இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 294(பி)¸ 324

நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் - 1 சிவகங்கை
முன்னிலை: திருமதி. வா.தீபா¸ எம்.எல்
நீதித்துறை நடுவர் எண்- 1
சிவகங்கை
2016 ம் ஆண்டு ஜனவரி மாதம் 25 ம் நாள் திங்கள்கிழமை
ஆண்டுப்பட்டிகை வழக்கு எண் 12 / 2014

குற்றம் முறையிடுபவர் : 
அரசுக்காக
காவல் ஆய்வாளர்
மதகுபட்டி காவல் நிலையம்
குற்ற எண் 30/13

குற்றம் சாட்டப்பட்டவர் :
சிவா (எ) பெரியகருப்பன் (வயது 24-2013)
த.பெ. பெரியகருப்பன்¸
அமராவதி புதூர்¸
தேவகோட்டை தாலுகா¸
(இ) கீழக்கோட்டை¸
மதகுபட்டி சரகம்.

குற்றம் முறையிடப்பட்டது : குற்றம் சாட்டப்பட்டவர் மீது இ.த.ச.பிரிவுகள் 294(பி)¸324 ன் கீழ் முறையிடப்பட்டது.


குற்றம் வனையப்பட்டது : குற்றம் சாட்டப்பட்டவர் மீது இ.த.ச.பிரிவுகள் 294(பி)¸ 324 கீழ் வனையப்பட்டது.

தண்டனை விவரம் : குற்றவாளி இல்லை

தீர்மானம் : அரசு தரப்பு குற்றம் சாட்டப்பட்டவர் மீது இ.த.ச.பிரிவுகள் 294(பி)¸ 324 ன் கீழும் குற்றம் இழைத்துள்ளதாக சந்தேகத்திற்கு இடமின்றி நிருபிக்கப்படவில்லை

தீர்ப்பு : இறுதியாக அரசு தரப்பு குற்றம் சாட்டப்பட்டவர் மீது இ.த.ச.பிரிவுகள் 294(பி); 324 ன் கீழ் சுமத்திய குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிருபிக்கத் தவறியதால் சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப் பட்டவருக்கு அளித்து கு.வி.மு.ச.பிரிவு 248(1) ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலை செய்யப்படுகிறார் என்று தீர்ப்பளிக்கப்படுகிறது.

வழக்கிலிருந்து முக்கிய குறிப்புகள்:

2. குற்ற இறுதி அறிக்கையின் சுருக்கம்
22.1.2013 ம் தேதி இரவு 19.30 மணிக்கு இவ்வழக்கின் கீழக்கோட்டையைச்சேர்ந்த பொன்னப்பன் (எ) முத்தையா மகன் கோச்சடை என்பவரை பார்த்து¸ குற்றம்சாட்டப்பட்டவர்¸ சுண்ணி மகனே¸ நோத்தால ஒக்க என கெட்ட வார்த்தைகளால் பேசியும்¸ குற்றம்சாட்டப்பட்டவர் கையில் வைத்திருந்த கத்தியால் வாதியின் வயிற்றிலும்¸ இடது பக்க தொடையிலும் கீறி சிறிய காயத்தை ஏற்படுத்தியதாக¸ குற்றம் சாட்டப்பட்டவர் மீது இ.த.ச.பிரிவுகள் 294(பி)¸ 324 ன் கீழ் குற்ற முறையிடுபவரால் குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

3. குற்றம் சாட்டப்பட்டவருக்கு வழக்கின் ஆவணங்கள் அனைத்தும் கு.வி.மு.ச. பிரிவு 207ன் கீழ் இலவசமாக வழங்கப்பட்டது.

4. போதிய அவகாசம் கொடுத்து குற்றம் சாட்டப்பட்டவரிடம் குற்றம் பற்றி விளக்கிக் கூறி வினவப்பட்டபோது அவர் குற்றத்தை மறுத்துள்ளார். ஆவணங்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர் மீது இ.த.ச.பிரிவுகள் 294(பி)¸ 324 ன் கீழ் குற்றச்சாட்டுகள் வனைந்து விளக்கி வினவிய போது குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி இல்லை என்று தெரிவித்துள்ளார்.

