தவறு. முதல் பிரதிவாதிக்கும்¸ வாதிக்கும் இடையில் நடந்த வழக்கு பற்றியோ¸ அதன் அடிப்படையில் தாவா சொத்து ஏலத்திற்கு கொண்டுவரப்பட்டது பற்றியோ இந்த பிரதிவாதிக்கு தெரியாது. வாதியும்¸ முதல் பிரதிவாதியும் கூட்டாக சேர்ந்துகொண்டு¸ இந்த பிரதிவாதிக்கு பாத்தியமான தாவா சொத்தை 9.3.2000 ஆம் தேதி ஏலத்தில் எடுத்தனர். மேற்படி ஏலம் குறித்தும் இந்த பிரதிவாதிக்குத் தெரியாது. மேலும் இந்த வாதி¸ தாவா சொத்தை 18.8.2000 ஆம் தேதி ஒப்புதல் எடுத்ததாக கூறுவது தவறு. அது பெயரளவு ஒப்புதல் மட்டுமே. உண்மையில் ஒப்புதல் எடுக்கவில்லை. வாதியோ¸ நீதிமன்ற அமீனாவோ தாவா சொத்தில் ஒப்புதல் எடுக்க எந்த காலத்திலும் வரவில்லை. ஏனெனில் தாவா சொத்து இதுநாள்வரை இந்த பிரதிவாதியின் அனுபவத்திலும்¸ சுவாதீனத்திலும் இருந்து வருகிறது. தாவா சொத்துக்கு வழங்கப்பட்ட பட்டா எண்.711 பொய்யான ஆவணமாகும். உண்மையில் தாவா சொத்தும்¸ தாவா சர்வே எண்ணிலுள்ள பாக்கி ஒரு ஏக்கரும்¸ இந்த பிரதிவாதியின் தகப்பனார் ஆறுமுகம் என்பவருக்கு பாத்தியமானது. மேற்படி ஆறுமுகம் அதனை 24.4.1990 ஆம் தேதி இந்த பிரதிவாதிக்கு தானமாக கொடுத்துவிட்டார். அதுமுதல் தாவா சொத்து காலவரையறைக்கு மேலாக இந்த பிரதிவாதியின் அனுபவத்தில் இருந்து வருவதால் அனுபவ பாத்தியம் சித்தித்துவிட்டது. முதல் பிரதிவாதி¸ இந்த பிரதிவாதியின் சகோதரர் ஆவார். அவருக்கு தாவா சொத்தில் எவ்வித உரிமையும் இல்லை. முதல் பிரதிவாதி¸ இரண்டாம் பிரதிவாதி மீதிருந்த விரோதத்தின் காரணமாக வாதியை தூண்டிவிட்டு தாவா சொத்தை ஏலத்தில் எடுத்தனர். வாதிக்கு தாவாசொத்தை ஏலத்திற்கு கொண்டுவர எவ்வித உரிமையும் இல்லை. மேற்படி வழக்கு முடிந்த பின்னரே தாவா சொத்து ஏலத்திற்கு கொண்டுவரப்பட்ட விபரம் இந்த பிரதிவாதிக்கு தெரியவந்தது. எனவே இந்த பிரதிவாதி 9.3.2000 ஆம் தேதி தாவா சொத்து ஏலம் விடப்பட்டதை ரத்து செய்யக்கோரி தனியாக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். மேலும் தாவா சொத்தின் நான்கெல்லைகள் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் தாவா சொத்தும்¸ தாவா சர்வே எண்ணில் உள்ள பாக்கியுள்ள நிலமான 1.00 ஏக்கரும் சேர்த்து இந்த பிரதிவாதியின் அனுபவத்தில் இருப்பதாக கிராம நிர்வாக அலுவலர் சான்று வழங்கியுள்ளார். மேலும் இந்த பிரதிவாதி¸ வாதி தாவா சொத்தில் பயிர்செய்ததை தடுத்ததாக கூறுவது தவறு. ஏனெனில் தாவா சொத்து இந்த பிரதிவாதியின் அனுபவத்தில்தான் இருந்துவருகிறது. எனவே இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட வேண்டியதொன்றாகும்.

