மாற்றுமுறை ஆவணச்சட்டம் பிரிவு 139 | Section 139 of Negotiable Instruments Act


விரைவு  குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம்¸ (விரைவு நீதிமன்றம்)¸வேலூர்.
முன்னிலை. திரு.கோ.பிரபாகரன்¸ பி.ஏ.¸ எம்.எல்.¸
நீதித்துறை நடுவர்(பொறுப்பு)¸ விரைவு நீதிமன்றம்¸ வேலூர்.
2014- ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 06-ஆம் நாள் புதன்கிழமை¸
ஆண்டுப்பட்டிகை வழக்கு எண். 169/2012
எஸ்.பாண்டியன்        ...........................வாதி
                                         -- எதிராக --
என்.எஸ்.குமரன்         ............................எதிரி

வழக்கின் முக்கிய குறிப்புகள்:

1. இவ்வழக்கானது மாற்றுமுறை ஆவணச்சட்டம் பிரிவு 138-ன் கீழான குற்றத்திற்காக வாதியால் எதிரியின் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள தனியார் குற்றமுறையீட்டின் அடிப்படையில் எழுந்ததாகும்.

2. வாதி குற்றமுறையீட்டின் சுருக்கம் பின்வருமாறு
எதிரி குமரன் வாதியிடம் தமது மகளின் திருமணத்திற்காக 10.08.2012 தேதியில் ரு.1¸00¸000/- மூர்த்தி என்பவர் முன்னிலையில் கடனாக பெற்றுக்கொண்டு கடனை 1 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவதாக ஒப்புக்கொண்டு ஒரு மாதம் கழித்து மேற்படி கடனை திரும்ப கொடுக்கவில்லை. வாதிக்கு எதிரி கடனை திருப்பி செலுத்தும் பொருட்டு கடந்த 05.11.2012 தேதியிட்ட ரு.1¸00¸000/-க்கான சௌத் இந்தியன் வங்கி¸ வேலூர் கிளையின் எண்.473761 கொண்ட காசோலையை கொடுத்தார். எதிரி காசோலையை கொடுக்கும்போது தேவையான பணத்தை வங்கி கணக்கில் வரவு வைத்திருப்பதாகவும்¸ காசோலையை வசூலுக்கு தாக்கல் செய்தால் பணமாக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். எதிரி கூறிய வார்த்தையை நம்பி மேற்படி காசோலையை பணமாக்கும் பொருட்டு அதே தேதியில் வாதி தான் கணக்கு வைத்துள்ள ஐ.என்.ஜி.வைசியா வங்கி¸ வேலூர் கிளையில் காசோலையை வசூலுக்காக தாக்கல் செய்தார். மேற்படி காசோலை எதிரியின் வங்கி கணக்கில் போதிய பணம் இல்லை என்று 09.11.2012 அன்று திரும்ப வந்துவிட்டது. பின்னர் வாதி தனது வழக்கறிஞர் மூலம் 14.11.2012 தேதியில் எதிரிக்கு சட்ட அறிவிப்பு அனுப்பினார். அதை எதிரி கடந்த 15.11.2012 அன்று பெற்றுக்கொண்டு 27.11.2012-ல் பதில் அறிவிப்பு அனுப்பினார். ஆனால் இதுநாள் வரை எதிரி காசோலைகளுக்கான பணத்தை வாதிக்கு திருப்பி கொடுக்கவில்லை. தன்னுடைய வங்கி கணக்கில் போதிய பணம் இல்லை என்று தெரிந்து இருந்தும் எதிரியானவர் காசோலையை கொடுத்து மோசடி செய்துள்ளதால் எதிரிக்கு தக்க தண்டனை வழங்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

