இந்திய ஒப்பந்தச்சட்டம் பிரிவு 171 | Section 171 of Indian Contract Act

மாவட்ட உரிமையியல் நீதிமன்றம்¸ பண்ருட்டி
முன்னிலை: திருமதி .ஏ.உமாமகேஸ்வரி பி.எஸ்ஸி.¸பி.எல்.¸
மாவட்ட உரிமையியல் நீதிபதி¸ பண்ருட்டி
திருவள்ளுவராண்டு 2046¸ ஜய ஆண்டு¸ தைத்திங்கள் 26 ஆம் நாள்
2015 ம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 09 ஆம் நாள் திங்கட்கிழமை
அசல் வழக்கு எண்.637 / 2004
1. கே.குப்பம்மாள்
2. எஸ்.சிவசங்கரி
3. கே.வெங்கடேசன் வாதிகள்
/எதிர்/
பாரத வங்கி¸ பண்ருட்டி கிளைக்காக 
அதன் கிளை மேலாளர் பிரதிவாதி

வழக்கிலிருந்து முக்கிய குறிப்புகள்:

"இவ்வழக்கானது 04.04.1981 ஆம் தேதியிட்ட டி.கே.கே.பழனிசாமி செட்டியார்¸ டி.கே.கே.குப்பு செட்டியார் என்பவருக்கு எழுதிக்கொடுத்த பதிவு செய்யப்பட்ட அசல் கிரய ஆவணத்தை பிரதிவாதி¸ வாதிகளுக்கு திருப்பிக் கொடுக்கவேண்டுமென செயலுறுத்துக்கட்டளை பரிகாரம் வழங்கக்கோரியும் மற்றும் தாவா செலவுத்தொகை கேட்டும் வாதிகளால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது."

"2. வழக்குரையின் சுருக்கம்:
முதல் வாதி¸ குப்பு செட்டியாரின் மனைவி. 2¸3 வாதிகள் அவருடைய மகள் மற்றும் மகனாவர். மேற்படி குப்பு செட்டியார் 10.11.1996 ஆம் தேதி இறந்துவிட்டார். மேற்படி குப்பு செட்டியார் உயிருடன் இருக்கும்போது¸ மேற்படி குப்புசெட்டியாரின் மூத்த சகோதரரான பழனிசாமி செட்டியாரின் மகனான பாலு என்பவர் பிரதிவாதியிடமிருந்து பெற்ற கார் கடனுக்காக மேற்படி பாலு என்பவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க குப்பு செட்டியார் ஜாமீன்தாரராக இருக்க ஒப்புக்கொண்டு தனக்குஉரிமையான 4.4.1981 ஆம் தேதியிட்ட ஆவண எண்.399/1981 உடைய ஆவணத்தை கூடுதல் காப்பீடாக பிரதிவாதி வங்கியில் தாக்கல் செய்தார். மேற்படி பாலு கடனை செலுத்த தவறிய காரணத்தால் பிரதிவாதி வங்கியானது கடலூர் சார்பு நீதிமன்றத்தில் மு.வ.16/1986 என்ற வழக்கைத் தாக்கல் செய்து பாலு செட்டியார் மற்றும் குப்புச் செட்டியாருக்கு எதிராக தீர்ப்பாணை பெற்றது. மேற்படி பாலு செட்டியார் மற்றும் குப்பு செட்டியார் இருவரும் இறந்துவிட்டனர். அதன்பிறகு பிரதிவாதி வங்கி மேற்படி குப்பு செட்டியாரின் வாரிசுகளையும்¸ பாலு செட்டியாரின் வாரிசுகளையும் தரப்பினர்களாக சேர்த்து பண்ருட்டி சார்பு நீதிமன்றத்தில் மேற்படி தீர்ப்பாணையை அனுசரித்து நிறைவேற்று விண்ணப்ப எண்.80/1999 ஐ தாக்கல் செய்தது. அதன் பின்னர்தான் வாதிகளுக்கு வழக்கு பற்றிய விபரம் தெரியவந்தது. அதனை எதிர்த்து வாதிகள் ஆட்சேபனை தாக்கல் செய்து¸ முழு விசாரணைக்குப் பிறகு மேற்படி நிறைவேற்று மனுவானது 31.1.2000 ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. அதன் பின்னர் 2001 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மேற்படி 4.4.1981 ஆம் தேதியிட்ட அசல் கிரய ஆவணத்தை திருப்பிக் கொடுக்கும்படி வாதிகள் வழக்கறிஞர் மூலம் அறிவிப்பு அனுப்பினர். நோட்டீசை பெற்றுக்கொண்ட பிரதிவாதி வங்கி பதில் அறிவிப்பு கொடு;க்கவில்லை. அதன் பிறகு 3 ஆம் வாதி பலமுறை பிரதிவாதி வங்கிக்கு நேரடியாகசென்று மேற்படி அசல் ஆவணத்தைக் கேட்டபோது அற்ப காரணங்களைக் கூறி தாமதம் செய்தனர். எனவே மீண்டும் 14.1.2003 ஆம் தேதி வாதிகள் மீண்டும் வழக்கறிஞர் மூலம் அறிவிப்பு கொடுத்தனர். அதனையும் பெற்றுக்கொண்ட பிரதிவாதி வங்கி பதிலறிவிப்பும் கொடுக்கவில்லை¸ அசல் ஆவணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. கடனானது பைசல் செய்யப்படும்வரைதான் பிரதிவாதி வங்கிக்கு மேற்படி அசல் ஆவணத்தை வைத்துக்கொள்ள உரிமை உண்டு. ஆனால் இவ்வழக்கில் பிரதிவாதி¸ வாதிகளுக்கு எதிராக பெற்ற தீர்ப்பாணையை நிறைவேற்ற உரிய காலத்தில் மனு தாக்கல் செய்யாத காரணத்தால் நிறைவேற்று மனுவானது தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. மேலும் மேற்படி ஆவணத்தை கூடுதல் பொறுப்பாக வாங்கிய பிரதிவாதி வங்கியின் கடன் காலவரையறைச் சட்டத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. பிரதிவாதி வங்கி வாதிகளின் ஆவணத்தை நிறுத்தி வைக்க எவ்வித உரிமையும் இல்லை. எனவே பிரதிவாதி வங்கியால் வாதிகளிடம் சட்டப்படி வசூலிக்கப்பட வேண்டிய   கடன் ஏதும் நிலுவையில் இல்லாததால்¸ மேற்படி 4.4.1981 ஆம் தேதியிட்ட அசல் ஆவணத்தை வைத்துக்கொள்ளவும் உரிமையில்லை. அவ்வாறு வைத்துக்கொள்வது சட்டவிரோதமானது. அசல் பத்திரம் இல்லாமல் அப்பத்திரத்தில் கண்ட சொத்தை வாதிகளால் விற்கவோ¸ அல்லது வேறுவகையில் அடமானம் போன்றவை மூலம் சொத்தை பயன்படுத்த இயலவில்லை. எனவே வாதிகள்¸ பிரதிவாதி வங்கியின் சேவையில் குறைபாடு உள்ளதாக கடலூர் மாவட்ட நுகர்வோர் மன்றத்தில் நுகர்வோர் மனு எண்.105/03 ஐ மேற்படி ஆவணத்தை திரும்ப பெறவேண்டி தாக்கல் செய்து¸ அதற்கு பிரதிவாதி வங்கி ஆட்சேபனை செய்து வழக்கை நடத்தி¸ அதன்பேரில் 27.7.2004 ஆம் தேதி மேற்படி நுகர்வோர் மன்றத்தின் மூலம் வழக்கு சம்மந்தப்பட்ட ஆவணத்தைப் பெற இயலாது என்றும்¸ உரிமையியல் நீதிமன்றத்தின் மூலம் பரிகாரம் தேடிக்கொள்ள வேண்டும் என்றும் அதிகார வரம்பின் காரணமாக மேற்படி மனுவைத் தள்ளுபடி செய்தது. எனவே வாதிகள் மேற்படி அசல் கிரய ஆவணத்தை திருப்பித்தர பிரதிவாதி வங்கிக்கு செயலுறுத்துக் கட்டளை பிறப்பிக்கக்கோரி இவ்வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்கள்."

