தாவா சொத்தை பொறுத்து தனிப்பட்ட பட்டா வழங்க உத்தரவிட முடியாது | Section 14 of the Tamil Nadu Patta Passbook Act,1983

மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், ஜெயங்கொண்டம்
முன்னிலை:- திரு.பி.ஈஸ்வரமூர்த்தி, பி.எஸ்.சி, எல்.எல்.பி.,
மாவட்ட உரிமையியல் நீதிபதி, ஜெயங்கொண்டம்.
2013 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 10 ஆம் நாள் திங்கள்கிழமை
2044 திருவள்ளுவராண்டு, விஜய வருடம் வைகாசி திங்கள் 27ம் நாள்
அசல் வழக்கு எண். (O.S.) 113/2006
ராஜெந்திரி                                      .............   : வாதி
                                           -எதிர்-
1) நாராயணசாமி
2) வட்டாட்சியர், ஜெயங்கொண்டம்
3) தமிழ்நாடு அரசு பிரதிநிதியாக
மாவட்ட ஆட்சியர், பெரம்பலூர்  ...............    : பிரதிவாதிகள்

வழக்கின் முக்கிய குறிப்புகள்:
"1. தாவா சொத்தில் வாதியின் அனுபவத்தில் 1ம் பிரதிவாதியோ அவரது ஆட்களோ, ஏஜெண்டுகளோ எந்த வகையிலும் வாதியின் அனுபவத்தில் இடையூறு செய்யாமல் இருக்கும் பொருட்டு நிரந்தர உறுத்துக்கட்டளை பரிகாரம் வழங்கியும், சர்வே எண்.255-3ல் ஏற்கனவே 1ம் பிரதிவாதி பெயரில் உள்ள கூட்டுப்பட்டாவை நீக்கி, தாவா சொத்தினை பொறுத்தமட்டில் வாதிக்கு தனிப்பட்டா வழங்க கோரி 2,3 பிரதிவாதிகளுக்கு எதிராக செயலுறுத்துக்கட்டளை பரிகாரம் வழங்கியும், தாவா செலவு தொகை பிரதிவாதிகளிடம் இருந்து வாதிக்கு கிடைக்கவும் இந்த தாவா."

"2. வாதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குரையின் சுருக்கம் : -
தாவா சொத்து ஆதியில் பெரியசாமி என்பவருக்கு பாத்தியப்பட்டதாக இருந்தது. பெரியசாமியிடமிருந்து வாதி 02.03.2005ல் கிரயம் பெற்று அனுபவம் செய்து வருகிறார். தாவா சொத்து வாதியின் அனுபவத்தில் உள்ளது. தாவா சொத்திற்கு தென்புறம் உள்ள சொத்து வாதியின் மாமனார் நாகராஜன் கிரயம் பெற்ற சொத்தாகும். இரண்டு சொத்தும் சர்வே எண்.255-3 - 5.02 செண்டில் கட்டுப்பட்டது. சார்வே எண்.255-3ல் வடபுறம் உள்ள ஏ 2.51 செண்ட் சொத்துதான் தாவா சொத்தாகும். தென்புறம் உள்ள ஏ.2.51 செண்ட் வாதியின் மாமனார் நாகராஜன் கிரயம் பெற்ற சொத்தாகும். சர்வே எண்.255-3க்கு பட்டா வாதியின் மாமனார் பேரிலும், வாதி பேரிலும் கூட்டுப்பட்டா வர வேணடியது. தவறுதலாக 1ம் பிரதிவாதியான வாதிக்கு கிரயம் கொடுத்த பெரியசாமியின் மகனான நாராயணசாமி பேரிலும், வாதியின் மாமனார் நாகராஜன் பேரிலும் கூட்டாக பட்டா ஏற்பட்டுள்ளது. இது வாதிக்கு 28.11.2005 தான் வாதிக்கு தெரிய வந்தது. வாதி தனது கணவர் மூலம் 2ம் பிரதிவாதியிடம் பட்டா தவறுதலாக ஏற்பட்டதை தெரிவித்து பட்டா மாற்றம் கோரி மனு செய்தும் நாளது வரை பட்டா மாற்றம் செய்யப்படாமல் உள்ளது. தற்சமயம் 1ம் பிரதிவாதி தனது பேரில் கூட்;டாக பட்டா உள்ளதை தவறாக பயன்படுத்தி தாவா சொத்தில் சென்ற 3.3.2006 முதல் இடைஞ்சல் செய்ய முயற்சி செய்ததை வாதி மிகவும் சிரமப்பட்டு தடுத்துவிட்டார். ஆகவே மனுவில் கோரியுள்ளவாறு பரிகாரம் வழங்க வெண்டி பிரார்த்திக்கிறார்."