4. மேற்படி வழக்குரை மற்றும் எதிர்வழக்குரை ஆகியவற்றை பரிசீலனை செய்தபின்னர்
3.11.2003 ஆம் தேதி கீழ்கண்ட எழுவினாக்கள் வனையப்பட்டுள்ளன.
1) வழக்குச்சொத்து முதல் பிரதிவாதிக்கு உரிமையானதா?
2) 9.3.2000 ல் நீதிமன்றத்தில் ஏலம் நடத்தப்பட்டது உண்மையா?
3) வழக்குச்சொத்தில் வாதி சுவாதீனத்தில் இருக்கிறாரா?
4) வாதிக்கு விளம்புகை பரிகாரம் கிடைக்கத்தக்கதா?
5) வாதிக்கு நிரந்தர உறுத்துக்கட்டளை பரிகாரம் கிடைக்கத்தக்கதா?
6) வாதிக்கு என்ன பரிகாரம் கிடைக்கத்தக்கது?

அசல் வழக்கு எண்.58 / 2003 :
இந்த அசல் வழக்கானது பண்ருட்டி சார்பு நீதிமன்ற எஸ்.சி.160/96 ன் அடிப்படையில்
தாக்கல் செய்யப்பட்ட பண்ருட்டி மாவட்ட உரிமையியல் நீதிமன்ற இ.பி.32/97 ல் 9.3.2000 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் தாவா சொத்தை ஜப்தி செய்து நீதிமன்ற ஏலத்திற்கு கொண்டுவரப்பட்டதை ரத்து செய்யக்கோரியும்¸ தாவா சொத்தில் உள்ள வாதியின் அமைதியான அனுபவத்தை பிரதிவாதிகளோ¸ அவர்வகை ஆட்களோ எவ்வகையிலும் தடைசெய்யக் கூடாது என நிரந்தர உறுத்துக்கட்டளை பிறப்பிக்கக்கோரியும் மற்றும் தாவா செலவுத்தொகை கேட்டும் வாதியால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

5. வழக்குரையின் சுருக்கம்:
புதிய எஸ்.எஃப்.நெ.410ஃ1¸ பழைய எஸ்.எஃப்.நெ.575ஃ1 ல் மொதத் விஸ்தீரணம் 4.64 ஏக்கரில் தாவா சொத்தும்¸ மீதியுள்ள நிலமும் சேர்த்து 1.00 ஏக்கரும் ஆதியில் வாதியின் தகப்பனார் ஆறுமுகத்திற்கு பாத்தியமாக இருந்து¸ அவர் அந்த 1.00 ஏக்கரை வாதிக்கு 24.4.1990 ஆம் தேதி தானமாக கொடுத்துவிட்டார். அதன்படி மேற்படி 1.00 ஏக்கர் இன்றுவரை வாதியின் அனுபவத்தில் இருந்து வருகிறது. எனவே வாதிக்கு அனுபவபாத்தியம் உள்ளது. இந்நிலையில் மு.வ.298/02 ல் ஐ.ஏ.1719/02 இடைக்கால மனுவில் 2002 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த வாதிக்கு நோட்டீஸ் வந்தபிறகுதான் ¸ வாதியின் சகோதரரான முதல் பிரதிவாதியும்¸ 2 ஆம் பிரதிவாதியும் கூட்டுசேர்ந்து கொண்டு 9.3.2000 ஆம் தேதி தாவா சொத்தை ஏலத்திற்கு கொண்டுவந்து¸ ஏலத்தில் எடுத்த விபரம் இந்த வாதிக்கு தெரியவந்தது. வாதிக்கும் அவரது சகோதரரான முதல் பிரதிவாதிக்கும் இடையில் இருந்த நீண்டகால பகையின் காரணமாக¸ முதல் பிரதிவாதியின் தூண்டுதலின்பேரில் 2 ஆம் பிரதிவாதி தாவா சொத்தை ஏலத்திற்கு கொண்டுவந்துள்ளனர். 2 ஆம் பிரதிவாதி¸ தாவா சொத்தை முறையாக ஜப்தி செய்யவில்லை. அவர் தாவா சொத்தில் ஒருபோதும் நுழைந்து ஒப்புதல் எடுக்கவில்லை. 18.8.2000 ஆம் தேதி எடுக்கப்பட்ட ஒப்புதல் பெயரளவிலான ஒப்புதலாகும். மேற்படி 9.3.2000 ஆம் தேதி கொண்டுவரப்பட்ட ஏலம் இந்த வாதியை கட்டுப்படுத்தாது. தாவா சொத்து முதல் பிரதிவாதிக்கு பாத்தியமானதல்ல. தாவா சொத்து இந்த வாதிக்கு மட்டுமே பாத்தியமானது. எனவே இந்த அசல் வழக்கு தாவா சொத்தை ஜப்தி செய்து நீதிமன்ற ஏலத்திற்கு கொண்டுவரப்பட்டதை ரத்து செய்யக்கோரியும்¸ தாவா சொத்தில் உள்ள வாதியின் அமைதியான அனுபவத்தை பிரதிவாதிகளோ¸   அவர்வகை ஆட்களோ எவ்வகையிலும் தடைசெய்யக் கூடாது என நிரந்தர உறுத்துக்கட்டளை பிறப்பிக்கக்கோரியும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