3. எதிர்வழக்குரையின் சுருக்கம்:
வாதிகளின் வழக்கு நிலைக்கத்தக்கதல்ல¸ செலவுத்தொகையுடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டியதொன்றாகும். பிரதிவாதி வங்கியில் பாலு என்பவர் பெற்ற கடனுக்காக குப்பு செட்டியார் என்பவர் ஜாமீன்தாரராக இருந்து மேற்படி கடனுக்கு கூடுதல் பொறுப்பாக மேற்படி குப்பு செட்டியாரின் 4.4.1981 ஆம் தேதியிட்ட கிரயப் பத்திரத்தை பத்திர வைப்பு மூலம் அடமானம் செய்திருந்தார். மேற்படி பாலு என்பவரோ¸ குப்பு செட்டியாரோ வங்கியில் பெற்ற கடனை திருப்பிச் செலுத்தவில்லை. எனவே பிரதிவாதி வங்கியானது கடலூர் சார்பு நீதிமன்றத்தில் மு.வ.16/1986 என்ற வழக்கைத் தாக்கல் செய்து¸ மேற்படி வழக்கில் பாலு செட்டியார் மற்றும் குப்புச் செட்டியார் ஆஜராகி தாவாப்படி தீர்ப்பாகலாம் என ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் மேற்படி வழக்கானது செலவுத்தொகையுடன் 18.4.1986 ஆம் தேதி தீர்ப்பானது. மேற்படி தீர்ப்புக்குப்பிறகு மேற்படி பாலு செட்டியாரின் கணக்கில் ஒரு சிறுதொகை தவறுதலாக வரவு வைக்கப்பட்ட விபரம் தெரியவந்து¸ மேற்படி தாவாத்தொகையை அதிகமாக மாற்றி வழக்குரையை திருத்தம் செய்வதற்காக திருத்தல் மனு தாக்கல் செய்யப்பட்டு¸ ஆனால் நீதிமன்றம் அதற்கு அனுமதிக்காத காரணத்தால் உரிய காலத்தில் இறுதிநிலை தீர்ப்பாணைக்கான மனுவைத் தாக்கல் செய்ய இயலவில்லை. எப்படியிருந்தபோதிலும் 18.4.1986 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பாணையானது பணத்திற்கான தீர்ப்பாணை மற்றும் அடமானத்திற்கான தீர்ப்பாணையாகும். எனவே மேற்படி பணத்தை திரும்ப பெறக்கோரி நிறைவேற்று மனுவானது தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையில் கடன் பெற்றவரும்¸ ஜாமீன் போட்டவரும் இறந்துவிட்டதால் அவர்களின் வாரிசுதாரர்கள் விபரங்களும்¸ அவர்களின் முகவரிகளும் தெரியாததால் நிறைவேற்று மனுவானது தாமதமாக மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மேற்படி காலதாமதம் குறித்து இவ்வழக்கின் வாதிகள் தரப்பில் எடுத்துரைக்கப்பட்டதால் மேற்படி காலதாமத மனுவானது தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே மேற்படி தீர்ப்பாணைத் தொகை¸ எதிர்கால வட்டி மற்றும் செலவுத்தொகை ஆகியவை பிரதிவாதி வங்கியால்¸ கடன் பெற்றவரிடமிருந்தோ அவரது வாரிசுகளிடமிருந்தோ வசூல் செய்யப்படாமல் நிலுவையில் இருந்துவருகிறது. மேற்படி கடனுக்கு ஈடாகத்தான் அசல் ஆவணம் பிணையமாக வைக்கப்பட்டுள்ளது. மேற்படி அசல் ஆவணத்தை வைத்திருக்க இந்திய ஒப்பந்தச்சட்டம் பிரிவு 171 ன் கீழ் பிரதிவாதி வங்கிக்கு உரிமை உண்டு. மேற்படி கடனானது பைசல் செய்யப்படும் வரை¸ வாதிகளுக்கு மேற்படி ஆவணத்தை திரும்பக்கோர உரிமையில்லை. மேற்படி கடனை பைசல் செய்ய கடன் பெற்றவரின் வாரிசுகளையும்¸ வாதிகளையும் பலமுறை பிரதிவாதி நிறுவனம் கேட்டும் கடன் இதுநாள்வரை பைசல் செய்யப்படவில்லை. மேற்படி கடனை திரும்ப பெறக்கோரி தாக்கல் செய்யப்பட்ட நிறைவேற்று மனுவானது 31.1.2000 ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே இவ்வழக்கானது மேற்படி நிறைவேற்று மனு தள்ளுபடி செய்யப்பட்ட தேதியிலிருந்து 3 வருடத்திற்குள் தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும். இவ்வழக்கானது காலாவதி தோஷத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வாதிகள் மாவட்ட நுகர்வோர் மன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் அதே பரிகாரத்தைக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள இவ்வழக்கும் நிலைக்கத்தக்கதல்ல. தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.