"10. வா.சா.1ன் சாட்சியத்தை பரிசீலிக்கும்போது, 2.3.2005ல் வா.சா.ஆ.1 ஆவணம் ஏற்பட்ட தேதியிலிருந்து தாவா சொத்தை தான் அடைந்து அனுபவித்து வருவதாக சொல்லப்பட்ட சங்கதியானது இந்த 1ம் பிரதிவாதி தரப்பில் குறுக்கு விசாரணை செய்யப்பட்டபோது 2.3.2005ம் தேதிய கிரயத்தை ஐயப்படுத்தும் விதமாக மட்டுமே குறுக்கு விசாரணை செய்யப்பட்டதே தவிர இந்த வாதி தாவா சொத்தில் அனுபவித்து வரவில்லை என்ற ஒரு யோசனை கூட முன்னிலை செய்யப்படவில்லை. எனவே, இந்த வழக்கில் 1ம் பிரதிவாதி தரப்பில் வாதியின் சொத்தின் உரிமை மூலத்தை பொறுத்து ஐயப்படுத்தி எதிர் வழக்குரை தாக்கல் செய்யப்பட்டதே தவிர இந்த 1ம் பிரதிவாதிக்கான தாவா சொத்து குறித்தான அனுபவம் மற்றும் உரிமை மூலத்தை பொறுத்து இந்த 1ம் பிரதிவாதி தரப்பில் எவ்விதமான சாட்சியமோ, சான்றாவணங்களையோ முன்னிலைப்படுத்தப்படவில்லை."

11. 2, 3 பிரதிவாதிகள் வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் என்பதால் அவர்கள் மெற்படி வாதியின் உரிமை மூலத்தை பொறுத்து அவர்களது எதிர் வழக்குரையில் எவ்விதமான ஐயப்பாடும் எழுப்பப்படவில்லை. எனவே, இந்த சங்கதிகளை குறித்து பார்க்கும்போது வாதி தரப்பிலான ஆவணம் மற்றும் சாட்சியங்களை பரிசீலிக்கும்போது தாவா சொத்தில் வாதி 2.3.2005ல் இருந்து அடைந்து அனுபவித்து வருவதாக தெரிய வருகிறது. இதுகுறித்து மாண்புமிகு உச்ச நீதிமன்ற முன் தீர்ப்பு
2009 - 2 L.W. 546 SUPREME COURT
Anathula Sudhakar v. P.Buchi Reddy (Dead) By LRs & Ors.
in Para 14
“If two persons claim to be in possession of a vacant site, one who is able to establish title thereto will be considered to be in possession, as against the person who is not able to establish title. This means that even though a suit relating to a vacant site is for a mere injunction and the issue is one of possession, it will be necessary to examine and determine the title as a prelude for deciding the de jure possession”.
என தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேற்கண்ட மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் முன் தீர்ப்பின் அடிப்படையில் பார்க்கும்போது இந்த வழக்கில் இந்த 1ம் பிரதிவாதிதான் தான் சொத்தை அனுபவித்து வருவதாகவும், அது தக்க சமயத்தில் நிருபிக்கப்படும் என்று எதிர்வழக்குரையில் சொல்லப்பட்டும் கூட அவரால் அவரின் தாவா சொத்து குறித்த அனுபவத்தை நிரூபிக்கும் வகையில் ஆவணமோ, சாட்சியமோ முன்னிலைப் படுத்தப்படவில்லை. 1ம் பிரதிவாதி கூட நீதிமன்றத்தில் ஆஜராகி, தான் தாவா சொத்தை அனுபவித்து வருவதாக வாய்மொழி சாட்சியம் கூட அளிக்கவில்லை. எனவே வாதி தரப்பிலான வாய்மொழி சாட்சியம் மற்றும் அவரது தரப்பில் முன்னிலைப்படுத்தப்பட்ட வா.சா.2, 3 சாட்சிகள் அனைவருமே 2.3.05ல் ஏற்பட்ட வா.சா.ஆ.1ஐ அனுசரித்து சாட்சியம் அளித்துள்ளார்கள். இந்த இரு சாட்சியுமே தாவா சொத்தில் யார் அனுபவத்தில் உள்ளார்கள் என்பது குறித்து சாட்சியம் எதையும் முன்னிலைப் படுத்தப்படவில்லை.