6. 2 ஆவது பிரதிவாதியால் தாக்கல் செய்யப்பட்டுள்ள எதிர்வழக்குரையின் சுருக்கம்:
வாதியால் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் இவ்வழக்கானது நிலைக்கத்தக்கதல்ல. 24.4.1990 ஆம் தேதி தாவா சொத்தைப்பொறுத்து வாதியின் தகப்பனார்¸ வாதிக்கு தானமாக கொடுத்ததாக கூறுவது தவறு. மேற்படி தானமானது மேற்படி தாவா சொத்தில் உரிமையுள்ள பாகஸ்தர்களில் மற்றவர்களை தவிர்த்து ஒருவரால் எழுதிக்கொடுக்கப்பட்டிருப்பதால் அந்த தானம் செல்லத்தக்கதல்ல. மேற்படி தாவா சொத்து பாகம் பிரியாத கூட்டுக்குடும்ப சொத்து. வாதியின் தகப்பனார் ஆறுமுகம் இறந்த பிறகு¸ அவரது மகன்களான வாதி மற்றும் முதல் பிரதிவாதி இருவரும் பொதுக்குடும்ப சொத்துக்களை பொதுவாக அனுபவித்து வந்து¸ 10 ஆண்டுகளுக்கு முன்பு தங்களுக்குள் வாய்மொழி பாகம் பிரித்துக்கொண்டதில் தாவா சொத்து முதல் பிரதிவாதியின் பாகத்திற்கு ஒதுக்கப்பட்டது. இந்த பிரதிவாதி¸ முதல் பிரதிவாதிக்கு எதிராக கடனுறுதிச்சீட்டின் அடிப்படையில் பண்ருட்டி சார்பு நீதிமன்றத்தில் எஸ்.சி.180/06 என்ற வழக்கை தாக்கல் செய்து தனக்கு சாதகமாக தீர்ப்பாணை பெற்று அதன் அடிப்படையில் பண்ருட்டி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு எண்.32/97 தாக்கல் செய்து¸ தாவா சொத்து 9.3.2000 ஆம் தேதி ஏலத்திற்கு கொண்டுவரப்பட்டு மேற்படி தாவா சொத்தை இந்த பிரதிவாதி ஏலத்தில் எடுத்தார். 1.6.2002 ஆம் தேதி மேற்படி ஏலம் உறுதிசெய்யப்பட்டு¸ ஏலசான்றிதழ் இந்நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது. தாவா சொத்து ஜப்தி செய்தது முதல் ஒப்புதல் எடுத்தவரை அனைத்து விபரங்களும் வாதியின் சகோதரரான முதல் பிரதிவாதிக்கு தெரியும். அவ்வாறு வாதியின் உரிமை மறுக்கப்பட்டிருந்தால் வாதி உ.வி.மு.ச. பிரிவு 47-ன் கீழ் பரிகார மனு தாக்கல் செய்திருக்கவேண்டும். ஏலசான்றிதழின் அடிப்படையில் இந்த பிரதிவாதி இ.ஏ.30/2000 தாக்கல் செய்து தாவா சொத்தை 18.8.2000 ஆம் தேதி ஒப்புதல் எடுத்தார். அதுமுதல் இந்த பிரதிவாதி தாவா சொத்தின் அனுபவத்தில் இருந்துவருகிறார். 26.11.2002 ஆம் தேதி இந்த பிரதிவாதி தாவா சொத்தில் உழ முற்பட்டபோது¸ வாதி¸ முதல் பிரதிவாதியுடன் வந்து அதனை தடுத்தார். எனவே இந்த பிரதிவாதி 9.12.2002 ஆம் தேதி இந்நீதிமன்றத்தில் விளம்புகை மற்றும் நிரந்தர உறுத்துக்கட்டளை பரிகாரம் கோரி மு.வ.298/02 என்ற வழக்கையும்¸ ஐ.ஏ.1719/02 என்ற இடைக்கால மனுவையும் வாதி மற்றும் முதல் பிரதிவாதிக்கு எதிராக தாக்கல் செய்தார். முதல் பிரதிவாதிக்கு மேற்படி வழக்கில் நல்ல கட்சி இல்லை என்பதால் வாதியுடன் சேர்ந்துகொண்டு தவறான ஆவணங்களை ஏற்படுத்திக்கொண்டு வாதி இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். மேலும் தாவா சொத்தை இந்த பிரதிவாதி உண்மையாக ஒப்புதல் எடுக்கவில்லை என்பது தவறு. சாட்சிகள் முன்னிலையில் தாவா சொத்து குறித்து நீதிமன்ற அமீனா மூலம் இந்த பிரதிவாதிக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டது. எனவே வாதியால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட வேண்டியதொன்றாகும்.