4. மேற்படி வழக்குரை மற்றும் எதிர்வழக்குரை ஆகியவற்றை பரிசீலனை செய்தபின்னர் 24.08.2005 ஆம் தேதி கீழ்கண்ட எழுவினாக்கள் வனையப்பட்டுள்ளன.
1) வழக்குரையில் கூறப்பட்டுள்ள 4.4.1981 தேதியிட்ட கிரயப்பத்திரத்தை பிரதிவாதி வங்கி தனது பற்றுரிமையாக இந்திய ஒப்பந்தச்சட்டம் பிரிவு 171 ன் கீழ் நிறுத்தி வைத்துக்கொள்ள உரிமை உள்ளதா?
2) இவ்வழக்கு காலவரம்பு தோஷத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதிவாதி கூறுவது சரியா?
3) இவ்வழக்கு நிலைக்கத்தக்கதா?
4) தாவாவில் வாதிகள் கோரியுள்ள செயலுறுத்துக்கட்டளை பரிகாரம் வாதிகளுக்குக்
கிடைக்கத்தக்கதா?
5) வாதிகளுக்குக் கிடைக்கக்கூடிய இதர பரிகாரம்தான் என்ன?


5. இவ்வழக்கில் வாதிகள்தரப்பில் வா.சா.1 சாட்சியாக விசாரிக்கப்பட்டு வா.சா.ஆ.1 முதல் வா.சா.ஆ.12 வரையிலான சான்றாவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. பிரதிவாதி;தரப்பில் பி.சா.1 சாட்சியாக விசாரிக்கப்பட்டு¸ பி.சா.ஆ.1 சான்றாவணம் குறியீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நீ.சா.1 விசாரிக்கப்பட்டுள்ளார்.