"கற்றறிந்த எதிரி தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ள முன்தீர்ப்பு நெறிகளை பார்க்கும்பொது 2011 ( 3) Crimes HC Page 128 Punjabrao Bhagwanro Ghuge Vs.Raj Kumar S/o.Kamal Kishore என்ற வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் வாதி கடன் கொடுத்ததற்கு எந்த வித ஆவணத்தையும் முன்னிலைப்படுத்தாத பட்சத்தில் எதிரி தன்னுடைய வழக்கை Preponderance of Probabilities என்ற நிலையில் நிரூபித்தாலே போதுமானது என்று கூறியுள்ளது. மேற்படி வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் சொன்ன சட்ட கொள்கையானது இவ்வழக்கின் பொருண்மைகளுக்கும் சூழ்நிலைக்கும் முற்றிலும் பொருந்தி வருவதாக இந்த நீதிமன்றம் முடிவு செய்கின்றது. மேற்படி வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் சொன்ன சட்ட கொள்கையானது 2007 (1) CTC Page 291 Lakshmi Srinivas Savings and Chit Funds Syndicate Pvt. Rep. By its present Foreman N.Sathiyam Vs. Bhojarajan என்ற வழக்கில் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றமும் சரியானது என வலியுறுத்தியுள்ளது. அதாவது மாற்றுமுறை ஆவணச்சட்டம் பிரிவு 139-ன் கீழான வாதிக்கு சாதகமான அனுமானம் எதிரியால் மறுக்ககூடியது என்றும்¸ அதை மறுத்து நிருபணம் செய்ய எதிரி Preponderance of Probabilities என்ற நிலையில் நிரூபித்தாலெ போதுமானது என கூறியுள்ளது. மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் மேலே கண்ட வழக்கில் சொன்ன சட்ட கொள்கையானது கையில் இருக்கும் வழக்கின் பொருண்மைகளுக்கும்¸ சூழ்நிலைகளுக்கும் முற்றிலும் பொருந்தி வருவதாக இந்நீதிமன்றம் முடிவு செய்கின்றது. 

26. எதிரி மாற்றுமுறை ஆவணச்சட்டம் பிரிவு 139-ன் கீழான அனுமானத்தை நிராகரிக்ககூடிய வகையில் பொதுமான வாய்மொழி சாட்சியம் மற்றும் ஆவண சாட்சியங்களை முன்னிலைப்படுத்தி தன்னுடைய வழக்கை நிரூபித்துள்ளார் என்று இந்நீதிமன்றம் முடிவு செய்கின்றது. முன்பின் தெரியாத நபருக்கு ரு.1¸00¸000/- கடனாக கொடுக்கும்போது எந்த ஆவணமும் எழுதி வாங்கவில்லை என்ற வாதியின் கூற்று நம்பும்படியாக இல்லை. மேலும் வாதி தன்னுடைய குறுக்குவிசாரணையின்போது பல இடங்களில் தன்னுடைய வழக்கிற்கு விரோதமாக சாட்சியம் அளித்துள்ளார். எதிரிக்கும் தனக்கும் நேரடியாக சம்மந்தம் இல்லை என்றும்¸ காசோலையில் உள்ள கையொப்பம் எதிரியின் உடையதா என்பது கூட தனக்கு தெரியாது என்றும்¸ பதில் அறிவிப்பை முன்னிலைப்படுத்தினால் வழக்கு பாதகமாகும் என்பதை வாதி ஒப்புக்கொண்டுள்ள காரணத்தினாலும்¸ வா.சா.3-ன் மூலமாக வழக்கு காசோலை 2008-ம் ஆண்டுக்குரியது என்று நிரூபிக்கப்பட்டுள்ள காரணத்தினாலும்¸ வா.சா.ஆ.1 காசோலையில் நிரப்பப்பட்டுள்ள விவரங்களை தெரியாது என வாதியே ஒப்புக்கொண்டுள்ளதாலும்¸ மூர்த்திக்கும் எதிரிக்கும் இருந்த வாடகை பிரச்சனை எதிரி தரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளதாலும்¸ வா.சா.ஆ.1 காசோலை எதிரியால் வாதிக்கு நேரடியாக தரப்பட்டது அல்ல என்றும்¸ மூர்த்தி என்பவர் தான் வாதியை பயன்படுத்தி இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார் என்று இந்நீதிமன்றம் முடிவு செய்கின்றது. எதிரியின் மீது வாதி தரப்பில் சாட்டப்பெற்றுள்ள மாற்றுமுறை ஆவணச்சட்டம் பிரிவு 138-ன் கீழான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை¸ எதிரி சந்தேகத்தின் பலனை பெற தகுதி உடையவர் என்று முடிவு செய்து அவ்வாறே பிரச்சனைக்கு தீர்வு காணப்படுகிறது.

27. இறுதியில் வாதி தாக்கல் செய்துள்ள இந்த தனியார் குற்றமுறையீடு தள்ளுபடி செய்யப்பட்டு எதிரியை மாற்றுமுறை ஆவணச்சட்டம் பிரிவு 138 ன் கீழ் குற்றவாளி அல்ல என முடிவு செய்து கு.வி.மு.ச பிரிவு 255(1)-ன் படி விடுதலை செய்து தீர்ப்பளிக்கப்படுகிறது.


No comments:

Post a Comment