7. மேற்படி வழக்குரை மற்றும் எதிர்வழக்குரையை பரிசீலனை செய்தபின்னர் 20.9.2004
ஆம் தேதி கீழ்கண்ட எழுவினாக்கள் வனையப்பட்டுள்ளன.
1. 24.4.1990 தேதியிட்ட செட்டில்மெண்ட் பத்திரம் உண்மையானதா? செல்லத்தக்கதா?
2. வழக்குச்சொத்து வாதிக்கு பாத்தியமானதா? அதன் சுவாதீனத்தில் வாதி இருந்து வருகிறாரா?
3. வழக்குச்சொத்து வாய்மொழியாக 1 ஆம் பிரதிவாதியின் பாகத்திற்கு ஒதுக்கப்பட்டு. அதன் சுவாதீனத்தில் 1 ஆம் பிரதிவாதி இருந்துவருவதாக கூறுவது உண்மையா?
4. பற்றுகை உத்தரவு மற்றும் 9.3.2000 ஆம் தேதியிட்ட நீதிமன்ற ஏலம் ரத்து செய்யக்கூடியதா?
5. வாதி கோரியவாறு நிரந்தர உறுத்துக்கட்டளை கிடைக்கத்தக்கதா?
6. வாதிக்கு என்ன பரிகாரம் கிடைக்கத்தக்கது?