''8) வாதிகள் தரப்பில் வா.சா.ஆ.1 முதல் வா.சா.ஆ.12 வரையிலான ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. வா.சா.ஆ.1 என்பது 04.04.1981 ஆம் தேதியிட்ட குப்புசாமி செட்டியாருக்கு¸ பழனிசாமி செட்டியார் எழுதிக்கொடுத்த பதிவு செய்யப்பட்ட கிரயப்பத்திரத்தின் சான்றிட்ட நகலாகும்.  வா.சா.ஆ.2 என்பது மு.வ.16/86 வழக்கில் சார்வான வழக்குரை நகலாகும். வா.சா.ஆ.3 என்பது 31.1.2000 ஆம் தேதி நிறைவேற்று விண்ணப்ப எண்.80/99 ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் சான்றிட்டநகலாகும். வா.சா.ஆ.4 என்பது 31.1.2000 ஆம் தேதியிட்ட நிறைவேற்று விண்ணப்ப எண்.80/99 ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவாணையின் சான்றிட்டநகலாகும். வா.சா.ஆ.5 என்பது 12.11.2001 ஆம் தேதி வழக்கறிஞர் மூலம் வாதிகள்¸ பிரதிவாதிக்கு அனுப்பிய அறிவிப்பாகும். வா.சா.ஆ.6 என்பது சார்வான அஞ்சல் ஒப்புதல் அட்டையாகும். வா.சா.ஆ.7 என்பது 14.01.2003 ஆம் தேதி வழக்கறிஞர் மூலம் வாதிகள்¸ பிரதிவாதிக்கு அனுப்பிய அறிவிப்பாகும். வா.சா.ஆ.8 என்பது சார்வான அஞ்சல் ஒப்புதல் அட்டையாகும். வா.சா.ஆ.9 என்பது 27.07.2004 ஆம் தேதி நுகர்வோர் மனு எண்.105/03 தள்ளுபடியான உத்தரவுநகலாகும். வா.சா.ஆ.10 என்பது மு.வ.16/86 வழக்கில் சார்வான வழக்குரை நகலின் ஜெராக்ஸ். வா.சா.ஆ.11 என்பது 18.04.1986 ஆம் தேதியிட்ட மு.வ.16/86 வழக்கின் தீர்ப்பாணையின் சான்றிட்ட நகலாகும். வா.சா.ஆ.12 என்பது 18.04.1986 ஆம் தேதியிட்ட மு.வ.16/86 வழக்கின் தீர்ப்புரையின் சான்றிட்ட நகலாகும். வா.சா.1 தனது முதல் விசாரணையில் வழக்குரையை ஒட்டி சாட்சியம் அளித்துள்ளார். தனது குறுக்கு விசாரணையில்¸ பாலு செட்டியார் என்பவர் பிரதிவாதி வங்கியில் வாங்கிய கடனுக்கு கூடுதல் பொறுப்புக்காக 4.4.81 தேதிய பத்திரம் வைப்பீடு செய்யப்பட்டதாகவும்¸ மேற்படி கடனுக்கு தன்னுடைய தகப்பனார் ஜாமீன்தாரர் என்றும்¸ மேற்படி கடனை தன் தகப்பனாரோ¸ பாலு செட்டியாரோ திருப்பி செலுத்தவில்லை என்றும்¸ கடன் வாங்கிய தன் தகப்பனாரும்¸ பாலு செட்டியாரும் இறந்துவிட்டதாகவும்¸ தான் மேற்படி கடன் தொகையை செலுத்தி பிரதிவாதி வங்கியில் மேற்படி பத்திரத்தை கேட்கவில்லை என்றும்¸ 4.4.1981 தேதிய பத்திரம் மு.வ.16/86 வழக்கில்தான் தாக்கல் செய்யப்பட்டதாகவும்¸ அந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பில் பாலு செட்டியாரும்¸ தன் தகப்பனாரும் மேற்படி கடனை பைசல் செய்யவேண்டும் என்று தீர்ப்பானதாகவும்¸ மேற்படி தீர்ப்பின் அடிப்படையில் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டு¸ மேற்படி சொத்தை ஏலம்போட முடியவில்லை என்பதால் நிறைவேற்று மனு தள்ளுபடியாகிவிட்டது என்றால்¸ காலதாமதத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது என்றும்¸ தான் அறிவிப்பு கொடுத்து பிரதிவாதி வங்கியிடம் மேற்படி பத்திரத்தை கேட்டதாகவும்¸ அவர்கள் தேடித்தருவதாக சொன்னதாகவும்¸ 2000 ஆம் ஆண்டு நிறைவேற்று மனு முடிக்கப்பட்டதாகவும்¸ மேற்படி ஆவணத்தைக் கோரி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டதாகவும்¸ மேற்படி ஆவணத்தைப் பெற இயலாது என அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாகவும்¸ நிறைவேற்று மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டதால் தான் மேற்படி கடனை பைசல் செய்ய தேவையில்லை என்றும் சாட்சியம் அளித்துள்ளார். "

9) பிரதிவாதி தரப்பில் வங்கி உதவி கிளை மேலாளர் திரு.பானுகீர்த்தி என்பவர் பி.சா.1 ஆக விசாரிக்கப்பட்டுள்ளார். மேலும் பிரதிவாதி தரப்பில் மேற்படி ஆவணத்தை திருப்பிக் கொடுக்க மனு தாக்கல் செய்து மேற்படி ஆவணம் அழிக்கப்பட்டவிட்டதாக மேற்குறிப்பு செய்யப்பட்ட மனுவானது பி.சா.ஆ.1 ஆக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பி.சா.1 தனது முதல் விசாரணை சாட்சியத்தில் எதிர்வழக்குரையையொட்டி சாட்சியம் அளித்துள்ளார். தனது குறுக்கு விசாரணையில்¸ இந்த வழக்கை பற்றி தலைமை மேலாளருக்குத்தான் முழுமையாக தெரியும் என்றும்¸ மேற்படி கிரயப்பத்திரத்தை 3 ஆம் வாதி கேட்டதற்கு தேடித்தருவதாக சொல்லப்பட்டதா என்றால் அதுபற்றி தெரியாது என்றும்¸ மேற்படி கிரய ஆவணம் மு.வ.16/86 வழக்கில் தாக்கல் செய்யப்படவில்லை என்றாலும்¸ சான்றாவணமாகவும் குறியீடு செய்யப்படவில்லை என்றாலும்¸ மேற்படி ஆவணம் வங்கியில்தான் உள்ளது அதை தரக்கூடாது என்பதற்காக கெட்ட எண்ணத்தில்தான் பி.சா.ஆ.1 ஆவணத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம் என்றாலும் சரியல்ல என்றும்¸ மு.வ.16/86 வழக்கு சம்மந்தப்பட்ட கோப்பு வங்கியில் உள்ளதா என்றால் தலைமை மேலாளரைத்தான் கேட்கவேண்டும் என்றும் சாட்சியம் அளித்துள்ளார்.