5. அரசு தரப்பில் அ.சா.1 மற்றும் 2 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். அ.சா.ஆ.1 முதல் அ.சா.ஆ.6 வரை சான்றாவணங்கள் மற்றும் சானறு பொருள் 1 குறியீடு செய்யப்பட்டுள்ளன. அ.சா.1 கொடுத்த புகார் மனு அ.சா.ஆ.1 ஆகும். அ.சா.1 கொடுத்த புகாரைப் பெற்று நிலைய பொறுப்பில் இருந்த சார்பாய்வாளர் கிருஷ்ணன் வழக்கினை பதிவு செய்ததாகவும¸ சார்பு ஆய்வாளர் தயாரித்த முதல் தகவல் அறிக்கை அ.சா.ஆ.2 ஆகும். சார்பு ஆய்வாளர் சம்பவ இடம் சென்று சாட்சிகள் முன்னிலையில் தயாரித்த பார்வை மகஜர் அ.சா.ஆ.3¸ வரைபடம் அ.சா.ஆ.4 ஆகும். காயச்சான்றிதழ் அ.சா.ஆ.5 ஆகும் அத்தாட்சி அ.சா.ஆ.6 ஆகும். 10 செ.மீ நீளமுள்ள ரெட் கலர் கைபிடி 9 செ.மீ நீளமுள்ள ஆக மொத்தம் 19 செ.மீ நீளமுள்ள கத்தி சான்று பொருள்.1 ஆக குறியீடு செய்யப்பட்டுள்ளது. அரசு தரப்பு சாட்சி 1 அரசு தரப்பில் சாட்சியம் அளித்துள்ளார். அ.சா.2 தனது புலன் விசாரணை முடித்து குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்ததாக சாட்சியம் அளித்து உள்ளார்.

6. பதிவு செய்யப்பட்ட சாட்சியங்களின் குற்றம் சாட்டப்பட்டவருக்கு பாதகமான சங்கதிகளை குறித்து கீழ் கு.வி.மு.ச.313(1)(ஆ)ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் எடுத்துக்கூறி விளக்கி வினவிய போது அரசுத்தரப்பு சாட்சியம் பொய் என்றும் தங்கள் தரப்பில் விசாரிக்க சாட்சிகள் இல்லையென்றும் தெரிவித்துள்ளனர்.

7. இவ்வழக்கில் தீர்மானிக்க வேண்டிய பிரச்சினை யாதெனில் குற்றம் சாட்டப்பட்டவர் மீது இ.த.ச.பிரிவுகள் 294(பி)¸ 324 ன் கீழ் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை அரசுத் தரப்பு சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபித்துள்ளதா? இல்லையா? என்பதுதான்

8. பிரச்சனை
;22.1.2013 ம் தேதி இரவு 19.30 மணிக்கு இவ்வழக்கின் கீழக்கோட்டையைச்சேர்ந்த பொன்னப்பன் (எ) முத்தையா மகன் கோச்சடை என்பவரை பார்த்து¸ குற்றம்சாட்டப்பட்டவர்¸ சுண்ணி மகனே¸ நோத்தால ஒக்க என கெட்ட வார்த்தைகளால் பேசியும்¸ குற்றம்சாட்டப்பட்டவர் கையில் வைத்திருந்த கத்தியால் வாதியின் வயிற்றிலும்¸ இடது பக்க தொடையிலும் கீறி சிறிய காயத்தை ஏற்படுத்தியதாக¸ அரசு தரப்பு வழக்கு 8. அ.சா1 ஆக விசாரிக்கப்பட்டுள்ள¸ புகார்தாரர் தனது சாட்சியத்தில்¸ ஆஜர் எதிரியை தனக்கு தெரியும் என்றும்¸ அவர் பக்கத்து வீட்டில் வசித்து வருகிறார் என்றும்அவருக்கும் தனக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாகவும் அதன் காரணமாக தான் கடந்த 22.1.2013 ம் தேதி மாலை சுமார் 7.30 மணியளவில் தன்னை சிலர் அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கி விட்டார்கள் என்றும்¸ அதன் காரணமாக தான் இந்த எதிரியின் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டதாகவும் அவருக்கும் இந்த வழக்கிற்கும் சம்மந்தமில்லை என்றும்¸ இப்பொழுது தான் அவருடன் சமாதானமாகிவிட்டேன் என்றும்¸ தன்னிடம் காட்டப்படும் புகார் வாக்குமூலத்திலுள்ள கையெழுத்து தன்னுடையது தான் என்றும் சாட்சியமளித்து உள்ளார்.

9. அ.சா.2 ஆக விசாரிக்கப்பட்டுள்ள புலன் விசாரணை அதிகாரி தனது விசாரணையில் வழக்கின் எதிரியை கைது செய்து 30-13 குற்ற எண்ணில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது மற்றும் விசாரணையை முடித்து எதிரி மீது குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்தது குறித்து சாட்சியம் அளித்துள்ளார்.

10. மேற்கண்ட சாட்சியத்தில் புகார்தாரர் " தன்னை சிலர் அடையாள ம் தெரியாத நபர்கள் தாக்கி விட்டார்கள் என்றும்¸ அதன் காரணமாக தான் இந்த எதிரியின் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து விட்டதாகவும் அவருக்கும் இந்த வழக்கிற்கும் சம்மந்தமில்லை என்றும்¸ இப்பொழுது தான் அவருடன் சமாதானமாகிவிட்டேன்" என்று கூறுவதன் மூலம் புகார்தாரர் அரசு தரப்பு வழக்கிலிருந்து வேறுபட்டு சாட்சியம் அளித்துள்ளார். மேலும் அரசு தரப்பு சாட்சியின் சாட்சியத்தில் உள்ள சங்கதிகள் எதிரி மீது உள்ள குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய குற்றக்கூறுஉள்ளதாக அமையவில்லை.