8. இவ்விரு வழக்குகளிலும் சம்மந்தப்பட்ட பிரச்சனை¸ சொத்து விபரம் மற்றும் தரப்பினர்கள் ஆகியவை ஒன்றாக இருப்பதன் அடிப்படையில் எளிமை கருதி இவ்விருவழக்குகளையும் ஒன்றாக இணைத்து நடத்த ஐ.ஏ.109/2012 தாக்கல் செய்யப்பட்டு¸ அது அனுமதிக்கப்பட்டதின்பேரில் சாட்சிகள் மற்றும் சான்றாவணங்கள் முந்தைய வழக்கான ஓ.எஸ்.298/2002 வழக்கில் குறியீடு செய்யப்பட்டது. இவ்விரு வழக்குகளின் சாராம்சங்கள்¸ வாதி மற்றும் பிரதிவாதிகள் ஒன்றாக இருப்பதால் சாட்சிகள் மற்றும் சான்றாவணங்கள் குறியீடு செய்யப்பட்ட ஓ.எஸ்.298/2002 வழக்கின் வாதியை வாதி என்றும்¸ பிரதிவாதிகளை பிரதிவாதிகள் என்றும் பொருண்மைகள் கையாளப்படுகிறது. இவ்வழக்கில் வாதிதரப்பில் வா.சா.1 முதல் வா.சா.4 வரையிலான சாட்சிகள் விசாரிக்கப்பட்டு வா.சா.ஆ.1 முதல் வா.சா.ஆ.6 வரையிலான சான்றாவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. பிரதிவாதிகள்தரப்பில் பி.சா.1 மற்றும் பி.சா.2 சாட்சிகளாக விசாரிக்கப்பட்டு பி.சா.ஆ.1 முதல் பி.சா.ஆ.12 வரையிலான சான்றாவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன.

30) மேலும் பி.சா.1 தன் சாட்சியத்தில் இந்த சொத்துகள் அனைத்தும் (தாவா சொத்துகள்) தங்கள் பூர்வீக சொத்துகள் என்றும் அப்பா சம்பாதித்த சொத்துக்கள் என்றும் மூதாதையர் காலத்தில் தன் அப்பா வாங்கினார் என்றும் தன் அப்பாவிற்கு பூர்வீக சொத்து எவ்வளவு என்றும் தன் தகப்பனார் கிரயம் பெற்ற சொத்து எவ்வளவு என்றும் தனக்கு தெரியாது என்றும் சாட்சியம் அளித்துள்ள நிலையில் மேற்கண்டவாறு அவரது தகப்பனார் உயிருடன் இருந்தபோது மூதாதையர் காலத்திலேயே மேற்படி சொத்துகள் வாங்கப்பட்டது என்பதை உறுதிபடுத்தி தெளிவாக்கும் முகமாக தன் தகப்பனார் கிரயம் பெற்ற கிரய ஆவணங்களை தாக்கல் செய்து நிரூபிக்கவேண்டிய கடமை 2 ஆம் பிரதிவாதிக்கு உள்ளது. ஆனால் மேற்படி ஆவணங்கள் அப்பா காலத்திலேயே எரிந்துபோய்விட்டதாக சாட்சியம் அளித்துள்ளபோதிலும் அவைகளின் சார்பதிவாளர் அலுவலக சான்றிட்ட நகலையாவது தாக்கல் செய்து தன் தகப்பனாரின் உரிமை மூலத்தை நிரூபித்து அதன் மூலம் தன் உரிமையை நிலைநாட்ட முயற்சித்திருக்கலாம். ஆனால் அதுபோன்று எந்தவொரு ஆவணமும் பி.சா.ஆ.1யை உறுதிபடுத்தும் வகையில் இந்த வழக்கில் 2ம் பிரதிவாதி தரப்பில் முன்னிலைப்படுத்தப்படவில்லை. மேலும் வாதிதரப்பில்¸ தாவா சொத்து 2 ஆம் பிரதிவாதியின் தகப்பனார் கிரயம் பெறப்பட்ட சொத்து என்றும்¸ அந்த சொத்தை தனக்கு தானசெட்டில்மெண்ட் எழுதிவைத்ததாக கூறும் பிரதிவாதி¸ மேற்படி சொத்து தனது தகப்பனாருக்கு கிரயம் பெற்ற வகையில் பாத்தியம் என்றும்¸ அதனை தன் தகப்பனார் தனக்கு தானமாக எழுதிக்கொடுத்தார் என்பதை ஆவணசாட்சியம் கொண்டோ¸ வாய்மொழி சாட்சியம் கொண்டோ நிரூபிக்கவில்லை. தன் தகப்பனார் தனக்கு தானசெட்டில்மெண்ட் எழுதிவைத்ததாக கூறும் பிரதிவாதி¸ தனது கட்சியை நிரூபிக்க தானசெட்டில்மெண்டில் உள்ள ஒரு சாட்சியையாவது விசாரித்து தனது கட்சியை நிரூபித்திருக்கவேண்டும். ஆனால்¸ அவ்வாறு நிரூபிக்கத் தவறியிருக்கிறார். மேலும் வாதிதரப்பில் கீழ்கண்ட முன்தீர்ப்புகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