10) மேலும் கடலூர் மாவட்ட நீதிமன்ற பதிவறை காப்பாளராக பணிபுரியும் திரு.ரமணன் என்பவர் நீ.சா.1 ஆக விசாரிக்கப்பட்டுள்ளார். அவர் தனது சாட்சியத்தில்¸ 4.4.1981 ஆம் தேதியிட்ட கிரயப்பத்திரம் மு.வ.16/86 என்ற வழக்கில் பிராதில் ஆவணபட்டியலிலோ¸ தீர்ப்புரையிலோ குறிப்பிடப்படவில்லை என்றும்¸ மேற்படி தீர்ப்பானது ளுரடிஅவை வழ னநஉசநந ஆக உள்ளது என்றும்¸ மேற்படி வழக்குகோப்புகளை பரிசீலனை செய்யும்போது மேற்படி ஆவணம் தாக்கல் செய்யப்படவும் இல்லை¸ குறியீடு செய்யப்படவும் இல்லை என்றும்¸ ஆனால் இவ்வழக்கின் பி.சா.ஆ.1 ஆவணத்தில் மேற்படி ஆவணம் அழிக்கப்பட்டுவிட்டதாக கண்டு எழுதப்பட்டுள்ளது என்றால் சரிதான் என்றும்¸ ஆனால் வழக்கு கோப்புகளை பரிசீலனை செய்து பார்க்கும்போது அது தவறானது என்றும்¸ மேற்படி வழக்கில் இறுதிநிலை தீர்ப்பாணை பிறப்பிக்கப்பட்டதா என்றால் கோப்புகளின் அடிப்படையில் பிறப்பிக்கப்படவில்லை என்றும்¸ ஆனால் பார்ட்-3 ஆவணங்கள் அழிக்கப்பட்டுவிட்டதாக மேற்குறிப்பை இளநிலை உதவியாளர் எழுதி வைத்ததின் அடிப்படையில் தான் கையெழுத்திட்டதாகவும்¸ மேற்படி 4.4.81 தேதியிட்ட பத்திரம் பார்ட்-3 பட்டியலின்படி அழிக்கப்பட்டிருக்கலாமா என்றால்¸ அந்த ஆவணம் மேற்படி வழக்கில் குறியீடு செய்யப்பட்டிருந்தால் அழிக்கப்பட்டிருக்கலாம் என்றும்¸ மேற்படி ஆவணம் இறுதிநிலை தீர்ப்பாணைக்கான மனு மற்றும் வாரிசு மனுவுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றால்¸ அவ்வாறு தாக்கல் செய்யப்பட்டிருந்தால் இந்த வழக்கு கோப்புடன்தான் இருந்திருக்கும் என்றும்¸ மேற்படி பி.சா.ஆ.1 ஆவணத்தில் கண்டுள்ள மேற்குறிப்பில் மேற்படி ஆவணம் தாக்கல் செய்யப்படவில்லை என்ற குறிப்பு இல்லாமல்¸ அழிக்கப்பட்டுவிட்டதாக கண்டுள்ளது என்றால் சரிதான் என்றும் சாட்சியம் அளித்துள்ளார்.