12. மேலும் வாதி தரப்பில் முன்னிலைப்படுத்தப்பட்ட வா.சா.4 சாரங்கராஜன் இந்த வாதியின் கணவரின் முதல் விசாரணை வாக்குமூலம் பத்தி 2ல் எனது மனைவி பெரியசாமியிடமிருந்து சரியான பிரதிபிரயோஜனத்திற்கு கிரயம் பெற்று அனுபவம் செய்து வருகிறார் என்று அளித்துள்ள சாட்சியத்தை 1ம் பிரதிவாதி தரப்பில் குறுக்கு விசாரணை செய்யயும்போதுகூட குறிப்பிட்டு மறுக்கப்படவில்லை. எனவே தாவா சொத்து குறித்தான வாதியின் அனுபவம் மேற்கண்ட சாட்சிய சான்றாவணங்கள் மூலம் தக்க முறையில் நிருபிக்கப்பட்டுள்ளதாக இந்நீதிமன்றம் கருதுகிறது. எனவே தாவா சொத்தை பொறுத்து வாதியின் அமைதியான சுவாதீனத்திலோ, அனுபவத்திலோ 1ம் பிரதிவாதியோ, அவரது ஆட்களோ எவ்விதமான இடையூறோ, இடைஞ்சலோ ஏற்படுத்த கூடாது என்று நிரந்தர உறுத்துக்கட்டளை பரிகாரம் வழங்கலாம் என்று இந்நீதிமன்றம் தீர்மானிக்கிறது. இவ்வாறாக எழுவினா 1 வாதிக்கு ஆதரவாக தீர்மானிக்கப்படுகிறது.

“வாதி சர்வே எண்.255-3ல் தனிப்பட்டா வழங்க கோரி 2, 3 பிரதிவாதிகளுக்கு எதிராக செயலுறுத்துக்கட்டளை பரிகாரம் பெற உரியவரா,
2.3.2005ல் இந்த வாதி ராஜேந்திரி பெயரில் ஒரு பெரியசாமி என்பவரிடமிருந்து புல எண்.255-3ல் 2 ஏக்கர் 51 செண்ட் கிரையம் பெற்றதாக வா.சா.ஆ.1ல் முன்னிலைப்படுத்தி வழக்குரை மற்றும் சாட்சிய சான்றாவணங்கள் முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளது. அதேப்போல் அந்த தாவா சொத்திற்கு தென்புறமாக இந்த வாதியின் மாமனார் ஒரு நாகராஜன் 23.04.1987 தெதியிட்ட வா.சா.ஆ.3 கிரைய ஆவணம் இதே புல எண்.255-3ல் 2 ஏக்கர் 51 செண்டுக்கு வாதி தரப்பில் முன் வைக்கப்பட்டுள்ளது. அனால் உண்மையிலேயே புல எண்.255-3 எவ்வளவு விஸ்தீரணம் அல்லது இவர்கள் குறிப்பிடுவதுபோல் இந்த வாதி மற்றும் ஒரு நாகராஜன் ஆகியோர்களுக்கு தலா 2 ஏக்கர் 51 செண்ட் தான் அந்த புல எண்ணில் உள்ளதா என்பது குறித்தான இந்த புல எண் 255-3ல் கிராம நிர்வாக புலப்பட நகலையோ, அ.பதிவெட்டு நகலையோ வாதி தரப்பில் முன்னிலைப்படுத்தப்படவில்லை. மேலும் இந்த புல எண்.255-3 ஆனது எப்பொழுது உட்பிரிவு செய்யப்பட்டது. அதன் மொத்த விஸ்தீரணம் என்ன என்பது பற்றி வாதி வழக்குரையில் சொல்லவும் இல்லை. முன்னிலைப் படுத்தவும் இல்லை. வா.சா.ஆ.2 ஆட்சேபணையுடன் குறியீடு செய்யப்பட்ட வாதியின் கணவர் சாரங்கராஜன் என்பவரால் 2ம் பிரதிவாதியிடம் பட்டா மாறுதலுக்காக கொடுக்கப்பட்ட மனுவின் நகல் மட்டுமே வாதி கோரும் இந்த பரிகாரத்தை பொறுத்து முழுமையான ஆவணமாக ஏற்றுக் கொள்ள இயலாது. இதுகுறித்து ஆராயும்போது மாண்புமிகு உயர் நீதிமன்ற முன் தீர்ப்பு
(2008) 1 MLJ 1012
District Collector, Tiruvannamalai and Others -Vs- Jayaseelan
in Para 4
The suit is clearly barred under Section 14 of the Tamil Nadu Patta Passbook Act,1983 which runs as follows:
“No suit shall lie against the Government or any officer of the Government in respect of a claim to have an entry made in any patta pass book that is maintained under this Act or to have any such entry omitted or amended. Provided that if any person is aggrieved as to any right of which is in possession, by an entry made int he patta pass book under this Act, he may institute a suit against any person denying or interested to deny his title to such right, for a declaration of his rights under Chapter VI of the Specific Relief Act, 1963 (Central Act 47 of 1963) and the entry in the patta passbook shall be amended in accordance with any such declaration”.
என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