1) 2015 (1) MWN (Civil) 465
2) 87 LW Page 799
T.P.Act - Sec.3 and 123 : Indian Succession Act (1925) Sec.63 and 68 and Evidence Sec.68 and 90 and Hindu Law - Attestation, requirement as to - Proof of – Examination of witnesses to speak to attestation by both attestors - Necessity - Failure , effect of -Sufficiency of examining one attestor - Scope - Gift of an office of trustee by turn – Rule as to - Public policy - Choice of one among the next heirs, not permissible.

மேற்படி முன்தீர்ப்புகளில் கண்ட சட்டப்பிரிவுகளின்படி ஒரு தானசெட்டில்மெண்டை நிரூபிக்க அதில் சாட்சி கையொப்பம் போட்ட சாட்சிகளைக் கொண்டு நிரூபிக்கவேண்டும் என்றும்¸ தவறும்பட்சத்தில் ஒரு சாட்சியைக்கொண்டாவது நிரூபிக்கவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இவ்வழக்கைப் பொறுத்தவரையில் பிரதிவாதிதரப்பில் ஒரு சாட்சியைக்கொண்டுகூட தனது தரப்பை நிரூபிக்கவில்லை. மேலும் பிரதிவாதிதரப்பில் மேற்படி சொத்து தனது தந்தை ஆறுமுகத்திற்கு கிடைத்து அதன் அடிப்படையில்¸ தனக்கு தன் தகப்பனார் தானம் எழுதிக்கொடுத்தார் என்றும் கூறும் கட்சி சம்மந்தமாக எவ்வித ஆவண சாட்சியமோ¸ வாய்மொழி சாட்சியமோ கொண்டு நிரூபிக்கவில்லை என்பது தெளிவாக தெரியவருகிறது.

32)இதுகுறித்து வாதி சக்ரபாணி தரப்பு கற்றறிந்த வழக்குரைஞர் தன் வாதுரையின்போது இந்து (Hindu Law) பிரிவு 377 Coparcener's gift or will கூட்டுக்குடும்ப சொத்துகளை பொறுத்து ஒரு கூட்டுபாகஸ்தர் தனது பிரிபடாத பாகத்தை பொறுத்து எழுதி தரும் தானமானது சட்டப்படி செல்லாத ஒன்று என மேற்படி பிரிவு கூறுகிறது என்று வாதிட்டு தன் தரப்பு கூற்றுக்கு ஆதாரமாக மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகளான

(1) AIR 1970 Chennai Page 113
(2) 86 Law weekly Page 218

சுட்டிக்காட்டினார். மேற்படி முன்னோடி தீர்ப்புரைகள் இந்த வழக்கில் வாதி சக்ரபாணி தரப்பு கட்சிக்கு மிகவும் பொருந்தக்கூடியதாகவும் ஏற்புடையதாகவும் உள்ளதாக இந்நீதிமன்றம் கருதுகிறது.