11) மேற்படி வாதிதரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்களையும்¸ வாதிதரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களையும் பரிசீலனை செய்து பார்க்கும்பொழுது¸ முதல் வாதியின் கணவரும்¸ 2¸3 வாதிகளின் தகப்பனாருமான குப்பு செட்டியார் என்பவர் அவரது சகோதரரான பழனிசாமி செட்டியாரின் மகனான பாலு என்பவர் பிரதிவாதி வங்கியில் பெற்ற கார் கடனுக்காக ஜாமீன்தாரராக இருக்க ஒப்புக்கொண்டு தனக்கு உரிமையான 4.4.1981 ஆம் தேதியிட்ட ஆவண எண்.399/1981 உடைய ஆவணத்தை கூடுதல் காப்பீடாக ஒப்படைத்து¸ மேற்படி ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்திட்டு 4.3.1983 ஆம் தேதி அடமான பிணையக்கடன் பெற்றுள்ளனர். ஆனால் மேற்படி இருவரும் கடனை சரியாக திருப்பி செலுத்தாததால் பிரதிவாதி வங்கி மேற்படி இருவர் மீதும் கடன் தொகையைக் கோரி கடலூர் சார்பு நீதிமன்றத்தில் மு.வ.16/1986 என்ற வழக்கை தாக்கல் செய்திருப்பது வா.சா.ஆ.10 மற்றும் வா.சா.ஆ.2 ஆன மேற்படி மு.வ.16/1986 வழக்குரையின் நகலை பரிசீலனை செய்யும்போது தெரியவருகிறது. பின்னிட்டு மேற்படி வழக்கில் பிரதிவாதிகளாகிய குப்பு செட்டியாரும்¸ பாலு என்பவரும் வழக்கு கோரியபடி தீர்ப்பளிக்க (Submitting to a decree) ஒப்புக்கொண்டதின்பேரில் 18.4.1986 ஆம் தேதி முதல்நிலை தீர்ப்பாணை பிறப்பிக்கப்பட்டிருப்பது வா.சா.ஆ.11 மற்றும் வா.சா.ஆ.12 ஆகிய தீர்ப்பாணை மற்றும் தீர்ப்புரையை பரிசீலனை செய்யும்போது தெரியவருகிறது. மேற்படி குப்பு செட்டியார் பெயருக்கு¸ அவரது சகோதரரான பழனிசாமி செட்டியார் 4.4.1981 ஆம் தேதி எழுதிக்கொடுத்த கிரயப்பத்திரத்தை மேற்படி பிரதிவாதி வங்கியில் பெற்ற கடனுக்கு கூடுதல் பொறுப்பாக குப்பு செட்டியார் ஒப்படைத்ததை இவ்வழக்கில் இருதரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர். பின்னிட்டு மேற்படி பாலு செட்டியார் மற்றும் குப்பு செட்டியார் இருவரும் இறந்துவிட்டனர். ஆனால் மேற்படி முதல்நிலை தீர்ப்பாணையை அனுசரித்து இறுதிநிலை தீர்ப்பாணைக்கான மனுவை பிரதிவாதி வங்கி தாக்கல் செய்யவில்லை. இதற்கு பிரதிவாதி தரப்பில்¸ மேற்படி தீர்ப்புக்குப்பிறகு மேற்படி பாலு செட்டியாரின் கணக்கில் ஒரு சிறுதொகை தவறுதலாக வரவு வைக்கப்பட்ட விபரம் தெரியவந்து¸ மேற்படி தாவாத்தொகையை அதிகமாக மாற்றி வழக்குரையை திருத்தம் செய்வதற்காக திருத்தல் மனு தாக்கல் செய்யப்பட்டு¸ ஆனால் நீதிமன்றம் அதற்கு அனுமதிக்காத காரணத்தால் உரிய காலத்தில் இறுதிநிலை தீர்ப்பாணைக்கான மனுவைத் தாக்கல் செய்ய இயலவில்லை எனக்கூறப்பட்டுள்ளது. பின்னிட்டு¸ மேற்படி குப்பு செட்டியாரின் வாரிசுகளையும்¸ பாலு செட்டியாரின் வாரிசுகளையும் தரப்பினர்களாக சேர்த்து பண்ருட்டி சார்பு நீதிமன்றத்தில் மேற்படி தீர்ப்பாணையை அனுசரித்து நிறைவேற்று மனு தாக்கல் செய்து¸ மேற்படி மனு சில குறைபாடுகளுக்காக திருப்பப்பட்டு¸ அது பைசல் கட்டுகளுடன் கலந்துவிட்டதாகவும்¸ அதனால் மேற்படி நிறைவேற்று மனுவை 308 நாட்கள் காலதாமதத்துடன் தாக்கல் செய்வதை மன்னிக்க வேண்டி உவிமுச பிரிவு.151-ன் கீழ் நிறைவேற்று விண்ணப்ப எண்.80/1999 ஐ தாக்கல் செய்திருப்பட்டிருப்பதும்¸ அம்மனுவில் முழு விசாரணைக்குப்பிறகு உத்தரவில் இறுதிநிலை தீர்ப்பாணைக்கான மனுவைத் தாக்கல் செய்யாமல்¸ நிறைவேற்று மனு தாக்கல் செய்திருப்பது நிலைக்கத்தக்கதல்ல என்றும்¸ மேலும் காலதாமதத்திற்கான சரியான காரணம் குறிப்பிடப்படவில்லை என்ற காரணத்திற்காகவும் மேற்படி நிறைவேற்று விண்ணப்பமானது 31.1.2000 ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதும் வா.சா.ஆ.3 மற்றும் வா.சா.ஆ.4 ஆவணங்களான மேற்படி நிறைவேற்று விண்ணப்பத்தின் உத்தரவு மற்றும் உத்தரவாணைகளை பரிசீலனை செய்யும்போது தெரியவருகிறது. மேலும் நிறைவேற்று மனுவானது கோப்பிற்கு எடுக்கப்படவில்லை என்பதும் தெரியவருகிறது. மேலும் பிரதிவாதி தரப்பில்¸ பாலு மற்றும் குப்புச்செட்டியாரின் வாரிசுதாரர்கள் விபரங்களும்¸ அவர்களின் முகவரிகளும் தெரியாததால் நிறைவேற்று மனுவானது தாமதமாக தாக்கல் செய்யப்பட்டதாக காரணம் கூறப்பட்டுள்ளது. அதன் பின்னர் 2001 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மேற்படி 4.4.1981 ஆம் தேதியிட்ட அசல் கிரய ஆவணத்தை திருப்பிக் கொடுக்கும்படி வாதிகள் வழக்கறிஞர் மூலம் அறிவிப்பு அனுப்பியிருப்பது வா.சா.ஆ.5 ஐ பரிசீலனை செய்யும்போது தெரியவருகிறது. மேற்படி நோட்டீசை பெற்றுக்கொண்ட பிரதிவாதி வங்கி பதில் அறிவிப்பு கொடு;க்கவில்லை என்பதும் தெரியவருகிறது. எனவே மீண்டும் 14.1.2003 ஆம் தேதி வாதிகள் மீண்டும் வழக்கறிஞர் மூலம் அறிவிப்பு கொடுத்திருப்பது வா.சா.ஆ.7 நோட்டீசை பரிசீலனை செய்யும்போது தெரியவருகிறது. அதனையும் பெற்றுக்கொண்ட பிரதிவாதி வங்கி பதிலறிவிப்பும் கொடுக்கவில்லை என்பது தெரியவருகிறது.