14. எனவே, மேற்கண்ட மாண்புமிகு உயர்நீதிமன்ற முன்தீர்ப்பின்படி வா.சா.ஆ.2ல் 2,3 பிரதிவாதிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் அதுகுறித்து வருவாய்த்துறை அலுவலர்களிடம் மேல்நடவடிக்கை எடுக்க கோர வேண்டுமே தவிர 2, 3 பிரதிவாதிகளை வாதி கோரியவாறு தாவா சொத்தை பொறுத்து தனிப்பட்ட பட்டா வழங்க உத்தரவிட முடியாது. எனவே, தாவா சொத்து சம்மந்தப்பட்ட சர்வே எண்.255-3ஐ பொறுத்து மேற்கண்ட கூட்;டு பட்டாவில் இந்த 1ம் பிரதிவாதியின் பெயரும் உள்ளது என்று வாதி தரப்பில் ஒப்புக் கொண்டாலும் கூட அவரது பெயரை நீக்கவோ அல்லது வாதி பெயருக்கு தனிப்பட்ட பட்டா வழங்கவோ மேற்கண்ட மாண்புமிகு உயர்நீதிமன்ற முன்தீர்ப்பின்படி இந்த நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. எனவே, மனுவில் கோரிய செயலுத்துக்கட்டளை பரிகாரம் வாதிக்கு கிடைக்கத்தக்கது அல்ல என்று எழுவினா 2 வாதிக்கு எதிராக தீர்மானிக்கப்படுகிறது.

16. முடிவாக, தாவா பகுதியாக அனுமதிக்கப்படுகிறது. தாவா சொத்தை பொருத்து வாதியின் நிம்மதியான அனுபவத்தில் 1ம் பிரதிவாதியோ அவரது ஆட்களோ எவ்விதமான இடையூறும் செய்யக்கூடாது என்று நிரந்தர உறுத்துக்கட்டளை பரிகாரம் வழங்கியும், 2, 3 பிரதிவாதிகள் வாதி பெயருக்கு தனிப்பட்டா வழக்க உத்தரவிட வேண்டும் என்ற செயலுறுத்துக்கட்டளை பரிகாரம் வாதிக்கு கிடைக்கத்தக்கது அல்ல என்று தள்ளுபடி செய்தும் தீர்ப்பளிக்கப்படுகிறது. தாவா செலவு தொகை இல்லை.

No comments:

Post a Comment