11. அரசு தரப்பு வழக்கறிஞர் புகார்தாரரே பிறழ் சாட்சியாக மாறி சாட்சியம் அளித்துள்ளார் என்பதனாலும் மற்ற சாட்சிகளை விசாரிப்பதனால் அரசு தரப்பு வழக்கை நிரூபிக்க வாய்ப்பு இல்லை என்பதனாலும்¸ புகார்தாரர் மற்றும் எதிரி; தங்களுக்குள் சமரசம் செய்த கொண்டதாலும் மற்ற சாட்சிகளை விசாரிப்பதால் நீதிமன்றத்தின் நேரம் தான் வீணாகும் என்பதனால்¸ மற்ற சாட்சியங்களை விசாரிக்காமல் விலக்கு அளித்து அரசு தரப்பு சாட்சியங்களை முடித்துள்ளார்.

12. இந்த வழக்கில் அரசு தரப்பிற்கு ஆதரவாக காவல் நிலையத்திலுள்ள தலைமை காவலர் மட்டுமே சாட்சியம் அளித்துள்ளார். அந்த சாட்சியானது தனது அரசு பணியை செய்யும் போது சொன்ன சாட்சியாகவே கருதமுடியும். ஏனெனில் அரசு தரப்பு முக்கிய சாட்சியான புகார்தாரர் தாமே அரசு தரப்பு வழக்கிற்கு ஆதரவாக சாட்சி அளிக்காத போது தலைமை காவலரின் சாட்சியத்தை வைத்து மட்டுமே எதிரி குற்றவாளி என தீர்மானிக்க முடியாது.
மேலும் எதிரி தரப்பு கற்றறிந்த வழக்கறிஞர் 

மோகன் அபோட் எதிர் பஜ்சாப் அரசு 
2008(3) MLJ Crl 212 SC 
மற்றும் 
மருத்துவர் அரவிந்த் பர்சால் எதிர் மத்திய பிரதேசஅரசு 
2008(3) MLJ Crl 1517 SC
என்ற மாண்புமிகு உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் வாதிட்டார் அந்த தீர்ப்பின் சாராம்சம் என்னவென்றால்

'தனி நபர் சார்ந்த எந்த ஒரு பிரச்சினையிலும் அரசு தரப்புக்கு சாதகமான முடிவினை எட்ட முடியாத நிலையில் வழக்கு இருக்குமானால் அந்த வழக்கை நிலுவையில் வைத்திருப்பது ஒர் ஆடம்பரமே என்பதால் நீதிமன்றமே குற்றவியல் நடவடிக்கைகளில் பொதுவான சமாதானத்தை ஏற்றுக் கொண்டு நீதிமன்றத்தின் நேரத்தை சேமித்து அதை அர்த்தமுள்ள வழக்குகளை மிகவும் நன்முறையில் தீர்வு காண்பதில் செலவிடமுடியும்" என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

13. மேலும் புகார்தாரர் சமாதானத்தின் அடிப்படையில் வழக்கை மேல் நடத்த விரும்பாத பட்சத்தில்¸ குற்ற வழக்கை மேல் நடத்தவது சட்டத்திற்கு புறம்பான ஒரு செயல் என அறிவுறுத்தப்பட்டு;ள்ளது. எதிரி தரப்பு கற்றறிந்த வழக்கறிஞரின் கூற்று மாண்புமிகு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பார்க்கும் போது ஏற்புடையதாகவே உள்ளது.

அரசு தரப்பு சாட்சியான புகார்தாரர் அரசு வழக்கை ஒத்து சாட்சி அளிக்காது அரசு வழக்கிற்கு மாறுபட்டு சாட்சியம் அளித்துள்ள சூழ்நிலையில்¸ தலைமை காவலர் சாட்சியம் மட்டுமே குற்றம் சாட்டப்பட்டவருக்கு தண்டனை பெற்றுத்தர போதுமான சாட்சியாக அமையவில்லை. ஆகவே அரசு தரப்பு வழக்கை போதிய சாட்சியத்தின் அடிப்படையில் அரசு நிருபிக்க தவறிவிட்டதால் சந்தேகத்தின் பலனை எதிரிக்கு அளித்து எதிரியை விடுதலை செய்யலாம் என இந்த நீதிமன்றம் முடிவு செய்கிறது.

மேற்கண்ட காரணங்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர் மீது இ.த.ச.பிரிவுகள் 294(பி)¸ 324 ன் ன் குற்றவாளி; அல்ல என இந்த பிரச்சினையை இந்நீதிமன்றம் முடிவு காண்கிறது.

இறுதியாக அரசு தரப்பு குற்றம் சாட்டப்பட்டவர் மீது இ.த.ச.பிரிவுகள் 294(பி)¸ 324 ன் கீழ் சுமத்திய குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிருபிக்கத் தவறியதால்
சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப் பட்டவருக்கு அளித்து கு.வி.மு.ச.பிரிவு 248(1)- ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலை செய்யப்படுகிறார் என்று தீர்ப்பளிக்கப்படுகிறது.


No comments:

Post a Comment