17) எழுவினா எண்.1 :
இவ்வழக்கில் பிரதிவாதி தரப்பில்¸ மேற்படி தீர்ப்பாணைத் தொகை¸ எதிர்கால வட்டி மற்றும் செலவுத்தொகை ஆகியவை பிரதிவாதி வங்கியால்¸ கடன் பெற்றவரிடமிருந்தோ அவரது வாரிசுகளிடமிருந்தோ வசூல் செய்யப்படாமல் நிலுவையில் இருந்துவருவதாகவும்¸ மேற்படி கடனுக்கு ஈடாகத்தான் 4.4.1981 தேதியிட்ட அசல் கிரயப்பத்திரத்தை தனது பற்றுரிமையாக நிறுத்தி வைத்துக்கொள்ள இந்திய ஒப்பந்தச்சட்டம் பிரிவு 171 ன் கீழ் பிரதிவாதி வங்கிக்கு உரிமை உண்டு என்று பிரதிவாதி தரப்பில் எதிர்வழக்குரை தாக்கல் செய்யப்பட்டு¸ அதுகுறித்து இவ்வழக்கெழுவினா வனையப்பட்டுள்ளது. இந்த எழுவினாவின்படி மேற்படி 4.4.81 தேதியிட்ட அசல் கிரயப்பத்திரத்தை கடனுக்கு ஈடாக பிரதிவாதி வங்கி வைத்துக்கொள்ள உரிமை உண்டா என்று பரிசீலனை செய்து பார்க்கும்போது¸ மேற்படி சட்டப்பிரிவின்படி வங்கியில் அடமானக்கடன் பெறும்போது பிணையமாக கொடுக்கும் ஆவணத்தை¸ மேற்படி கடனை பைசல் செய்யும்வரை பற்றுரிமையாக  வைத்துக்கொள்ள உரிமை உண்டு. ஆனால் மேற்படி சட்டப்பிரிவு இந்த வழக்கிற்கு பொருந்துமா என்று பார்க்கும்போது¸ வங்கியில் அடமானக்கடன் பெறும்போது பிணையமாக கொடுக்கும் ஆவணத்தை¸ மேற்படி கடனை பைசல் செய்யும்வரை பற்றுரிமையாக வைத்துக்கொள்ள உரிமை உண்டு என்றபோதிலும்¸ மேற்படி பிரதிவாதி வங்கியானது இந்த கடனை வசூல் செய்வதற்கான சட்டநடவடிக்கையாக கடலூர் சார்பு நீதிமன்றத்தில் மு.வ.16/1986 என்ற வழக்கைத் தாக்கல் செய்து அவ்வழக்கில் 18.4.1986 ஆம் தேதி வாதி¸ பிரதிவாதிகளின் சம்மதத்துடன் சமரச தீர்ப்பு (Submit to decree) பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மேற்படி வழக்கில் தாவாத்தொகையை பெறவேண்டி பிரதிவாதி வங்கியால் இறுதிநிலை தீர்ப்பாணைக்கான நடவடிக்கை எடுக்கப்படாமல் நிறைவேற்று மனு நடவடிக்கையே எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நிறைவேற்று மனுவானது கோப்பிற்கு எடுக்கப்படாமல்¸ நிறைவேற்று விண்ணப்பமானது தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு பிரதிவாதி தரப்பில்¸ பாலு மற்றும் குப்புச்செட்டியாரின் வாரிசுதாரர்கள் விபரங்களும்¸ அவர்களின் முகவரிகளும் தெரியாததால் நிறைவேற்று மனுவானது தாமதமாக தாக்கல் செய்யப்பட்டதாக காரணம் கூறப்பட்டுள்ளது. மேலும்¸ மேற்படி சங்கதிகள் பிரதிவாதி வங்கியால் ஒப்புக்கொள்ளப்பட்டுமிருக்கிறது. இந்நிலையில்¸ பிரதிவாதி வங்கி வாதிகளிடமிருந்து மேற்படி கடனை வசூல் செய்வதற்கான உரிய சட்ட நடவடிக்கையை எடுத்துவிட்டு¸ ஆனால் அவர்களுடைய தவறுகை காரணமாக மேற்படி கடன்தொகை வசூல் செய்யப்படாமல் விடப்பட்டுள்ளது. இந்நிலையில்¸ பிரதிவாதி வங்கியின் தவறுகையால் வசூல் செய்ய முடியாத கடனை பின்னிட்டு¸ வசூலாகும்வரை பொறுப்புறுதிக்காக வைக்கப்பட்ட ஆவணத்தை வைத்துக்கொள்ளலாம் என்று பிரதிவாதிதரப்பில் கூறப்பட்டுள்ளது. வங்கியில் கொடுக்கப்பட்ட கடன் வங்கியின் வழியாக வசூலாகும்வரை மேற்படி ஆவணத்தை வைத்துக்கொள்ளலாம் என்றால் மட்டுமே மேற்படி சட்டப்பிரிவு பொருந்தும். ஆனால் வங்கியால் வசூல் செய்யப்பட முடியாமல்¸ நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு¸ தீர்ப்பாணை பெற்று¸ ஆனால் இறுதிநிலை தீர்ப்பாணைக்கான மனுவைத் தாக்கல் செய்யாமல்¸ நிறைவேற்று மனுவைத் தாக்கல் செய்ய காலஅவகாசம் இருந்தும்¸ காலம் கடந்து நிறைவேற்று