33) எனவே மேலே விரிவான முறையில் அலசி ஆராய்ந்த வகையில்¸ அ.வ.எண்.298/2002 சம்மந்தப்பட்ட தாவா சொத்தான புல எண்.410 ல் 0.26 செண்ட் இந்த 1¸2 பிரதிவாதிகள் உள்ளிட்ட இந்து கூட்டு குடும்ப சொத்தாக இருந்துள்ளது என்பதும் அச்சொத்து பொறுத்து 2ம் பிரதிவாதிக்கு அவரது தகப்பனார் ஆறுமுகம் தனிப்பட்ட உரிமையில் பி.சா.ஆ.1 செட்டில்மெண்ட் ஆவணம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது சட்ட நிலையில் ஏற்கத்தக்கதல்ல எனதீர்மானித்துள்ள நிலையிலும்¸ மேற்படி சொத்து 1¸2 பிரதிவாதிகளின் குடும்ப சொத்து என்பதாலேயே 1ம் பிரதிவாதி மாயவன் பெற்ற கடனுக்காக அவர் செலுத்தவேண்டிய எஸ்.சி.எண்.160/96 தீர்ப்பாணை அடிப்படையில் அச்சொத்தை வாதி சக்ரபாணி பற்றுகை ஏற்படுத்தி ஏலம் எடுத்து நீதிமன்ற அமினா மூலம் சுவாதினம் எடுத்துள்ளார் என்பது தெளிவாக தெரிய வருகிற நிலையில். அ.வ.எண்.298/2002 வழக்கின் எழுவினா எண்.1-க்கு தாவா சொத்து 1ம் பிரதிவாதிக்கும் உரிமை உள்ள கூட்டு குடும்ப சொத்து என்றும்¸ எழுவினா எண்.2-க்கு 9-3-2000ல் நீதிமன்ற ஏலம் நடந்தது உண்மை என்றும்¸ எழுவினா எண்.3-ககு; அந்த நீதிமன்ற ஏலம் மூலம் சொத்தை வா.சா.ஆ.1 மூலம் ஏலம் எடுத்து வா.சா.ஆ.2 மூலம் வாதி சக்ரபாணி சுவாதீனம் எடுத்து அனுபவித்து வருகிறார் என்றும் விடை அளிக்கப்படுகிறது. மேலும் அ.வ.எண்.58/2003 வழக்கின் எழுவினா எண்.1-க்கு 24-4-1990 தேதிய பி.சா.ஆ.1 செட்டில்மெண்ட் ஆவணம் உண்மையானதுதான் என்றாலும் அது சட்டப்படி செல்லத்தக்கதல்ல என்றும் எழுவினா எண்.3- க்கு வழக்கு சொத்து 1ம் பிரதிவாதியும் உள்ளிட்ட கூட்டு குடும்பசொத்து என்றும் அதன் சுவாதீனத்தில் 1ம் பிரதிவாதியும் சேர்ந்து இருந்து வந்துள்ளார் என்றும் விடை காணப்படுகிறது.

38) அ.வ.எண்.298 / 2002 :
முடிவாக இவ்வழக்கானது அனுமதிக்கப்பட்டு¸ அ.வ.எண்.298/2002 வழக்கில் வாதி சக்ரபாணி தாவாசொத்து வாதிக்கு பாத்தியமானது என கோரியுள்ள விளம்புகை பரிகாரமும்¸ தாவாசொத்தை வாதி அமைதியான முறையில் அனுபவித்து வருவதை பிரதிவாதிகளோ¸ அவர்வகை ஆட்களோ எவ்விதத்திலும் இடையூறு செய்யக்கூடாது என கோரியுள்ள நிரந்தர உறுத்துக்கட்டளை பரிகாரமும் வழங்கி வாதிக்கு ஆதரவாக தீர்ப்பளித்து தீர்ப்பாணை பிறப்பிக்கப்படுகிறது. மேலும் அவரவர் செலவு தொகைகளை அவரவர்களே ஏற்றுக்கொள்ளவேண்டுமென உத்தரவிடப்படுகிறது.
39) அ.வ.எண்.58 / 2003 :
முடிவாக¸ அ.வ.எண்.58/2003 வழக்கில் வாதி முத்துலிங்கம் கோரிய விளம்புகை மற்றும் நிரந்தர உறுத்துக்கட்டளை பரிகாரம் கிடைக்கத்தக்கதல்ல என முடிவு கண்டு வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும்¸ அவரவர் செலவு தொகைகளை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டுமென உத்தரவிடப்படுகிறது.


No comments:

Post a Comment