விண்ணப்பத்துடன் தாக்கல் செய்து¸ மேற்படி நிறைவேற்று விண்ணப்பமான தள்ளுபடி செய்யப்பட்டு¸ நிறைவேற்று மனுவானது கோப்பிற்கு எடுக்கப்படாத நிலையில் மேற்படி சட்டப்பிரிவு இவ்வழக்கிற்கு பொருந்தாது என்றே இந்நீதிமன்றம் கருதுகிறது. எனவே மேற்படி ஆவணத்தை பிரதிவாதி வங்கி பற்றுரிமையாக வைத்துக்கொள்ள உரிமையில்லை. ஒருவேளை இந்த பிரதிவாதி வங்கி¸ மேற்படி சட்டப்பிரிவின்படி மேற்படி ஆவணத்தை நிறுத்தி வைத்துக்கொள்ள உரிமையிருந்தபோதிலும்¸ பிரதிவாதி வங்கியால் ஏற்கனவே மேற்படி கடனை வசூல் செய்ய எல்லா சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு¸ காலாவதி தோஷத்தால் பாதிக்கப்பட்டு¸ இனிமேல் சட்டப்படி மேற்படி கடன்தொகையை வசூல் செய்ய முடியாத நிலையில்¸ மேற்கொண்டு எந்த வகையில் வசூல் செய்ய முடியும் என்பதையும் பிரதிவாதி தரப்பில் தெளிவுபடுத்தவில்லை. சட்டமுறைப்படி மேற்படி கடனை வசூல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டும்¸ காலாவதிதோஷத்தால் பாதிக்கப்பட்டு இனிமேல் மேற்படி கடனை எந்த சட்டமுறையிலும் வசூல் செய்யமுடியாத நிலையில்¸ மேற்படி சட்டப்பிரிவின்கீழ் மேற்படி ஆவணத்தை வைத்துக்கொள்ள பிரதிவாதி வங்கிக்கு எந்த உரிமையும் இல்லை. மேலும்¸ மேற்படி ஆவணம் மு.வ.16/1986 வழக்கில் வா.சா.ஆ.1 தாக்கல் செய்யப்பட்டதாகவும்¸ பின்னிட்டு மேற்படி ஆவணம் சட்டவிதிகளுக்குட்பட்டு மாண்புமிகு மாவட்ட நீதிமன்றத்தால் அழிக்கப்பட்டுவிட்டதாகவும் முன்னுக்குப்பின் முரணாக கட்சி எடுக்கப்பட்டுள்ளது. மேலும்¸ பிரதிவாதி தரப்பில் 2011(2) LW 320 என்ற முன்தீர்ப்பானது சுட்டிக்காட்டப்பட்டு வாதிடப்பட்டது. மேற்படி முன்தீர்ப்பின் பொருண்மைகள் இவ்வழக்கின் பொருண்மைகளுடன் பொருந்தவில்லை என்றே இந்நீதிமன்றம் கருதுகிறது. எனவே பிரதிவாதி வங்கி மேற்படி கடனைப்பெற நீதிமன்றத்தை நாடியபிறகு¸ சட்டமுறைப்படி மேற்படி கடனை திரும்பப்பெற தவறிவிட்டது என்றே இந்நீதிமன்றம் கருதுகிறது. எனவே சட்டமுறைப்படி இனி வாதிகளிடமிருந்து மேற்படி வங்கி கடனை வசூல் செய்ய இயலாத நிலையில்¸ அவர்களை வாய்மொழியாக கடனை பைசல் செய்ய நிர்பந்தம் செய்யவே மேற்படி அசல் ஆவணத்தை திருப்பிக்கொடுக்காமல் மேற்படி ஆவணம் நீதிமன்றத்தால் அழிக்கப்பட்டுவிட்டதாக கட்சியாடுகிறது என்று இந்நீதிமன்றம் கருதுகிறது. சட்டமுறைப்படி இனி மேற்படி கடனை வாதிகளிடமிருந்து வசூல் செய்யமுடியாது என்ற நிலையில் மேற்படி அசல் கிரய ஆவணத்தை வைத்திருக்கவும் மேற்படி பிரதிவாதி வங்கிக்கு உரிமையில்லை என்றே இந்நீதிமன்றம் முடிவுசெய்து மேற்கண்ட முன்தீர்ப்பானது இவ்வழக்கின் பொருண்மைகளுக்கு பொருந்திப்போகவில்லை என்றும் முடிவுசெய்து மேற்கண்ட வகையில் வழக்கெழுவினா எண்.1-க்கு வாதிகளுக்கு ஆதரவாக தீர்மானிக்கப்படுகிறது.

19) முடிவாக¸ இவ்வழக்கானது அனுமதிக்கப்பட்டு¸ 04.04.1981 ஆம் தேதியிட்ட டி.கே.கே.பழனிசாமி செட்டியார்¸ டி.கே.கே.குப்பு செட்டியார் என்பவருக்கு எழுதிக்கொடுத்த பதிவு செய்யப்பட்ட அசல் கிரய ஆவணத்தை பிரதிவாதி வங்கி மூன்றுமாத காலத்திற்குள்¸ வாதிகளுக்கு திருப்பிக் கொடுக்கவேண்டுமென செயலுறுத்துக்கட்டளை பிறப்பித்து வாதிகளுக்கு ஆதரவாக தீர்ப்பளித்து தீர்ப்பாணை பிறப்பிக்கப்படுகிறது. அவரவர்கள் செலவுத்தொகையை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டுமென உத்தரவிடப்படுகிறது.


No comments:

Post a Comment